Skip to main content
பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு
 
 
அழகியசிங்கர்

10.
 
 
நான் இங்கு வந்தபிறகு அழகியசிங்கர் என்னைப் பற்றி சில கவிதைகள் எழுதினார்.  ஒரு கவிதை பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு என்ற கவிதை.  அந்தக் கவிதை எழுதும்போது நான் என் பெண்ணிற்குத் திருமணம் ஏற்பாடு செய்திருந்தேன்.  அந்தத் தருணத்தில் நான் சென்னையில் இல்லாமல், மயிலாடுதுறையில் அல்லல்பட்டுக் கொண்டிருந்தேன்.  என் பெண் அப்போது சொன்ன ஒரு விஷயம் எனக்கு உறுத்தலாக இருந்தது. 

''ஏன்ப்பா..என் கல்யாணம் நடக்கும்போதுதான் நீ அங்கே போகவேண்டுமா?''  சொல்லும்போது அவள் குரலில் வருத்தம்.

உண்மையில் பெண்ணின் திருமணம்போது நான் சென்னையில் இருந்தால் பலவிதங்களில் நான் பயன்படுவேன்.  திருமணம் என்கிற பதைப்பு ஒருவரை ஒருவர் பார்க்கும்போது குறையும் வாய்ப்பு அதிகம்.

என் விதி அந்தச் சமயத்தில் நான் அங்கில்லை.  பின் திருமணத்திற்கு லீவு.  அது கொடுப்பார்களா என்ற அச்சம் என்னிடம் இருந்துகொண்டே இருந்தது. 
எனக்கு ஒரு மாதமாக லீவு வேண்டியிருக்கும்.  அதற்கான முனைப்பை செய்து கொண்டிருந்தேன்.

அழகியசிங்கர் என்னைக் கிண்டல் செய்ததுபடி, லீவு கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.  ஏன்எனில் மானேஜருக்கும், எனக்கும் ஒருவித ஒழுங்கு உறவு ஏற்படவில்லை.  தவிரவும் நான் என்ன தவறு செய்வேன் என்பதைப் பார்த்துக்கொண்டிருப்பதுபோல் எனக்குப் பட்டது.

பஸ்ஸைப் பிடித்து மயிலாடுதுறையிலிருந்து நான் பந்தநல்லூருக்கு உடனடியாக வர முடியாது. ஒரு ஐந்து நிமிடம் பத்து நிமிடம் தாமதமாக வரும்படியாக நேரிடும்.  நான் உள்ளே நுழையும்போது, வட்டார அலுவலகத்திலிருந்து போன் வந்துள்ளதாக போனை என்னிடம் கொடுப்பார் மானேஜர்.  மானேஜரே அதைச் செய்திருப்பதாகத்தான் எனக்குத் தோன்றும்.  ''ஏன் லேட்?'' என்று அவர்கள் கேட்பார்கள்.  ''வேற வழியில்லை.. பஸ்ஸைப்பிடித்து வரும்போது இப்படி ஆகிவிடுகிறது.''

''நீங்க சீக்கிரம் வரணும்..''

''ஏன் இங்க வந்து மாட்டிக்கொண்டேன் என்பது தெரியவில்லை.  வேலையை விட்டுப் போய்விடலாமாவென்று யோசிக்கிறேன்..''என்று எரிச்சலுடன் பதில் சொல்வேன்.

இதைத்தான் மானேஜர் எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்.  மாட்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கும் குணம் அவருக்கு. 
                                                                                                                          (இன்னும் வரும்)

Comments