Skip to main content

சாய்பாபா


வெற்றிகரமாக விளங்கும் எந்தவொரு கோட்பாடும் அதன் வளர்ச்சிப்போக்கில் மூன்று நிலைகளைக் கொண்டிருப்பதாக வில்லியம் ஜேம்ஸ் கூறுவார். முதல் நிலையில் அக்கோட்பாடு அபத்தமானது என்று தாக்கப்படும். இரண்டாம் நிலையில் அது பழக்கப்பட்ட ஒன்றாகவும் உண்மை என்று ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும் கருதப்படும். இறுதி நிலையில் அதன் அத்தியாவசியம் உணரப்பட்டு அதைத் தாங்களே கண்டுபிடித்தது போன்று அதன் விமர்சகர்களும் சீராட்டுவார்கள்.

சத்ய சாய்பாபாவை ஒரு கோட்பாடு என்கிற அளவில் சுருக்கிக்கொண்டு பார்க்க முடியாதெனினும் அவரும் இந்த மூன்று நிலைகளையும் கடக்க வேண்டியிருந்தது. ஷிர்டி சாய்பாபா இறந்து எட்டு வருடங்களுக்குப் பிறகு 1926இல் பிறந்த சத்யநாராயண ராஜூ தனது பதினான்காம் வயதில் தான் ஷிர்டி பாபாவின் மறு அவதாரமான சாய்பாபா என அறிவித்தபொழுது அவர் சிற்சில அதிசயங்களையும் புரிய ஆரம்பித்திருந்தார். தன் நண்பர்களுக்கு திடீரென லட்டுகள், மாம்பழங்கள் ஆகியனவற்றை வரவழைத்துக் கொடுப்பது போன்றவை மட்டுமல்லாது ஷிர்டி பாபா தன் பக்தர்களிடம் என்னவெல்லாம் சொன்னாரோ அவற்றைஎல்லாம் அவர்களிடமே நினைவூட்டி அசரவைத்தார் சாய்பாபா.

சாய்பாபாவிற்கு நாளும் கிடைத்து வந்த புகழ் அவருக்குப் பலத்த எதிரியாகியது. அவரைப் பற்றி ஒன்றும் அறிந்து கொள்ளாமலேயே அவர்மீது தாக்குதல்களைத் தொடுத்தனர் அவர் நடத்திக் காட்டிய அதியசயங்கள் பழிக்கப்பட்டன. தன்னை நாடுபவர்களின் குறைகள் அனைத்தையும், அவை எதுவாயினும் நிவர்த்திக்கும் சக்தி படைத்திருந்தார். தீராத வியாதியாகட்டும், மனக்கவலையாகட்டும், பொருள் பதவி ஆகியன அடைவதற்கு எதிர்படும் இடர்பாடுகளாகட்டும் எல்லாம் அவரை சந்தித்த விநாடியில் தொலைந்து போனதாக பக்தர்கள் நம்பினார்கள். எதிர்ப்புகள் மங்கத்தொடங்கின. பாபாவின் புகழ் இந்தியா மட்டுமின்றி உலகின் பலநாடுகளிலும் பரவத் தொடங்கிற்று. அவரது சமூகப் பணிகள் பலரையும் பயனடைய வைத்தன. ஆத்திகர்கள் நாத்திகர்கள் என்றில்லாமல் எல்லோரும் அவரை மரியாதையுடன் நேசிக்கத் தொடங்கினர். எண்பத்து ஐந்தாவது வயதில் அவர் இறந்தபொழுது அந்த நேசத்தின் பல பரிமாணங்களையும் பார்க்க முடிந்தது.

பாபா சகமனிதர்களுக்கு ஆற்றிய சேவைகளை மனதாரப் பாராட்டும் பண்பு படைத்தவர்களுள் அவரது சித்து வேலைகளை விரும்பாதவர்கள் அநேகர் உண்டு. இவர்கள்தான் பாபாவின் ஆரம்பகால பகுத்தறிவு விமர்சகர்கள். இப்பொழுது விமர்சனம் தவிர்த்த தொனியில் ஆதங்கத்துடன் பாபா அந்த சித்து வேலைகளை மட்டும் செய்யாமலிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று சொல்பவர்கள். பாபா சித்து வேலைகள் என்று சொல்லப்படும் அதிசயங்களை நிகழத்தாமல் இருந்திருந்தால் ஒருவேளை இந்த அளவிற்கு புகழ் பெற்றிருப்பாரா?

