செல்வராஜ் ஜெகதீசன்
அதற்குள் அப்படியொன்று இருக்குமென்று சத்தியமாக நான் எதிர்பார்க்கவே இல்லை.அதன் விளைவாக நடந்த அத்தனை நிகழ்வுகளையும் நினைவுக்கு கொண்டு வந்து போட்டது,மைக்கேல் சாரை, அவரின் மனைவியோடு எதிர்கொள்ள நேர்ந்த இந்த மாலைப் பொழுது.தம்பதி சமேதராய் எதிரில் கடந்து போனவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை.அருகில் போய் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கலாம்.ஒரு பதினைந்து வருடத்திற்கு முன், தன் வீடே பழியாய்க் கிடந்தவனை,இப்போது அவருக்கு நினைவில் இருக்குமா?
அப்போது நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன்.மைக்கேல் சார் எங்கள் பள்ளிக்கு வந்திருந்த புது ஹெட் மாஸ்டர்.சொந்த ஊர்காஞ்சிபுரம்பக்கம் ஒரு கிராமம். வேலையில் சேர்ந்த புதிதில் சென்னைக்கு த ினமும் பஸ்சில் வந்து போய்க் கொண்டிருந்தார். ‘தில்லு முல்லு’படத்தில் வரும் ரஜினிக்குமீசை வைத்த மாதிரி இருப்பார்.எப்போதும் வெள்ளை பாண்ட் வெள்ளை முழுக்கை சட்டையுடன் பளபளக்கும் பெல்ட் ஒன்று அணிந்துதான் அவரை பெரும்பாலும் காண முடியும். விரைப்பான முகம். கண்கள் மட்டும் எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கும்.அந்த சிரிப்புதானா நடந்த அத்தனைக்கும் காரணமென்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.
தினமும் வந்து போவது முடியாமல்,வீடொன்று வாடகைக்கு எடுத்து தங்க அவர் தேர்ந்தெடுத்தது, எங்களுக்கு அடுத்த வீட்டை. எப்படி அவர் வீட்டோடு ஒன்றிப் போனேன் என்பது இப்போது சரியாய் நினைவில் இல்லை.மைக்கேல் சார் வீட்டில் தான் எந்நேரமும் இருப்பேன்.ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்து பையை போட்டுவிட்டு சார் வீட்டுக்கு போவேன். திரும்பி வர ராத்திரி எட்டு மணிக்கு மேல் ஆகும்.
எங்கள் பள்ளி எட்டாவது வரை மட்டுமே இருந்த ஒரு நடுநிலைப் பள்ளி.மைக்கேல் சார் ஏழாவதுக்கும் எட்டாவதுக்கும் வரலாறு பாடம் மட்டும் எடுப்பார்.அவர் பாடம் சொல்லித் தருவது அத்தனை சுவாரசியமாக இருக்கும்.படித்து முடித்தபின், அவரை போல் ஆக வேண்டுமென்று,நான் உட்பட,நிறைய பேர் ஆசைப்பட்ட அளவிற்கு. மைக்கேல் சார் கையால் திருக்குறள் புத்தகமொன்று நான் பரிசாய் (பேச்சுப்போட்டி முதல் பரிசு) பெறும் புகைப்படம் ஒன்று இப்போதும் என் வசம் வைத்திருக்கிறேன்.இப்போதென்றால் இந்த இருபத்தாறு வயதில்.
அதை விட மைக்கேல் சார் உபயத்தில் ரேடியோ ஸ்டேஷன் போய் வந்த கதை தான் ரொம்ப தமாசான விஷயம். இப்போ நினைத்தால் தமாசாக தோன்றும் விஷயம், அப்போதைக்கு அதிகம் சோகப்படுத்திய ஒன்று.
நீங்கள் ரேடியோவில் ஞாயிற்றுக்கிழமை மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும்“சிறுவர் சோலை”நிகழ்ச்சியைக் கேட்டதுண்டா?அதில் நாமும் ஒருநாள் பேசுவோமென்று நினைத்ததுண்டா?
அன்றுவரை, அதாவது மைக்கேல் சார் எங்கள் பள்ளிக்கு வரும் வரை, வெளியே ஏதாவது சுற்றுலாகூட்டிப் போவதென்றால், பெரும்பாலும் மகா பலிபுரம்,வண்டலூர் ஜூ அல்லது முதலைப் பண்ணை இப்படித்தான் இருக்கும்.
ஒருநாள் சுகுணா டீச்சர் வந்து, "ரேடியோ நாடகத்துல நடிக்க யாருக்கெல்லாம் இண்டரஸ்ட் இருக்கோ, கை தூக்குங்க" என்றார். ஒன்றும் புரியாமல் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து விழிக்க ஆரம்பித்தோம். பின் அவரே ஞாயிற்றுக்கிழமை தோறும் வெளிவரும் சிறுவர் சோலை நிகழ்ச்சி பற்றி சொன்னார். நன்றாக படிப்பவன் என்ற வகையில் என் பெயர் டீச்சராலேயே சேர்க்கப்பட்டது. அதற்கு இரண்டொரு நாள் கழித்து நாடகத்திற்கான ஒத்திகை ஆரம்பிக்கப்பட்டது. சுகுணா டீச்சரும் டிராயிங் மாஸ் டர் முருகேசன் சாரும் எப்படி எல்லாம் பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க,திருப்பித் திருப்பி அந்த வசனங்களை நாங்கள் சொல்லிப் பார்ப்போம். அவ்வப்போது மைக்கேல் சார் அங்கு வந்து பார்வையிடுவார். அவர் ஏற்பாட்டில்தான் அந்த ரேடி யோ நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந் தது.
