நேற்று (1.1.2012) கம்பன் எக்ஸ்பிரஸ் வண்டியில் உட்கார்ந்திருந்தபோது, க்ளிக் ரவிக்குப் போன் செய்தேன். அவர் இலக்கிய வாசகர், சிறுகதை எழுத்தாளர். புகைப்படம் எடுப்பதில் திறமைசாலி.
அவர் ஒரு சிறுகதைத் தொகுப்பு கொண்டு வந்துள்ளார். எனக்கு அந்தத் தொகுப்பில் க்ளிக் ரவி என்ற பெயர்தான் உறுத்தலாக இருந்தது. ஒரு திறமையான புகைப்படக்காரர், கதைகள் எழுத வேறு பெயர் எதையாவது தேர்ந்தெடுத்திருக்கலாம். அவர் சொன்ன ஒரு விஷயம் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இப்போதெல்லாம் யாரும் புத்தகம் படிப்பதில்லை என்று.
ஒரு பெரிய புத்தகக் காட்சி நடைபெறும்போது, எப்படி க்ளிக் ரவி இதுமாதிரி சொல்லலாம் என்று தோன்றியது. அவர் சொல்வதில் எல்லாவித நியாயமும் இருப்பதாகவும் தோன்றியது. முன்பு மாதிரி இப்போதெல்லாம் யாரும் புத்தகம் படிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் அளவுக்கதிகமாக புத்தகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
எனக்கும் அப்பாவிற்கும் புத்தாண்டு அன்று சண்டையே வந்துவிட்டது. ''நீ வாங்குகிற புத்தகங்களையெல்லாம் படிக்கிறயா?'' என்று அவர் கேட்க, எனக்கு அவர் மீது கோபமே வந்து விட்டது.ஆனாலும் அந்த முணுக்கு கோபத்தை அடக்கிக் கொண்டேன். உண்மையில் என்னைச் சுற்றிலும் படிக்காதவர்கள் அதிகமாக இருக்கும்போது, நானும் படிக்காதவன் ஆகிவிட்டேன். எப்போதும் அப்பா தினசரிகளை மட்டும் படிப்பார். பின் டிவி. என் குடும்பத்தில் உள்ள வேறு எந்த நபரும் இப்படி படிக்காதவர்கள்தான். நான் ஒருவன்தான் படிப்பவன்.
கல்லூரி நாட்களில் நான் பாரதியார் கட்டுரைகள் புத்தகத்தை படித்துக்கொண்டு மின்சாரவண்டியில் தாம்பரத்திலிருந்து மாம்பலம் வரை வந்துகொண்டிருப்பேன். கெமிஸ்டிரி படிக்க வேண்டிய சமயத்தில் பாரதியார் கட்டுரைகள் படிப்பேன். அப்போது என் மனநிலையை உருகும் மனநிலையாக வைத்திருந்தேன். பாரதியாரின் வாழ்க்கை வரலாறைப் படித்துவிட்டு, அவருக்கு ஏற்பட்ட முடிவைக் குறித்து உருகுவேன். அதேபோல் சில சினிமாப் பாடல்களைக் கேட்டால் உருகுவேன். ஆனால் என் எழுத்தாள நண்பர் ஒருவர், குருதத் படம் ஒன்றை பார்த்துவிட்டு அழ ஆரம்பித்து விட்டார்.
என் அப்பாவிற்கு இன்னொரு கவலை. நான் வைத்திருக்கும் கொண்டு வந்திருக்கும் புத்தகங்களை என்ன செய்யப் போகிறேனென்று. இன்னும் கேட்டால், என் குடும்பத்தில் உள்ள யார் கண்ணிற்கும் படாமல்தான் நான் புத்தகத்தை வைத்துக் கொண்டிருக்கிறேன். என் மனைவிக்கு புத்தகங்களைப் பார்த்தால் போது, படபடப்பாகிவிடும். எனக்கோ புத்தகங்களைப் பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. சிலருக்கு சில விஷயங்களில் சிலவிதமான வியாதி இருக்கும். எனக்கும் ப்ளாட்பாரத்தில் புத்தகங்களைப் பார்த்தால் போதும் வாங்காமல் இருக்க முடியாது. இது என் குடும்பத்தாருக்கு பெரிய பிரச்சினை. அப்பாவிடம் சொன்னேன். ''நான் இப்போதெல்லாம் புத்தகம் வாங்குவது கிடையாது,'' என்று.
