பத்மநாபனாகிய நான் பேசுகிறேன். யார் இந்த பத்மநாபன்? யாருமில்லை, சாதாரணத்திலும் சாதாரண மனிதன்தான் நான். என்னைப் பற்றி உங்களிடம் சொல்ல ஆசைப்படுகிறேன். ஒவ்வொருவருக்கும் அவரவரைப் பற்றி பேச எத்தனையோ இருக்கும். ஏன் உங்களுக்குக்கூட ஏதோ தெரிவிக்க ஆசைப் படுவீர்கள். யாரும் பேசத்தான் விரும்புவார்களே தவிர, மற்றவர்கள் பேசுவதைக் கேட்க விரும்ப மாட்டார்கள். ஆனால் ஒருவர் மற்றவர்கள் சொல்வதைக் கேட்க விரும்புகிறார்கள் என்றால் ஒன்று அவர்கள் மனோதத்துவ மருத்துவர்களாக இருப்பார்கள். ஏன்என்றால் அவர்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும். கேட்டால்தான் அவர்களுக்குப் பணம் கிடைக்கும். இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் தங்களை கடவுளின் தூதுவர்களாக நினைத்துக் கொள்பவர்கள். அவர்கள் கேட்க மட்டும் செய்வதில்லை. பிரச்சினைகளுக்குத் தீர்வும் சொல்வார்கள்.
நான் ஏதோ என்னைப் பற்றி உங்களிடம் சொல்கிறேன். நீங்களும் நான் சொல்வதைக் கேளுங்கள். வேறு எதுவும் சொல்ல வேண்டாம். சரி, எப்படி ஆரம்பிப்பது? நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சொல்ல விரும்பவில்லை. எனக்கு சொல்லவும் அலுப்பாக இருக்கும். உங்களுக்குக் கேட்பதற்கும் அலுப்பாக இருக்கும். நம் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஏதோவிதமான முட்டாள்தனத்தைச் செய்து கொண்டிருப்போம். அதைப் பற்றியெல்லாம் நாம் பிறரிடம் சொல்லக்கூட ஆசைப்பட மாட்டோ ம். யாராவது நான் செய்தது முட்டாள்தனமான செயல் என்று சொல்ல விருப்பப்படுவோமா? நிச்சயமாக மாட்டோ ம். ஆனால் பத்மநாபனாகிய நான் சொல்கிறேன். நான் சமீபத்தில் செய்த ஒரு முட்டாள்தனமான காரியத்தைப் பற்றி புலம்பாமல் இருக்க முடியாது. அது நான் பதவி உயர்வு பெற்றதுதான். சென்னையில் குடும்பத்துடன் இருந்த நான், ஏன் இந்தத் தப்பை செய்தேன். எல்லாம் விதி. மேலும் நான் தலைமை அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளராக 25 ஆண்டுகள் இருந்துவிட்டேன். மேலும் இருக்கப் பிடிக்காமல்தான் இந்தத் தவறை செய்து விட்டேன். ஆனால் இதற்கு உண்மையில் சுரேஷ்தான் காரணம். எனக்கும் சுரேஷிற்கும் 17வயது வித்தியாசம். எனக்கு நண்பர்கள் அப்படித்தான் அமைவார்கள்.
50வயதான என்னைப் பார்த்து, சுரேஷ் சொன்னான்: ''சார், பதவி உயர்வுக்கு ஆசைப் படாதீர்கள்,'' என்றான்.
''ஏன்?'' என்று கேட்டேன்.
''உங்களால் முடியாது.''
''ஏன் முடியாது?''
''தனிமை. உங்களால் இருக்க முடியாது.''
''எப்படி சொல்கிறாய்? தனிமையில்தான் இருந்து பார்ப்போமே?''
''உங்கள் குடும்பத்தை விட்டு ஒருநாள் கூட தனிமையில் நீங்கள் இருக்க முடியாது..''
''இல்லை. இந்த முறை பதவி உயர்வு பெற்றுத்தான் தீர்வேன்...''
''உங்கள் தலையெழுத்தை மாற்ற முடியாது..''
ஐம்பது வயதில் எனக்குப் பதவி உயர்வு தருவதைத் தவிர நிர்வாகத்திற்கு வேறு வழியில்லை. என்னைப் போன்றவர்கள் பொறியில் எப்படிச் சிக்குவார்கள் என்று பார்த்துக்கொண்டிருந்தது நிர்வாகம். நிர்வாகம் எதிர்பார்த்தபடி பொறியில் என்னைப் போன்ற பலர் சிக்கினார்கள்.
(இன்னும் வரும்)
பின் குறிப்பு :
என் நண்பர் குமரி எஸ் நீலகண்டன் அவர்கள், வலைதளத்தில் என் அனுபவத்தைத் தொடர்கதையாக எழுதும்படி வற்புறுத்தினார். அதன் பொருட்டே இந் நாவலை வலைதளத்தில் எழுத முயற்சி செய்கிறேன்.
என் நண்பர் குமரி எஸ் நீலகண்டன் அவர்கள், வலைதளத்தில் என் அனுபவத்தைத் தொடர்கதையாக எழுதும்படி வற்புறுத்தினார். அதன் பொருட்டே இந் நாவலை வலைதளத்தில் எழுத முயற்சி செய்கிறேன்.
Comments