Skip to main content

எதையாவது சொல்லட்டுமா.........68



ந.முத்துசாமிக்கு இந்த முறை பத்மஸ்ரீ பட்டம் கிடைத்துள்ளது.  முத்துசாமியை நினைக்கும்போது 'நீர்மை' என்ற அவருடைய சிறுகதைத் தொகுப்பு ஞாபகத்திற்கு வரும்.  அவருடைய கதைகளைப் போல ந.முத்துசாமியும் வித்தியாசமான மனிதர். எளிமையான மனிதர்.  அவரைப் பார்க்கும்போது அவருடைய மீசைதான் ஞாபகம் வரும்.  கூத்துக்காக ந.முத்துசாமி தன் வாழ்நாள் முழுவதும், இன்னும் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்.  எதையும் தெளிவாக செயல்பட வேண்டுமென்று நினைப்பவர்.  நடிகரின் உடல் அசைவுக்கும், வசன உச்சரிப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்.  கூத்துப்பட்டறையில் நடிக்கத் தெரிந்த நடிகனுக்கு நடிப்பு என்பது வெகு சுலபம்.

கூத்துப்பட்டறையை ஒரு விஞ்ஞானபூர்வமான அமைப்பாக ந. முத்துசாமி மாற்ற முயற்சி செய்துகொண்டிருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது.  இரண்டு மூன்று முறை விருட்சம் சார்பாக முத்துசாமியை வைத்துக் கூட்டம் நடத்தியிருக்கிறேன்.  ஞானக்கூத்தன் கவிதையை எப்படி ஒரு நடிகன் நடித்துக் காட்ட முடியுமென்று ஒரு நிகழ்ச்சியில் நடத்திக் காட்டினார்.

ஒருமுறை ஐராவதம் என்ற படைப்பாளியை வண்டியில் அழைத்துக்கொண்டு இலக்கியச் சிந்தனை கூட்டத்திற்குச் சென்றேன்.  ஐராவதத்தைப் பார்த்த முத்துசாமி, ''என்னைய்யா, உம்மை தூசித் தட்டி அழைத்துக்கொண்டு வந்திருக்கிறாரா?'' என்று கேட்டார்.  அதைக் கேட்கும்போது எனக்கு தாங்க முடியாத சிரிப்பை ஏற்படுத்தியது.

கூத்து என்பது பழைய காலத்துப் பாணி.  அதை உயிர்ப்பிக்கும் முயற்சியில் முத்துசாமி செய்து காட்டியிருக்கிறார்.  என் சின்ன வயதில் சித்திரா பெளர்ணமி அன்று எங்கள் கிராமத்தில் கூத்து நிகழ்க்சி ஒன்றை பார்த்த ஞாபகம்.  இரவு முழுவதும் நடக்கும்.  ஆனால் இப்போதெல்லாம் அது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை.  எந்த அளவிற்கு எல்லோராலும் ஈடுபட முடியும் என்பதும் தெரியவில்லை. 

 நாடகம் என்பதே போய்விட்டது.  ஒரு காலத்தில் டிவி இல்லாதபோது, கூத்தும், பின் நாடகமும் தேவைப்பட்டது.  இப்போது எல்லாம் போய்விட்டது.  எல்லோராலும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் சென்று ஒரு நாடகத்தைப் பார்க்க முடியுமா என்பது தெரியவில்லை.  ஏன்என்றால் எல்லோருக்கும் அவரவர் இடத்திலேயே எல்லாம் கிடைக்க வேண்டுமென்ற சூழ்நிலை வந்துவிடும் என்று தோன்றுகிறது. இந்த நிலையில் சினிமாகூட வீட்டிற்கு வந்தால் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். 

இன்னும் கூட கூத்தை எல்லோரும் பேசவேண்டுமென்று நினைக்கிற முத்துசாமியை வாழ்த்தாமல் இருக்க முடியவில்லை.

Comments

நல்ல கலைஞனுக்கு கிடைத்த நல்லதோர் அங்கீகாரம்...