விருது
முதுமையைத் தொட்டபோது
ஒட்டிக் கொண்டன
தனிமையும் தளர்வும்.
இளமையில் துணையிருந்த
திறமைகளும் திடமும்
விடை பெற்றிருந்த வேளையில்,
காலம் கடந்து
அறிவிப்பான விருதை
ஏற்க மறுத்தப் பெருமிதத்துடன்
அவனது இரு கைகளும்
இறுகப் பற்றிக் கொள்கின்றன
மேசை இழுப்பறையில்
பத்திரமாய்ப் பாதுகாத்து வந்த
பேனாவையும் தூரிகையையும்.
எல்லோரும் கொண்டாடிய
எத்தனையோ கவிதைகளுக்கான
மையைச் சுரந்திருக்கிறது அந்தப் பேனா.
புருவங்களை உயர வைத்த
அழகோவியங்கள் பலவற்றைத்
தீட்டியிருக்கிறது அந்தத் தூரிகை.
மூதாதையர் கடிகாரத்தின்
பெண்டுலச் சத்தம் பின்னணி இசைக்கச்
சொட்டுச் சொட்டாகக் கசிகிறது
பேனாவிலிருந்து மை.
பெருகிப் பிரவாகிக்கிறது சமுத்திரமாக.
மிதந்த பேனாவின் மேல் அமர்ந்து
வேகமாகப் பயணிக்கிறது மனம்
படைப்பாற்றலில் உச்சத்திலிருந்தக்
கணம் நோக்கி.
சிறிய பெரிய மீன்கள்
யானையை விடப் பெரிய
சுறாக்கள் திமிங்கலங்கள்
ஆயிரம் வயதான ஆமைகள்
ஆரவாரத்துடன் பின் தொடருகின்றன.
தோலின் சுருக்கங்களைத் தாண்டிப்
பிரகாசித்த முகத்திலிருந்து
வெளிப்பட்ட வெளிச்சம்
இன்னொரு கையிலிருந்த
தூரிகையைப் பிடுங்கி அவசரமாய்த்
தீட்டத் தொடங்குகிறது - மன
நிறைவு தந்த நினைவுகளின்
களிப்பையேக்
கலைஞனுக்கான விருதாக.
***
- ராமலக்ஷ்மி
Comments