இரண்டு வார ஒத்திகைக்குப் பிறகு,ரிகர்சலுக்காக ரேடியோ ஸ்டேஷன் போவோம் என்று சொல்லியிருந்தார் சுகுணா டீச்சர். ஒரு சனிக்கிழமை அன்று நாங்கள் எட்டு பேரும்,சுகுணா டீச்சர் மற்றும் முருகேசன் சார் சகிதம் கிளம்பி பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்தோம். எங்களுக்கு முன்னதாகவே மைக்கேல் சார் அங்கு நின்று கொண்டிருந்தார். பின் எல்லோரும் பல்லவன் பஸ் பிடித்து,தங்கசாலை பஸ் நிறுத்தத்தில் வந்து இறங்கினோம். அங்கிருந்து இன்னொரு பஸ் பிடித்து ரேடியோ ஸ்டேஷன் போக வேண்டுமென்று சுகுணா டீச்சர் சொல்லிக்கொண்டிருந்தார்.
அப்போது,அதுவரை அமைதியாக வந்து கொண்டிருந்த நான், "உவ்வே" என்ற சத்தத்துடன் வாந்தி எடுக்க ஆரம்பித்தேன். அதுவரைக்கும் அவ்வளவு தூரம் நான் பஸ்ஸில் பயணம் செய்ததில்லை.முருகேசன் சார் ஓடிப் போய் அருகிலிருந்து ஒரு லெமன் ஜூஸ் வாங்கி வந்தார். அதைக் குடித்த பிறகு சற்று தெம்பாக இருந்தது. பின் இன்னொரு பஸ்ஸில் ஏறி ரேடியோ ஸ்டேஷன் போய் சேர்ந்தோம்.
வானொலி அண்ணாவை நேரில் சந்தித்தோம். அங்கு வருவதற்கு முந்தைய ஞாயிறுகளில் ஒளிபரப்பான சிறுவர் சோலை நிகழ்ச்சிகளில் கேட்ட வானொலி அண்ணாவின் குரலை வைத்து நான் கற்பனை பண்ணி வைத்திருந்த முகத்திற்கும் நேரில் கண்ட வானொலி அண்ணாவின் முகத்திற்கும் நிறைய வித்யாசங்கள் இருந்தன.
இரண்டு மணி நேர ரிகர்சலுக்குப் பிறகு, திரும்பவும் இரண்டு பஸ் பயணம். என்ன ஆயிற்றோ தெரியவில்லை. இரண் டு பஸ்சிலும் “உவ்வே உவ்வே” என்று கக்கி வைத்ததன் விளைவாக, வேறொருவன் எனக்குப் ப திலாக போய் ரெகார்டிங் முடித்து வந்தான். ரேடியோவில் குரல் கேட்கும் பாக்கியத்தை அடியேன் இழந்தேன்.
இப்போதும் எனக்கு சரியாக ஞாபகம் இருக்கிறது. (எல்லாம் அந்த ரேடியோ நாடக அனுபவத்தால்). அன்று ஞாயிற்றுக் கிழமை. நான் மைக்கேல் சார் வீட்டில் ரேடியோவில் எங்கள் பள்ளி மாணவர்கள் பங்கு ப ெற்ற சிறுவர் சோலை நிகழ்ச்சி கேட்டு முடித்த நேரம்தான்,சீனு,அவன் அக்கா கொடுக்கச் சொன்னதாக, ஒரு புத்தகத்தைக்கொடுத்து விட்டுப் போனான்.சீனு எங்கள் பள்ளியில் தான் நான்காம் வகுப்பு படிக்கிறான்.முழுப் பெயர் சீனிவாசன்.அவன் அக்கா மாலா எட்டாவது படித்துக் கொண்டிருந்தாள். மாலாவைப் பற்றி சொல்வதென்றால், தக்காளி,மாலா மாதிரி சிவப்பாய் இருக்கும். (நன்றி சுப்ரமண்ய ராஜூ ).
புத்தகத்தைக் கொடுத்து விட்டு,ஒரே ஓட்டமாக ஓடிப்போனான் சீனு. நான் புத்தகத்தை உள் அறையில் இருந்த மைக்கேல் சாரிடம் கொண்டு போனேன்.
"சார்,சீனுவோட அக்கா இந்த புக்கை கொடுத்தனுப்பி இருக்காங்க"
சாருக்கு ஒரே ஆச்சர்யம்.
"யார்ரா அது சீனுவோட அக்கா?"