''பொய் சொல்லாதே..'' என்றார் அப்பா.
என் வருமானத்தின் பெரும்பகுதியை நான் புத்தகம் வாங்குவதும், புத்தகம் கொண்டு வருவதிலும் செலவிடுவதாக அப்பா எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருப்பார். அது உண்மையில்லை என்று சொன்னாலும் அப்பா நம்ப மாட்டார்.
சரி, நான் இப்ப சொல்ல வருவது, நம்மால் ஏன் புத்தகங்களைப் படிக்க முடியவில்லை? க்ளிக் ரவி அவருடைய எல்லாப் புத்தகங்களையும் வேறு வழியில்லாமல் நூல் நிலையத்திற்கு தானம் வழங்கி விட்டதாகச் சொன்னார். குருதத் நண்பர் அவர் வீட்டுப் பரண்மீது புத்தகங்கள் அடுக்கடுக்காக தூசிப் படிந்து கிடக்கின்றன. அந்த இடத்தை சுத்தம் பண்ண வேண்டுமென்று சொன்னால் போதும், அவர் வீட்டில் பெரிய ரகளையே நடக்கும். இன்னொரு நண்பர் இருக்கிறார், அவர் வீட்டு கட்டில் அடியெல்லாம் புத்தகங்களாக இருக்கும்.
நான் இன்னும் புத்தகம் ஏன் படிக்க முடியவில்லை என்பதற்கு வரவில்லை. வயது ஆக ஆக இது ஒரு பிரச்சினை என்று நினைக்கிறேன். என் இன்னொரு நண்பர் ஒருவர், லைப்ரரி போவதை நிறுத்தி விட்டார். பின் அவர் எதாவது புத்தகம் படிக்க வேண்டுமென்றால், வாங்கி வைத்துக் கொள்வார். பின் நிதானமாக படித்துக்கொண்டிருப்பார். மாதக்கணக்கில். படிப்பதற்கு எந்த நிர்ப்பந்தமும் இல்லை. இந்த நேரத்தில்தான் முடிக்க வேண்டுமென்ற அவசியமும் இல்லை. என்னால் அப்படி கூட புத்தகங்களைப் படிக்க முடியவில்லை. உண்மையில் இப்படி நினைத்தேன் என்றால், எதாவது புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு விடுவேன். பின் சில பக்கங்களை எடுத்துப் புரட்டுவேன். ஆனால் பின்னால் படிக்க முடியாமல் போய்விடும்.
படிப்பதற்கு பெரிய முயற்சி செய்ய வேண்டும்தான். எனக்குத் தெரிந்த எழுத்தாள நண்பர் ஒருவர், எதாவது புத்தகம் படித்தால் அதைப் பற்றி விரிவாக எழுதவும் எழுதி விடுவார். நம்ம விஷயம் அதற்கும் பிரயோசனமில்லை.
சரி எப்படி புத்தகம் படிப்பது? என் பை நிறைய நான் படிக்க வேண்டிய புத்தகங்களை அடிக்கடி எடுத்துக்கொண்டு போவேன். பஸ்ஸில் ஏறியவுடன் படிக்கலாமென்றால், பஸ் முழுவதும் கூட்டம் நிரம்பி வழியும். சரி பஸ் வேண்டாம். அலுவலகம். மூச்சு விட முடியாது. அந்த அளவிற்கு கூட்டம் முண்டி அடிக்கும். அந்தச் சமயத்தில் நான் பையிலிருந்து புத்தகத்தைத் தொட்டுப் பார்த்துவிட்டு வைத்துவிடுவேன். சக்கையாக அலுவலகம் பிழிந்த பிறகு வீட்டிற்கு பஸ்ஸில் வரும்போதும், புத்தகம் எடுத்துப் படிக்க முடியாது. வீட்டிற்கு வரும்போது, தூங்கிக்கொண்டே வருவேன். புத்தகமாவது? அது பையில் பத்திரமாகவே இருக்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் பரபரப்பாக இயங்குவதால், நான் புத்தகம் எடுத்துப் படிக்கும் நல்ல காரியத்தைச் செய்ய மாட்டேன்.
''நீ வாங்குகிற புத்தகங்களையெல்லாம் படிக்கிறயா?'' என்று அப்பா கேட்பது காதில் விழுந்து கொண்டுதான் இருக்கிறது. என்ன செய்வது?
Comments