Skip to main content

எதையாவது சொல்லட்டுமா.........66





நான் சென்னையில் நடக்கும் புத்தகக் காட்சியைப் பற்றி எழுத ஆரம்பித்தால், நிறையாகவே எழுதலாம்.  ஒருமுறை சாக்கு மூட்டை நிறைய புத்தகங்களை வாரிக்கொண்டு விற்க வந்தது.  பின் அதேபோல் சாக்குமூட்டை முழுவதும் நிரப்பிக்கொண்டு வீட்டிற்கு தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு போனது. விற்பதற்காகக் கொடுத்த புத்தகங்கள் தீயினால் எரிந்து சாம்பலாகிப் போனது.  அப்போது அந்தப் புத்தகங்களை அன்னம் என்ற கடையில் விற்பதற்குக் கொடுத்தேன்.  பின்னால் அவர்களிடம் நான் கொடுத்தப் புத்தகத்திற்கு இணையாக அவர்கள் புத்தகங்களை வாங்கிக்கொண்டேன்.  அந்தத் தீ விபத்து ஞானச்சேரிக்கு பெரிய நஷ்டத்தைக் கொடுத்து விட்டது.  பின் நானே ஸ்டால் போட்டு விற்க ஆரம்பித்தேன்.  அப்போதிலிருந்து தடுமாற்றம்தான்.  ஓராண்டில் விருட்சம் புத்தகம் ஒன்று இரண்டுதான் வரும்.  அதை வைத்துக்கொண்டு ஸ்டால் போட்டால் அவ்வளவுதான்.  எல்லாப் பதிப்பகத்தாரிடமிருந்தும் புத்தகங்களை வாங்கி விற்போம். 

என்னுடைய பெரிய சவால்.  நான் சென்னையை விட்டுப் போனாலும், புத்தகக் காட்சியில் கலந்துகொள்ள முடியுமா என்பதுதான்.  ஒருமுறைதான் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.  மற்றபடி ஒவ்வொரு ஆண்டும் கலந்துகொள்ளாமல் இருக்க மாட்டேன்.  பெரிய லாபம் வராது.  ஆனால் புழுதியும் அலைச்சலும் அதிகமாக சேரும்.

இப்பவெல்லாம் லீவு நினைத்தபடி கிடைப்பதில்லை.  நண்பர்களை நம்பித்தான் புத்தகக் காட்சியை நடத்த வேண்டியுள்ளது.  8 நாட்கள் புத்தகக் காட்சியில் கலந்துகொள்ள முடியவில்லை.  2012 ஆம் ஆண்டில் புத்தகக் காட்சியில் கலந்துகொள்ள வேண்டாமென்று அப்பாவும், என் பெண்ணும் சொன்னார்கள்.  எனக்கும் உள்ளுக்குள் வேண்டாம் என்றுதான் தோன்றியது.  காரணம் அரசாங்கம் மாற்றம்.  5ஆம் தேதி புத்தகக் காட்சி திறப்பு விழா சுவாரசியம் இல்லாம் போய்விட்டது.  பல பதிப்பாளர்கள் முகங்களில் உற்சாகம் இல்லை.  பெரும்பாலான பதிப்பாளர்கள் புதிய புத்தகங்கள் போடவில்லை.  விருட்சத்திலிருந்து வரும் ஒரு புத்தகம் இரண்டு புத்தகம் கூட கிடையாது.  சிரிப்பே இல்லாத புத்தகக் காட்சியை இப்படித்தான் பார்க்கிறேன்.


ஸ்டால் வைப்பவர்கள் கணவன் மனைவி பதிப்பாளர்களாக இருந்தால் சரியாக இருக்கும். ஆள் வைத்தால் ஒரு நாளைக்கு ரூ250 லிருந்து 300 வரை பழுத்துவிடும்.  குறைந்தது இரண்டுபேர்களாவது ஒரு ஸ்டாலுக்கு வேண்டும்.  அதாவது  என்னைப்போல 100 சதுர அடி ஸ்டாலுக்கு. எல்லாம் சரி, ஆள் கூலிக்குப்போக புத்தகம் விற்று பணம் ஈட்ட வேண்டும். 
4ஆம்தேதி புத்தக ஸ்டாலுக்கு வந்து புத்தகங்களை வைத்தவுடன், பெரிய பெருமூச்சு என்னிடமிருந்து வெளிவந்தது.  அதற்குமுன் புத்தகங்கள் பார்சல் பண்ண உதவி செய்த நண்பர், ''இத்தனைப் புத்தகங்களை எப்ப விற்கப் போகிறீர்கள்?'' என்று கேட்டார்.  நான் சொன்னேன், ''எல்லாம் 150 பிரதிகள்தான்.  விற்காவிட்டால், பேப்பர் கடைக்குப் போட்டு விடுவேன்,'' என்றேன். நண்பர் சிரித்தார். 

எனக்கு முதலில் விசித்திரமான ஐடியா ஒன்று தோன்றியது.  ஸ்டாலில் விருட்சம் புத்தகங்களை மட்டும் கொண்டு வந்து போட்டுவிட்டு, பின் கவனிக்காமல் ஓடிவிட்டால் என்னவென்று.  யார் வேண்டுமானாலும், விருட்சம் புத்தகங்களை இலவசமாக எடுத்துக்கொண்டு போகட்டும்.  அல்லது எடுத்துக்கொள்ளாமல் போகட்டுமென்று.  பின் அந்த எண்ணம் மாறிவிட்டது. 

அப்பாவும், பெண்ணும் இப்போதும் சொல்கிறார்கள்.  ''நீ எப்போதுதான் இதையெல்லாம் நிறுத்தப் போகிறாய்...'' என்று.  இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. நான் சிரமப்பட்டு தயாரித்த புத்தகங்கள் எல்லாம் என்னைப் பார்த்து சிரிக்கின்றன.  ஒவ்வொரு புத்தகமும் தயாரிக்கும்போது ஒரு கதை உண்டு.  யாருடனும் இல்லை என்ற தலைப்பில் என் கவிதைப் புத்தகத்தைத் தயாரித்தேன்.  அப்போது ஏன் இப்படி ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்தேன் என்று யோசித்தேன்.  உண்மையில் நான் யாருடனும் இல்லை.  நான் யாரையும் குருவாகவும் ஏற்றுக்கொள்ளவில்லை.  அதேபோல் எனக்கு யாரும் சீடர்களும் இல்லை.

Comments

யாருடனும் இல்லை என்ற தலைப்பில் என் கவிதைப் புத்தகத்தைத் தயாரித்தேன். அப்போது ஏன் இப்படி ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்தேன் என்று யோசித்தேன். உண்மையில் நான் யாருடனும் இல்லை. நான் யாரையும் குருவாகவும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல் எனக்கு யாரும் சீடர்களும் இல்லை.

கனக்கும் பகிர்வு..
யாருடனும் இல்லாதவருக்கு யாரும் வரமாட்டார்தானே
நீங்கள் தனிக்காட்டு ராஜா... உங்களை யாரும் தொல்லைப் படுத்த இயலாது... நீங்கள் சுதந்திரமானவர் அல்லவா...