பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு
அழகியசிங்கர்
11.
நான் பந்தநல்லூருக்கு வந்த புதியதில் கிராமம் என்றால் நடுங்கிக் கொண்டிருந்தேன். நான் சென்னை போன்ற இடத்தில் இருந்து பழகியவன். கிராமம் என்றால் மனிதர்களே இருக்க மாட்டார்கள். சாப்பிட நல்ல ஓட்டல் கிடைக்காது. நல்ல மருத்துவமனை இருக்காது என்றெல்லலாம் பல குறைபாடுகள் கிராமத்தில் உண்டு. என் நண்பர் ராஜேந்திரன் ஏன் பந்தநல்லூரிலேயே தங்கலாமே என்ற அறிவுரையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. கிராமாத்தைச் சுற்றி அருகாமையில் இருக்கிற ஒரு நகரத்தைத்தான் நான் பெரிதும் நம்பினேன். முதலில் சாப்பாடு. இது பெரிய பிரச்சினை. என் வீட்டில் நான் வெந்நீர் கூட சுடவைத்துப் பழகாதவன்.
ஆனால் பந்தநல்லூர் என்ற ஊர் கும்பகோணத்திற்கும், மயிலாடுதுறைக்கும் நடுவில் உள்ளது. மயிலாடுதுறை 28 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. கும்பகோணம் 30 கிலோமீட்டர் மேல் இருந்தது. நான் கும்பகோணத்தில் இருப்பதைவிட மயிலாடுதுறையில் இருப்பதையே பெரிதும் விரும்பினேன். காரணம் என் உறவினர்கள் அங்கு இருக்கிறார்கள். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டால் அவர்கள் உதவி செய்வார்கள் என்று நம்பினேன்.
தினமும் மயிலாடுதுறையிலிருந்து பந்தநல்லூருக்கு வருவதற்கு தமிழ் பஸ் என்ற ஒன்றைப் பிடித்துக்கொண்டு வரவேண்டும். அதைத் தவறவிட்டால் பின்னால் வரும் பஸ்ஸைப் பிடித்தால் அலுவலகம் வர தாமதமாகும். சிடுமூஞ்சி மேலாளரைப் பார்க்க வேண்டும். ஏதோ உலகத்தில் நான்தான் பெரிய குற்றம் செய்துவிட்டதுபோல் பார்த்துத் தொலைப்பார். ஆனால் உண்மையில் வேற யாரையும் அவரால் குறை சொல்ல முடியாது. ஒரே பெண் கிளார்க்கிடம் வழிவார்.
அவர் வாழ்க்கையில் பெரிய சோகம் நடந்துவிட்டது. ஆனால் அது மாதிரியான சோகம் நிகழ்ந்துவிட்டதற்கான அறிகுறியே அவர் முகத்தில் தெரியாது. அவர் மனைவி அவருடன் ஸ்கூட்டரில் பயணிக்கும்போது ஒரு விபத்தில் இறந்துவிட்டாள். இது அவருடைய இடமான கோயம்புத்தூரில் நடந்தது.
அவர் அந்தச் சம்பவத்தைச் சொல்லும்போதுகூட உணர்ச்சியே இல்லாமல் சொல்வார். கேட்கும் நாம்தான் வருத்தப்பட வேண்டும்.
பஸ்ஸில் வருவது சரிபடாது என்று எண்ணி ஊரிலிருந்து டூ வீலரை எடுத்துக்கொண்டு வர ஏற்பாடு செய்தேன்.
(இன்னும் வரும்)
Comments