வெயில் கடுமையாக இருப்பதால், நான் எதையாவது சொல்லட்டுமா பகுதியில் எதையும் சொல்லாமல் விட்டுவிட்டேன். பல கற்பனைகளை செய்து வைத்திருந்தேன். பெருந்தேவி, நேசன் கவிதைத் தொகுதிகளைப் பற்றி எழுதுவது. பின் பிரமிள் கட்டுரையைத் தொடர்வது என்றெல்லாம் நினைத்திருந்தேன். கவிதையைப் பற்றிய என் கட்டுரையைத் தொடரலாம் என்றெல்லாம் நினைத்திருந்தேன். வெயில் என் எண்ணத்தைச் சிதற அடித்துவிட்டது. என் இயலாமையை வெயில் மீது கொட்டுகிறேன் என்றுகூட தோன்றுகிறது.
நாம் எந்தக் காரியத்தைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும்போது, அதை நிறுத்துவது எப்படி என்றும் யோசிக்க வேண்டும். எப்போதும் எதையாவது படிப்பதை நிறுத்திவிட்டு, பேசாமல் இருந்தால் என்ன என்றுகூட தோன்றுகிறது. நம்முடைய பிரச்சினை நாம் எதையும் நிறுத்தமுடியாமல் அவதிப் படுகிறோம். வாழ்க்கை இப்படியே போய்க் கொண்டிருக்காது. எதையும் தொடர்வதை நிறுத்திப் பார்த்து என்ன நடக்கிறது என்று ஆராய வேண்டும். ஒரு பத்திரிகையைப் புரட்டிப் பார்த்தேன். ஒவ்வொரு இதழிலும் அவர் ஏகப்பட்ட கவிதைகளை எழுதிக்கொண்டே போகிறார். அதைப் பார்த்தபோது, இவர் ஏன் நிறுத்தாமல் தொடர்ந்து எழுதிக்கொண்டே போகிறார் என்று தோன்றியது. எழுதிக் கொண்டே போகும்போது எழுதவதை நிறுத்த வேண்டும். படித்துக்கொண்டே போகும்போது படிப்பதை நிறுத்த வேண்டும். யாரும் அதைச் செய்வதில்லை. டிவியில் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் மாதிரி எல்லோருடைய வாழ்க்கையும் ஓடிக்கொண்டிருக்கிறது.
********
கணையாழி ஸ்தாபகர் கஸ்தூரி ரங்கன் அவர்கள் மரணம் அடைந்த செய்தி sms ல் வந்தபோது, வருத்தமாக இருந்தது. கணையாழில் என் குறுநாவல் ஒன்று வரும் தருணத்தில் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவர் அலுவலகத்தில் போய்ப் பார்த்தேன். தனியாக இருந்தார். பழைய கணையாழி இதழ்கள் சிதறிக் கிடந்தன. ஒரு தட்டச்சுப் பொறி முன் அமர்ந்து எதையோ டைப் அடித்துக்கொண்டிருந்தார். என் குறுநாவலைக் குறித்து பக்கங்களைக் குறைக்கச் சொன்னார். அவர் சொன்னபடி செய்தேன். கணையாழி சம்பந்தப்பட்ட அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா மூவரையும் பார்த்திருக்கிறேன். கஸ்தூரி ரங்கன் அதிகமாகப் பேச மாட்டார். கணையாழி கொண்டுவருவதில் உள்ள அவருடைய தீவிரத்தை அறிவேன்.
ஒருமுறை விருட்சம் வெளியீடாக வந்துள்ள ஒரு கவிதைத் தொகுப்புக்கு அவரைத் தலைமை ஏற்கும்படி கேட்டுக்கொண்டேன். வந்திருந்து சிறப்பாக உரையாற்றினார். ஆனால் என்ன எல்லாவற்றையும் பதிவு செய்யும் பக்குவம் என்னிடமில்லை. அதனால் தெளிவாக என்னால் எதையும் குறிப்பிடமுடியவில்லை. தனி மனிதராக கணையாழி இதழைத் தொடர்ந்து நடத்தியது அசுர சாதனை. இன்று எழுதிக்கொண்டிருக்கும் பெரும்பாலான படைப்பாளிகளுக்கு கணையாழி வழி காட்டியாக இருந்தது. ஒரு காலத்தில் நான் இரண்டு சிறுகதைகளை எழுதி ஒன்றை ஆனந்தவிகடனுக்கும், இன்னொன்றை கணையாழிக்கும் அனுப்பினேன். கணையாழில் என் கதை உடனே வந்துவிட்டது. ஆனந்தவிகடன் ஒரு ஆண்டு கழித்து கதையைத் திருப்பி அனுப்பியது.
ஒரு கட்டத்திற்குப் பின் யாராலும் எதையும் தொடர முடியாது. கணையாழியை அவரால் தொடர முடியவில்லை. வேறு ஒரு நிறுவனத்திடம் கொடுத்துவிட்டார். அந்த கணையாழி வந்தாலும், கஸ்தூரி ரங்கன் கொண்டு வந்த எளிமையான கணையாழி இல்லை. மசாலா போட்ட அது வேறு ரகம்.
எளிமையான தோற்றம் கொண்ட கஸ்தூரி ரங்கனை மறக்க முடியாது. அவரை இழந்து நிற்கும் குடும்பத்திற்கு என் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Comments
உங்கள் பயனுள்ள இடுகைக்கு நன்றிகள்