இது காலம் காலமாகத் தொடுக்கப்பட்டு வரும் வினா. யேசு கிறிஸ்து அதிசயங்கள் புரியாமல் இருந்திருந்தால் இந்த உலகமே அவரது காலடியில் வீழ்ந்து கிடக்கும் என்று ரூஸோ கருதினார். யேசுவை மாபெரும் பொருளாதார அரசியல் மேதையாகக் கண்டெடுத்த பெர்னாட்ஷாவும் இதே கருத்தை வழி மொழிந்தார். யேசுவிற்குப் புகழ் சேர்த்ததைப் போலவே பாபாவிற்கும் அதிசயங்கள் புகழைச் சேர்த்தன. பாமரர்களிலிருந்து மேதைகள்வரை அதிசயங்களால் ஈர்க்கப்படுகிறார்கள்.

ஒரு கிறித்துப் பெரியவரின் மறைவிற்குப் பிறகு அவரது சக்தியால் இரண்டு அதிசயங்கள் நடைபெற்றதென்றால் அவருக்குப் புனிதர் (saint) பட்டம் வழங்குகிற நடைமுறையைக் கத்தோலிக்க தலைமை பீடம் இன்றுவரை அனுசரித்து வருகிறது. மகான்களுக்குத் தங்கள் பணிகளை ஆற்ற நேர்கையில் எதிர்ப்படும் தடைகளை வேரறுக்க அதிசயம் போன்ற கூரான எஃகு வேறில்லை.
அதிசயங்கள் புரிவதில் ஒரு உலக ரிகார்டை படைத்தவர் பாபா. அனு தினமும் அதிசயங்கள் புரிந்தவர். ஒருமுறை கூட அதில் அவர் தவறிழைத்தது கிடையாது. அநேகமாக ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்றுமுறைகள் விபூதியை வரவழைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிப்பார். சட்டை மடிப்பிலிருந்து விபூதியைக் கொணர்கிறார் என்றெல்லாம் பழி சுமத்தப்பட்டார். சிலர் அதை நிரூபித்ததாகவும் மார்தட்டினர். மக்களிடம் அவையெல்லாம் சற்றும் எடுபடவில்லை. விபூதி மட்டுமின்றி தங்க டாலர், மோதிரம், வாட்ச், புடவை, என்று கைக்கு அடக்கமான பலவற்றையும் அவர் காற்றிலிருந்து வரவழைத்துக் கொடுத்தார். அவர் வரவழைக்கும் மோதிரத்தின் அளவு பெரிதாகவோ சிறிதாகவோ இல்லாமல் அணிபவரின் விரலுக்குக் கச்சிதமாகப் பொருந்தும்படி இருக்கும். தனது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் வழக்கமாக அணியும் குங்குமப்பூ நிற உடை தவிர்த்து வெண்பட்டு உடை அணிந்துகொண்டு வாயிலிருந்து சிரமப்பட்டு ஒரு லிங்கத்தை கக்கியெடுப்பார்.

அவர் மாயமாய் வரவழைக்கும் பொருட்கள் எங்கிருந்து வருகின்றன? அவை எங்கு தயாரிக்கப்பட்டு எவ்வாறு அவர் கையில் எல்லோர் முன்னிலையிலும் தோன்றுகின்றன என்பனவெல்லாம் எவராலும் அறியமுடியாதவை. தங்கக் கட்டுபாடு சட்டத்தின் கீழ் பாபா மீது ஆந்திர பிரதேசத்தில் பகுத்தறிவாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். தங்கத்தை பாபா பதுக்கிவைத்திருந்ததாக அவர்மீது தொடுக்கப்பட்ட வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். திடீரெனத் தென்படும் தங்க ஆபரணம் பதுக்கிவைத்ததற்கான எவ்விதத் தடயத்தையும் தரவில்லை என்பது தீர்ப்பு. பாபா விமர்சனங்களுக்குப் பதிலளிப்பதில்லை. அவரது சக்தியைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என்று பெங்களூர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எச். நரசிம்மய்யா முயன்ற பொழுது பாபா அதை தடை செய்யக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினார். உலகின் எத்திசையிலிருந்தும வரும் பக்தர்களுக்கு அபயம் அளிக்கும் பாபா தனக்கு ஏற்படும் தொந்தரவைத் தன்னால் தீர்த்துக்கொள்ள முடியாது இந்திரா காந்திக்கு கடிதம் எழுதுகிறாரே என்று அந்த சம்பவம் நினைக்கத் தூண்டியது.

