Skip to main content

உரையாடல் தொடருகிறது....


அழகியசிங்கர்



அழகியசிங்கர், ஜெகன், மோஹினி மூவரும் சோகமாக அமர்ந்திருந்தார்கள்.  அவர்களுடைய சோகத்தை நீண்ட மௌனம்தான் உணர்த்திக் கொண்டிருந்தது. 
அழகியசிங்கர் :   வருத்தமாக இருக்கிறது.  
மோஹினி :  ஆமாம்.  நான் கூட எதிர்பார்க்கவில்லை.
அழகியசிங்கர் :  பிதாமகர் ஸ்தானத்தில் நமக்கு அறிவுரை கூறுபவரை இழந்து விட்டோம்.
ஜெகன் :  அவரைப் பார்க்கும்போது அவர் இறந்து விடுவார் என்பது தெரியவில்லை. 
மோஹினி :   78வயது வரை இருந்து விட்டார்.  78 என்பது சாதாரண வயதில்லை
அழகியசிங்கர் :  நான் ஞானக்கூத்தனைப் பார்க்கும்போதெல்லாம் உடல்நிலை சரியில்லாதவரைப் பார்ப்பதாக தோன்றாது.  அவ்வளவு உற்சாகமாக இருப்பார். 
ஜெகன் :  சமீப காலத்தில் அவர் டயட்டில் இருந்தார்.  குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவதில் ஒழுங்காக இருப்பார்.  யாருடன் பேசிக்கொண்டிருந்தாலும் இதில் உறுதியாக இருபபார்.  
அழகியசிங்கர் :  நான் பார்க்க வருகிறேன் என்று சொன்னால் அவர் யோஜனை செய்வார்.  மாம்பலத்திலிருந்து நான் வருகிறேன் என்பதால் சிலசமயம் வேண்டாம் என்று சொல்லி விடுவார்.
மோஹினி :   என்னைப் பொறுத்தவரை அவர் கவிதைகளை விட்டுச் சென்றிருக்கிறார்.  அவர் கவிதைகள் உலகத் தரத்தில் ஆனவை. 
ஜெகன் :  அவர் கவிதைகள் படிப்பவரை யோசிக்க வைக்கும்.
அழகியசிங்கர் :  இன்று கவிதைகள் எழுதும் பெரும்பாலோர் ஞானக்கூத்தனை டச் செய்துவிட்டுத்தான் வந்திருக்க வேண்டும்.  
மோஹினி :  அவருக்கு உரிய கவனம் தரவில்லை என்பது என் வருத்தம். 
அழகியசிங்கர் :  வாசகர் கவனத்தில் அவர் இருக்கிறார்.  அவர் எழுதி விட்டுச் சென்ற கவிதைகள் அவருடைய பெயரை காலம் காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கும்.  
ஜெகன் :  எப்போது நீங்கள் அவரை முதன் முதலாக சந்தித்தீர்கள்.  
அழகியசிங்கர் :  நான் சந்தித்து நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இருக்கும்.  நான் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தாலும், படிப்பதிலும், எழுத்தாளர்களைச் சந்திப்பதிலும் என் உற்சாகம் அளவு கடந்து இருக்கும்.
மோஹினி :   நவீன விருட்சம் என்ற பத்திரிகையை நீங்கள் 88ல் தான் கொண்டு வந்தீர்கள்..
ஜெகன் :  ஆத்மாநாமின் ழ மாதிரிதான் அதைக் கொண்டு வர வேண்டுமென்று கொண்டு வந்தீர்களா...
மோஹினி :  ழ மாதிரி உங்கள் முதல் இதழில் கவிதைகள் மட்டும் இருக்கும்.  வேற எதுவும் இருக்காது.
அழகியசிங்கர் :  ஆமாம். கவிதைகள் மட்டும் இருக்கும்.  ஆத்மாநாமிற்குப் பிறகு ழ பத்திரிகை ஞானக்கூத்தன் ஆசிரியப் பொறுப்பில் திரும்பவும் வந்தது.  அந்தப் பத்திரிகையைத் திரும்பவும் கொண்டு வர நானும் எனனால் முடித்த உதவியைச்  செய்தேன்.
மோஹினி :  ஆனால் சில இதழ்களுக்குப் பின் அவர்களால் தொடர்ந்து கொண்டு வர முடியவில்லை 
ஜெகன் :  அதற்குக் காரணம் என்னவாக இருக்கும்..
