எதையாவது சொல்லட்டுமா....81
அழகியசிங்கர்
நான் மாம்பல வாசி. மாம்பலத்தில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குமேல் வசித்து வருகிறேன். நான் பார்த்த மாம்பலம் வேறு. இப்போது பார்க்கும் மாம்பலம் வேறு. நான் வங்கியில் சேர்ந்த புதியதில் மாம்பலத்தில் குடியிருந்த என் அலுவலகப் பெண்மணிக்குத் திருமணம். அந்தத் திருமணத்தை மாம்பலத்தில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தப் பெண் எப்பவாவது என் வீட்டிற்கு வந்து அலுவலகம் போக முடியாவிட்டால் வரமுடியவில்லை என்று கடிதம் எழுதி அலுவலகத்தில் கொடுக்கும்படி சொல்லிவிட்டுப் போவார்.
எங்களைப்போல அவர்களும் சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவர்கள். அந்தப் பெண்ணின் அம்மா ஒரு பள்ளிக்கூடத்தில் டீச்சராக பணிபுரிந்து கொண்டிருந்தார். பெண்ணின் திருமணத்தை ஒட்டி பணம் அதிகமாக தேவைப்பட்டது அவர்களுக்கு. ஒருமுறை எதிர்பாராதவிதமாய் அந்தப் பெண் வீட்டிற்கு வரும்படி கேட்டுக்கொண்டார். ஒரு காலை நேரத்தில் நானும் அவர்கள் வீட்டிற்குச் சென்றேன். என்னைக் கூப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தவர்கள். எதிர்பாராதவிதமாய் அந்தப் பெண்ணின் அம்மா என்னிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். "பெண் திருமணத்தை ஒட்டி கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது. நீங்கள் சொûஸட்டியில் உறுப்பினராகச் சேர்ந்து என் பெண் கடன் வாங்க சாட்சி கையெழுத்துப் போட முடியுமா? கூடவே நீங்களும் கடன் வாங்கி என் பெண் திருமணத்திற்கு உதவி செய்யுங்கள்," என்று கேட்டுக் கொண்டார்.
"யோசித்துச் சொல்கிறேன்," என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டேன்.
"யோசித்துச் சொல்கிறேன்," என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டேன்.
பின் யோசித்தப் பிறகு சொûஸட்டியில் கடன் வாங்கி கொடுக்க முடியாது என்று தோன்றியது. மேலும் கடன் கொடுக்க என்னிடம் பணமும் இல்லை. சொற்ப சம்பளம். சம்பளம் வாங்குவதெல்லாம் கொஞ்சம் கூட மிச்சம் இருக்காது. ஒருமுறை மின்சார வண்டியில் வந்து கொண்டிருந்தபோது, கால் ஊனமான பெண்மணி பிச்சைக் கேட்டபடி வந்து கொண்டிருந்தாள். போர்ட் டிரஸ்டில் பணிபுரிந்த ஊழியர்கள் அங்கு இருந்தார்கள். அந்தக் கும்பலில் ஒருவர் சொன்னது இன்னும்கூட ஞாபகத்தில் இருக்கிறது. பிச்சைக்காரியைப் பார்த்து அவர் சொன்னார். "உண்மையில் உன்னிடம்தான் பணம் இருக்கிறது. நாங்க சம்பளம் வாங்கியவுடன் கடனுக்கு எங்கள் சம்பளம் போய்விடுகிறது. நாங்களும் பிச்சைக்காரர்களாக மாறி விடுகிறோம். உன்னைவிட மோசமானது எங்கள் நிலை. நீயாவது வெளிப்படையாக எல்லோரிடமும் பிச்சைக் கேட்கிறாய். நாங்கள் யாரிடம் போய்க் கேட்பது," என்றார். அதைக் கேட்டு எனக்கு சிரிப்பு தாங்கமுடியவில்லை.
அலுவலகப் பெண்மணி என்னை தொந்தரவு செய்து கொண்டிருந்தார். நான் அதுமாதிரி கடன் வாங்கி கொடுக்க முடியாது என்று தயக்கத்துடன் சொல்லிவிட்டேன். இந்த நிகழ்ச்சி நடந்தபிறகு அந்தப் பெண் என்னை அலுவலகத்தில் பார்த்தாலும் கண்டுகொள்ளவில்லை. அந்தப் பெண்ணிற்கு என் மீது படுகோபம். சில மாதங்கள் கழித்து அந்தப் பெண் திருமண அழைப்பிதழை எல்லோருக்கும் கொடுப்பதுபோல் என்னிடம் கொடுத்தார். அந்தத் திருமணம் மாம்பலத்தில் ஒரு கல்யாண மண்டபத்தில். நான் போகலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.
பணம் கொடுக்கமுடியவில்லை என்று சொன்னவுடன் அந்தப் பெண் நடந்துகொண்ட விதம் எனக்கு சற்று வருத்தமாக இருந்தது. அந்தப் பெண்ணின் திருமண நாளன்று திடீரென்று நான் திருமணத்திற்குப் போவது என்று முடிவு செய்தேன். உடனே வண்டியை எடுத்துக்கொண்டு மிதிலாபுரி திருமணம் மண்டபத்திற்குச் சென்றேன். அப்போது மாம்பலத்தில் தெரிந்த திருமணம் மண்டபம் அதுதான்.