பாபாவைப் போன்று அதிசய ஆற்றல் (Para Normal) படைத்தவர்களை மேலைநாடுகளில் சோதிக்கிறார்கள். ஈஎஸ்பி, டெலிபதி ஆற்றல் உடையவர்கள் இவ்விதம் சோதனைக்குள்ளாகிறார்கள். ஆர்தர் கோஸ்லர் இது குறித்த ஆராய்ச்சிகளுக்கு எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் ஓர் இருக்கையை நிறுவ தனது சொத்தின் பெரும் பகுதியை உயில் எழுதிவைத்தார். இதுவரை இவ்வாராய்ச்சிகளால் எவ்வித முடிவிற்கும் வர இயலவில்லை. ஆனால் இவை தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். இத்தகைய ஆற்றல் படைத்தவர்கள் இந்தியாவில் அதிகம் தென்படுவதால் இந்தியப் பல்கலைக்கழகங்கள் இந்த முயற்சிகளில் தவறாது ஈடுபட வேண்டும். அதிசய ஆற்றல் படைத்தவர்களை புரட்டாளர்கள் என்று பழித்தொதுக்குவது ஒரு விஞ்ஞான மூட நம்பிக்கை.

ஆனால் பாபா வெறும் அதிசய சாமியார் அல்லர். அவர் சாத்வீகமான யோகி. அன்பை போதிப்பவர். வன்முறையை விலக்கிய வாழ்வை மேற்கொள்ளத் தூண்டுபவர். இந்து மதத்தினராக இருந்தபோதிலும் பிற மதங்களை அரவணைத்தவர். மத மாற்றத்தில் அவர் நம்பிக்கை இல்லாதவர். புட்டபர்த்தியிலுள்ள பிரசாந்தி நிலையம் பெங்களூரிலுள்ள ஒயிட் பீல்ட் ஆகிய அவரது ஆசிரமங்களில் எல்லா மதத்தினரின் பண்டிகைகளும் கொண்டாடப்படும். மத நல்லிணக்கத்திற்கு அவர் சிறந்த எடுத்துக்காட்டு. எந்த மதத்தலைவரையும் அவர் விமர்சித்ததுமில்லை. அவரது ஆசிரமங்கள் சர்வதேசக் குடில்கள் போன்று தோற்றமளிக்கும். வெளிநாட்டவர்களில், அதிகமாக இத்தாலியர்களை நான் அங்கு பார்த்தேன். இத்தாலிய மொழியில் அவர்களுக்காக பாபா பற்றிய சொற்பொழிவுகளும் அங்கு நடைபெறும்.

நான் முதன்முறையாக புட்டபர்த்திக்கு முப்பது வருடங்களுக்கு முன்னர் சென்றேன். என் மனைவியின் மிக நெருங்கிய உறவினர் பிரசாந்தி நிலையத்தில் வசித்து வந்தார். அப்பழுக்கற்ற தியாக வாழ்க்கை அவருடையது. அவரது அன்பிற்கு பாத்திரமான பாபாவின் மீது நாளடைவில் எனக்கும் மிகுந்த ஈர்ப்பு உண்டாயிற்று.

அப்பொழுதெல்லாம் அவரைப் பார்ப்பது அவ்வளவு கடினமல்ல. காலை மாலை ஆகிய இருவேளைகளிலும் அவர் தரிசனம் தருவார். பிரசாந்தி நிலையம் ஒருசில குடியிருப்பு கட்டடங்கள் மட்டுமே கொண்டிருந்தது. பூர்ண சந்திரஹால் என்று ஒரெயொரு கூடம்.

மலிவுவிலைக் கேண்டீன். வியாழக்கிழமைகளில் பேக்கரியில் பிட்ஸா கூடக் கிடைக்கும். அதற்கு மட்டும் முன்னதாகவே டோக்கன் வாங்கியிருக்க வேண்டும். புட்டபர்த்தியில் அப்பொழுதே மருத்துவ, கல்வி நிறுவனங்கள் எழும்பியிருந்தன. அவை யாவும் இலவசம். ஊரை ஒட்டி சித்ராவதி ஆறு ஒரு சிறு கால்வாயாக ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் அங்கு வேறொரு கட்டடம் இருந்தது. அப்பொழுது இந்தியாவின் பெரும் நகரங்களில்- சென்னை அவற்றில் ஒன்றாக இல்லை-- மட்டுமே இருந்த பிர்லாவின் பிளானடேரியம் அக்குக்கிராமத்தில் இருந்தது, பாபாவின் செல்வாக்கினால்.