அழகியசிங்கர் : அலுப்பு.  திரும்பத் திரும்ப இதுவேவா என்று அதில் ஈடுபட்டவர்களுக்குத் தோன்றிகொண்டே இருக்கும்.  முதலில் அவர்களுக்கு அந்தப் பத்திரிகை முதன்மையாக தோன்றியது.  ஆத்மாநாமின் தறகொலை அவர்களை வேறு மாதிரி யோசிக்க வைத்திருக்கும். அவர்களுக்கு லௌகீக தாக்கம் அதிகமாக இருந்தது.    ஆனால் ஞானக்கூத்தன் வேறுவிதமாக இருந்தார்.  அவர் முழுக்க முழுக்க கவிதைகளைப் பற்றிய சிந்தித்தார்.  கவிதை எழுதுபவர்களை எழுதத் தூண்டினார்.  ழ பத்திரிகை வராத சமயத்தில் நான் கேட்டேன்.  நான் முயற்சி செய்யட்டுமா என்று.  ஞானக்கூத்தன் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ü நீங்க வேறப் பத்திரிகை ஆரம்பித்து விடுங்கள்,ý என்றார்.  விருட்சம் பத்திரிகை அப்படித்தான் வந்தது 
ஜெகன் :     உண்மைதான்.  
அழகியசிங்கர் :  . அந்தச் சமயத்தில் ஞானக்கூத்தன் ஒவ்வொரு இதழிலிலும் ஒரு கவிதை பிரசுரிக்கக் கொடுப்பார்.  சில இதழ்களுக்குப் பிறகு கவிதை என்றில்லாமல் வேறு விதமாக பத்திரிகை மாறியது.  கதைகள் எல்லாம் வரத் தொடங்கின.  பக்கம் அதிகமாக வந்தது.  நான் ஒருவனே எல்லாச் செலவுகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டடேன். அட்டை என்ற ஒன்று இருந்தது.  
ஜெகன் :   இப்படித்தான் விருட்சம் 99வது இதழ் வரை வந்துவிட்டது. 
அழகியசிங்கர் :  1988ல் இதன் முக்கியத்துவம் பெரிதாக இருந்தது.  இப்போது சிறுபத்திரிகையின் முகம் மாறிவிட்டது.  இருந்தாலும் ஒரு தனி மனிதனின் குரலாகத்தான் இது இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.  வெறும் பத்திரிகை மட்டுமல்லாமல் புத்தகங்களும் கொண்டு வந்தேன்.  அப்போது ஞானக்கூத்தனின் கவிதைகள் சிறு சிறு புத்தகங்களாக வந்திருந்தன.  ஒரு முழுத் தொகுதி வேண்டுமென்று ஒரு முயற்சி செய்தேன்.  ஞானக்கூத்தனின் பல கவிதைகளை தீபம் என்ற பத்திரிகைகளிலிருந்து தனிப்பட்ட முறையில் ந பா புதல்வரின் வீட்டிற்குச் சென்று தீபம் பத்திரிகைகளைப் பார்த்து ஒரு தாளில் எழுதி சேர்த்தேன்.  இன்னும் பல பத்திரிகைகளிலிருந்து விட்டுப் போன கவிதைகளையும் சேர்த்தேன். ஞானக்கூத்தன் கவிதைகளின் மீதான ஈடுபாடால் இதையெல்லாம் செய்தேன்.புத்தகம் கொண்டு வந்தேனே தவிர புத்தகம் விற்கும் வழிமுறை சரியாக தெரியாது.  அத் தொகுதியின் பெயர் ஞானக்கூத்தன் கவிதைகள். மொத்ம் 196 கவிதைகள்.  ஞானக்கூத்தன் வரைந்த ஓவியங்களுடன் அப்புத்தகம் வந்தது.  
மோஹினி :  ஞானக்கூத்தன் கவிதைகள் புத்தகம் வரும்போது முப்பெறும் விழா நடத்தினீர்கள் போலிருக்கிறது.
அழகியசிங்கர் :    ஆமாம்.  ஆதிமூலம், சா கந்தசாமிக்கும் சேர்த்து நடத்தினோம்.  
ஜெகன் :    பென்சில் படங்கள் என்ற புத்தகம் கூட கொண்டு வந்தீர்கள்..
அழகியசிங்கர் :   நான் ஒருவனே கணினியில் அடித்துக் கொண்டு வந்த புத்தகம்.  கிட்டத்தட்ட 87 கவிதைகள் கொண்ட புத்தகம்.  அதன்பின் கவிதைக்காக என்ற கட்டுரைத் தொகுதியும் கொண்டு வந்தேன்.  .இதோ இப்போது இன்னொரு கவிதைத் தொகுதி ஒன்று கொண்டு வர உள்ளேன். அதெல்லாம் இருக்கட்டும் எனக்கு அவர் கவிதைகள் மீது உள்ள ஈர்ப்பு  அலாதியானது.  அவர் உலகம் முழுவதும் போற்றப்பட வேண்டிய கவிஞர்.  இது குறித்து ஒரு கட்டுரை எழுத உத்தேசம். இத் தருணத்தில் அவர் உயிரோடு இல்லை என்பது வருத்தமாக உள்ளது. அவர் நினைவாக ஒரு  மலர் கொண்டுவர நினைத்துள்ளேன்.  

(மூவரும் ஞானக்கூத்தனுக்காக மௌன அஞ்சலி செலுத்துகிறார்கள்.)
                                                                            (இன்னும் வரும்...)

Comments