முகூர்த்த நேரத்திற்கு நான் திருமண மண்டபத்தை அடைந்தேன்.கல்யாண மண்டபத்தில் இருந்த சிலர் என்னை வரவேற்று உடனடியாக சாப்பாடு கூடத்திற்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அலுவலகத்திற்குப் போவதற்கு 1 மணிநேரம் முன் அனுமதி கேட்டிருந்ததால், நானும் சாப்பாடு கூடத்திற்குச் சென்றேன். டிபன் சாப்பிட்டு விட்டு கீழே வந்தேன். வந்தவர்கள் என்னை கல்யாணம் நடக்குமிடத்திற்கு அழைத்துக்கொண்டு போனார்கள். எனக்கு ஒரே அதிர்ச்சி. அங்கே மாலையுடன் பொக்கை வாயுடன் சிரித்துக் கொண்டிருந்தவர்கள் இரண்டு வயதான தம்பதியர்கள். எப்படி 80வது வயது திருமணத்திற்கு வந்தேன் என்பது புரியவில்லை.
நான் கல்யாணமண்டபத்திற்கு மாறி வந்துவிட்டேன். எனக்கு கூச்சமாகப் போய்விட்டது. பின் சமாளித்தபடி வெளியே வந்தேன். அங்கிருந்தவர்களைப் பார்த்து ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்துவிட்டு, நாற்காலி ஒன்றில் உட்காருவதுபோல் உட்கார்ந்தேன். பின் நழுவி வெளியே ஓடி வந்துவிட்டேன். என் செய்கை எனக்கே வெட்கத்தைத் தந்தது. பின் பத்திரிகையை எடுத்துப்பார்த்தபோதுதான் தெரிந்தது. மிதிலாபுரி கல்யாண மண்டபம் இல்லை என்பது. அதன்பின் பக்கத்தில் இருந்த இன்னொரு தெருவில் அந்தப் பெண்ணின் திருமணம். உடனே அங்கு சென்றேன். ஒரே கூட்டம். அந்தக் கூட்டத்தில் அந்தப் பெண் நான் வந்ததைக் கூட கவனிக்கவில்லை. நான் அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டதால் அங்கிருந்து கிளம்பி விட்டேன்.
ஏன் இப்படி நடந்தது என்று யோசித்தபோது, அந்தப் பெண் கடன் கேட்டது. நான் கொடுக்காமல் போனது. பின் அந்தப் பெண் என்னை அலட்சியப்படுத்தியது எல்லாம் ஞாபகத்திற்கு வந்தது. மிகச் சாதாரண நிகழ்ச்சிதான் இது. ஆனால் மனம் அளவில் ஏன் சலனமடைகிறோம் என்பது பற்றி நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.
சிலசமயம் நான் மாம்பலம் ரயில்வே நிலைய படிக்கட்டுலிருந்து ரங்கநாதன் தெருவைப் பார்ப்பேன். தாங்க முடியாத கூட்டம் போய்க்கொண்டிருக்கும். யோசித்துப்பார்ப்பேன் இத்தனைப் பேர்கள் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் எத்தனைப் பேர்களை நமக்குத் தெரியும் என்று. நாம் சந்திப்பது என்பது மிகக் குறைவான நபர்கள். நண்பர்கள் ஆனாலும் சரி, உறவினர்கள் ஆனாலும் சரி. நாம் நம் உறவுமுறைகளை சரியாகப் பேணி காக்கிறோமா என்பது பெரிய கேள்விக்குறி.
அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடாவில் பையன் வீட்டில் தங்கியிருந்தேன். காலை நேரத்தில் நடை பயிற்சி செய்யப்போவேன். பெரும்பாலும் அமெரிக்கர்கள் யாரையும் பார்க்க முடியாது. ஆனால் ஒருசிலர் என் கண்ணில் தட்டுப்பட்டால், குட் மார்னிங் என்று சொல்லாமல் இருக்க மாட்டார்கள். எனக்கு இது அச்சரியமாக இருந்தது. முன்னே பின்னே பேசியது கூட கிடையாது. பார்த்தாலே போதும். புன்சிரிப்புடன் வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.
ஆனால் இங்கோ வேறு மாதிரி. தெரிந்தவர்கள் நேருக்குநேர் போய்க்கொண்டிருந்தால்போதும் வேண்டுமென்றே பார்க்காமல் போய்விடுகிறோம். முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு போவோம். அல்லது வேறு எங்கோ பார்த்துக்கொண்டு போவோம்.
தலைமை அலுவலகத்தில் நான் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, ஒரு கட்டடத்திலிருந்து ஒரு கட்டடத்திற்கு தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்க வேண்டியிருக்கும். நான் தெருவில் அப்படி நடந்து போய்க் கொண்டிருக்கும்போது, எதிரில் என் அலுவலக உயர் அதிகாரி நடந்து வந்து கொண்டிருப்பார். நான் அவரை நிமிர்ந்து பார்ப்பேன். அவரோ என்னைப் பார்க்காதவர் மாதிரி தலைகுனிந்து போய்க் கொண்டிருப்பார். ஏன்? அவரைப் பார்த்துதான் நான் தலை குனிந்தபடி போக வேண்டும். இது உல்டாவாக இருக்கிறது.
எனக்கு இன்னும் யாருடனும் எப்படிப் பழக வேண்டுமென்பது தெரியவில்லை போலிருக்கிறது.
(பிப்ரவரி 2013 அம்ருதா மாத இதழில் பிரசுரமான கட்டுரை)
Comments