"மாலா சார். எட்டாவது பி செக்சன்"
“நான் எதுவும் புக் கேட்கலையே. சரி அப்படி வை. நாளைக்கு என்னன்னு கேட்போம்"
சரி சாரென்று அப்படியே அந்த புத்தகத்தை வைத்து விட்டுப் போயிருக்கலாம். அங்கு தான் என் ஆர்வக் கிறுக்கு வேலை செய்ய ஆரம்பித்தது.
அப்போதெல்லாம் எனக்கு ஒரு விஷேசமான பழக்கம் உண்டு. அட்டை போடப்பட்டிருக்கும் புத்தகங்களின், மேல் அட்டையைப் பிரித்து, உள்ளே பார்ப்பது. சீனு கொடுத்துவிட்டுப் போன புத்தகத்தின் உள் அட்டையை பார்ப்பதற்காக, தினத்தந்தி பேப்பரால் போடப்பட்டிருந்த அட் டையை பிரித்தேன். உள்ளிருந்து கோடு போட்ட பரீட்சை தாள் போல ஒன்று கீழே விழுந்தது.எடுத்துப் பிரித்து பார்த்தேன்.
இரண்டு பக்கமும் ஏதும் எழுதாத வ ெறும் தாள். ஆனால் பேப்பர் சற்று கனமாக இருந்தது. இரண்டு பக்கமும் திருப்பித் திருப்பிப் பார்த்து க் கொண்டிருந்ததில் ஒன்றைக் கண்டுபிடித்தேன்.இரண்டு தாள்கள் ஒன்றாக ஒட்டப்பட்டிருந்தன. கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் ஒட்டப்பட்ட ஈரம் இன்னும் இருந்தது.
மேலே சற்று உயர்த்தி வெளிச்சத்தில் பார்த்தபோது,உள்ளே எழுதப்பட்டிருந்த எழுத்துகள் தெரிந்தன. நகங்களைக் கொண்டு மிக மெதுவாக இரண்டு தாள்களையும் பிரித்தேன். பிரிக்கப்பட்ட தாள்களின் இரண்டுபக்கங்களிலும் உள் பகுதியில் ஏராளமான வரிகள் நுணுக்கி நுணுக்கி எழுதப்பட்டிருந்தன.
"என் ப்ரியமானவருக்கு,
இந்தக் கடிதம் உங்களுக்கு ஆச்சரியம் தரலாம். ஒரு சில சினிமாக்களில் வருவது போல் ஒரு மாணவி ஆசிரியருக்கு எழுதும் காதல் மடல்…...''
காதல் என்ற வார்த்தை எல்லாம் அந்த வயதில் எனக்கு எந்த அளவிற்கு புரிந்தது என்று இப்போது சொல்லத் தெரியவில்லை. பேப்பர்களை எடுத்துக் கொண்டு,உள் அறைக்கு ஓடினேன்.
"சார்,சீனு குடுத்துட்டுப் போன புஸ்தகத்தோட அட்டையில இந்த பேப்பர் இருந்துச்சு சார்”என்று பேப்பர்களை நீட்டினேன். எப்படிக் கண்டுபிடித்தேன் என்பதையெல்லாம் சொன்னேன்.
தாள்களைக் கையில் வாங்கியவர்,அடுத்த அரைமணி நேரத்திற்கு அதை மறுபடி மறுபடி படித்துக் கொண்டிருந்தார்.
o
மைக்கேல் சார் அவராகப் போய் மாலாவின் சித்தப்பா ஒருவருடன் பேசியதும்,அடுத்த சில நாட்களில் மாலா எங் கள் பள்ளியில் இருந்து வேறொரு ப ள்ளிக்கு மாற்றப்பட்டாள்.
அங்கிருந்தும் இன்லேன்ட் லெட் டரில் கடிதங்கள் வந்தது.பின்பு எங்கள் ஊரை விட்டே வேறெ ங்கோ கொண்டு செல்லப்பட, கொஞ்ச நாட்களில் மாலா எங்கிருக்கிறாள் என்றே யாருக்கும் தெரியாமல் போனது. அந்த இடத்தையும் கண்டுபிடித்து மைக்கேல் சார் மாலாவுடன் பேசி உறுதியளித்துவிட்டு வந்தார். ("பதினெட்டு வரை பொறு,
ப்ருதிவிராஜ் மாதிரி கொத்திக் க ொண்டு போய் மணந்து கொள்கிறேன்" ).பின் வந்த நாட்களில் நடந்தவைகள் , எனக்கும் தெரிய வாய்ப்பில்லா மல் போனது.
நானும் ஒன்பதாவது படிக்க வேறொரு பள்ளிக்குப் போனதில், மைக்கேல் சார் தொடர்பு முற்றிலும் விடுபட்டுப் போனது.
பதினைந்து வருடத்திற்குப் பின், இன்று கண்ட, மைக்கேல் சாரின் ம னைவியிடம் மாலாவின் ஜாடை சிறிதும் இல்லாவி ட்டாலும், நிறம் ஏறக்குறைய அதே தக்காளி சிவப்பில் இருந்தது.
Comments
நன்றி!