அசோகமித்திரன்
ஒவ்வொரு முறையும் எழுத உட்கார்ந்தவுடன் என்ன ezஎழுதுவது என்று என்னையே கேட்டுக்கொள்வேன். குழப்பமாகத்தான் இருக்கும். பல முறை முழுத்தாள்கள் எழுதி எழுதியதை ஒதுக்கி வைத்திருக்கிறேன்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் அடிக்கடி சந்திக்க நேர்ந்த ஒரு சாமியாருக்குப் புனைகதை மீது மிகுந்த ஆர்வம். நான் படிக்கவேண்டும் என்று அவரே நூலகங்களுக்குச் சென்று ஸ்டீஃபன் ஸ்வெய்க், காஃப்கா ஆகியோருடைய நூல்களை வாங்கி வந்து என்னைப் படிக்க வைத்தார். எழுத யோசனை ஏதாவது தோன்றியவுடனே அதைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பார். காலம் காலமாக எழுத்தாளர்கள் பல உத்திகள் கையாண்டிருக்கிறார்கள். அதில் குறிப்புகள் எழுதி வைப்பதும் ஒன்று.நான் அன்றிலிருந்து கையில் கிடைத்த தாள்களிலெல்லாம் குறிப்புகள் எழுதி வைக்கத் தொடங்கினேன். ஆயிரம் குறிப்புகளுக்கு மேல் இருக்கும். எவ்வள்வு பேருந்துச் சீட்டுகள் பின்னால் எழுதியிருப்பேன்! பல குறிப்புகளும் தாள்களும் மக்கிக்கூடப் போய்விட்டன.இதில் யதார்த்தம் என்னவெனில் ஒன்றிரு முறைதான் குறிப்புகள் பயன்பட்டிருக்கின்றன.ஆனால் நான் குறிப்புகள் எழுதுவதை விடவில்லை.
குறிப்புகள் கட்டை நான் எங்கெல்லாமோ தூக்கிச் சென்றிருக்கிறேன். சொந்த ஊரில் முடியாவிட்டால் வேறிடத்தில் பயன்படுமோ என்ற எண்ணத்தில்தான். பயனில்லை. ஸாமர்சட் மாம் இரு முறை அவர் எழுதப் போவதை நிறுத்துவதாக அறிவித்திருந்தார். அவருடைய ‘ரைட்டர்ஸ் ஹாண்ட்புக்’ அப்படித்தான் உருவாகியிருக்கக்கூடும்.
தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவனுக்கு இதெல்லாம் பெரிய விஷயங்கள். பெரிய பிரச்சினைகள். ஏன் குறிப்புகளை மீண்டும் படிக்கத் தோன்றுவதில்லை? பழைய காகிதங்கள் மூச்சுத் திணற வைக்கின்றன் என்பதாலோ?. ஆனால் பழைய புத்தகங்கள், பத்திரிகை இதழ்களைப் படிக்காமல் இருக்க முடியவில்லையே.ஆதலால் மூச்சுத் திணறல் முழுக் காரணமில்லை.
ஜூலை மாதப் பிறப்பு என்னைப் படபடக்க வைக்கும். எனக்கு மிகவும் ஆப்தமானவர்கள் தீபாவளி மலர்களுக்குக் கதை எழுதித் தரச் சொல்வார்கள். முதலில் முடியாது என்று சொல்லி விடுவேன். ஆனால் அவர்கள்ள் இரண்டாம் முறை, மூன்றாம் முறை கேட்கும்போது முயற்சி செய்கிறேன் என்று சொல்வேன். குறித்த தேதிக்கு ஒரு நாள் முன்னதாகவே கொடுத்துவிடுவேன். என்னைச் சில பத்திரிகைகள் பயன்படுத்திக்கொள்வதையும் அறிவேன். காரணம், அவர்கள் எழுதும் பத்தி காட்டிக் கொடுத்து விடும். அவர்கள் போற்றும் நபர்கள் பட்டியலில் நான் இருக்க மாட்டேன்!நா.பார்த்தசாரதியிடமிருந்து இரு விஷயங்கள் கற்றுக் கொண்டேன். அச்சுக்குக் கொடுக்கும் கையெழுத்துப் பிரதி தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும். யாரவது படைப்பு வேண்டும் என்று கேட்டால் பத்து வரிகளாவது எழுதித் தந்து விட வேண்டும்.
உரைநடை வரி வரியாக எழுத வேண்டும்.நாளெல்லாம் எழுதினாலும் இரு பக்கங்கள் தேறாது. இதை ஒருமுறை சொன்னதற்கு ஒருவர் பொது மேடையில் கோபித்துக் கொண்டார். அன்று அவர் கவிதைகள் எழுதி வந்தார். இப்போது அப்படிச் செய்யமாட்டார். அவருடைய கதைகள், நாவல்கள்தான் அவருக்குப் பேரும் புகழும் கொண்டு வந்திருக்கின்றன.
முன்பொரு முறை ‘நான் எப்படி எழுதினேன்’ என்பது போன்றொரு தலப்பில் வரிசையாகக் கட்டுரைகள் வந்தன. எனக்குத் தெரிந்து ‘தீபம்’ பத்திரிகையும் ’நானும் என் எழுத்தும்’ என்ற தலைப்பில் கட்டுரைகள் கேட்டு வாங்கி வெளியிட்டது.எனக்கு ஒன்று தெளிவாகியது. ஒவ்வொரு எழுத்தாளனும் அவனாகவே ஒரு பாதை வகுத்துக் கொள்ள வேண்டும். ஒருவருக்குப் பயன்பட்ட வழி அல்லது முறை இன்னொருவனுக்குப் பயன்படும் என்று உறுதி கூற முடியாது.
Oஒரளவு எழுதப்பழகியவர்களுக்கு அவர்கள் எழுத வேண்டியதைக் கடைசி நேரம் வரை ஒத்திப்போடுவதுthaanதான் வழக்கம். ஆரம்ப எழுத்தாளர்கள் ஊருக்கு முன் அவர்கள் எழுதியதைக் கொடுத்து விடுவார்கள். மாதப்பத்திரிகைகளில் கூடத் தொடர் கதை எழுதுபவர்கள் கடைசி நிமிடம் வரை கையெழுத்துப் பிரதியைத் தர மாட்டார்கள்.அந்த அத்தியாயத்துக்காக நான்கு பக்கங்கள் ஒதுக்கி வைத்திருந்தால் அத்தியாயம் மூன்று பக்கங்களில் அடங்கிவிடும். அல்லது அரைப் பக்கம் அதிகமாக இருக்கும்.எனக்குத் தெரிந்து ஓர் எழுத்தாளர் ஒவ்வொரு தாளாக எழுதித்தருவார். எழுதியதை இன்னொரு முறை படித்துத் திருத்த மாட்டார். எனக்கு மிகவும் கவலையாக இருக்கும். ஆனால் அவருடைய தொடர்கதைகளில் பொருள் முரண்பாடு இருக்காது. ஆனால் படைப்பின் வடிவம் முதல்தரம் என்று கூறமுடியாது.
எழுதுவதை அவசரம் அவசரமாகச் செய்யக்கூடாது என்றுதான் அடிக்கடி நினைத்துக்கொள்வது. ஆனால் அதுவும் பிரசவ வைராக்யம், மயான வைராக்கியம் போல அடுத்த முறை வரும்போது காணாமல் போய்விடும்.
Comments