பாபாவைப் பற்றி ஒரு அவதூறு கிளம்பி ஓய்ந்திருந்தது. அவருடன் நெருங்கிப் பழகியதாகத் தன்னை அறிவித்துக் கொணட டால் ப்ரூக் என்னும் மேற்கத்தியர் பாபாவை ஓரினச் சேர்க்கையாளர் என்று தனது புத்தகத்தில் எழுதியிருந்தார். இதுபோன்ற அம்பலங்கள் சந்நியாசிகளைத் தொலைத்துவிடும். சந்நியாசிகள் தங்களைப் பற்றித்தரும் உறுதி மொழிகளே இவற்றுக்கு மூலகாரணங்கள். சந்நியாசிகள் பிரம்மச்சரிய விரதம் பூணாவிடில் ஒன்றும்குடி முழுகிப் போகாது. நமது பாரம்பரியத்தில் ரிஷிகள் பத்தினிகளுடன் வாழ்ந்தவர்கள்தாம். சந்நியாசிகளே தங்கள் பாலுணர்வு விருப்புகளைத் தெரிவித்துவிட்டால் பரபரப்புகளுக்கு அங்கே இடமிராது. ஓஷோ ரஜனீஷ் இதைத்தான் செய்தார். தவிரவும் பாலுணர்வைத் தவிர்ப்பது மட்டும்தான் துறவா? பொதுவாழ்விற்கு வருபவர்கள் தங்களுக்குரிய தர்மத்தை எவ்விதம் ஒழுகுகிறார்கள் என்பதைத்தான் கண்காணிக்க வேண்டும். பாவ மன்னிப்பை காசுக்கு விற்றபொழுது மார்டின் லூதர் அதைக் கண்டித்து வெளியேறி புதிய மதத்தை தோற்றுவித்தார். அதுதான் அறிவார்ந்த எதிர்ப்பு. தனிமனிதனின் அந்தரங்கங்களைப் பகிரங்கப்படுத்துவது பண்பாடற்ற செயல். நல்லவேளையாகப் பாபாவின் ஓரினச் சேர்க்கைப் பற்றிய வம்பளப்பு விரைவாக முடிவினை எட்டியது.

பாபா தன்னை வழிபட்டவர்கள்மீது எந்தச் சுமையையும் திணிக்கவில்லை. அவரது அலுவலர்களுக்கு வெள்ளைச் சீருடை தரப்பட்டதைத் தவிர வேறு பிரத்யேகமான கட்டுப்பாடுகள் எதுவுமில்லை. புகைபிடித்தல், மதுஅருந்துதல், அசைவம் உண்ணுதல் ஆகியவை அவரது ஆசிரமங்களில் விலக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் பொதுவாகவே எல்லா ஆசிரமங்களிலும் அமல்படுத்தப்பட்டிருக்கும் நடைமுறைகள்தான்.

பாபா பளிச்சென்று தோன்றுவார். கௌபீனத்திலிருந்து அரைகுறை ஆடைகள் வரையிலான உடுப்புகளைத் தங்களுக்கு தேர்ந்தெடுக்கும் சாமியார்களிடமிருந்து அவர் மிகவும் வேறுபட்டவர். கழுத்திலிருந்து பாதம்வரை உடல்முழுவதையும் மறைக்கும் மடிப்பு கலையாத அங்கி. நன்கு சவரம் செய்யப்பட்ட முகம். ஒளிவட்டம் போன்ற அழகான எண்ணெய் பிசுக்கற்ற கறுத்தசிகை. நடை, அசைவுகள் எல்லாவற்றிலும் மென்மை. சிவசக்தி அவதாரம் என்று தன்னை அறிவித்துக் கொண்டதற்கு ஏற்றார்போல் வசீகரமான திருநங்கையாக அவர் இளமைக்கால புகைப்படங்களில் தோன்றுவார். பாபா நம் கண்முன் தோன்றிவிட்டால் அவரையே இமைகொட்டாது பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்கிற ஆவல் ஏற்படும். சாய் பக்தர்கள் பலர் அவர் தூர சென்றுவிட்டால்கூட பைனாகுலர் வழியாக அவரைத் தொடர்வார்கள். மடோனாவே நிர்வாணமாக பாபாவுக்குப் பக்கத்தில் வந்து நின்றால்கூட மடோனாவை பொருட்படுத்தாமல் பாபாவையே பார்த்துக்கொண்டிருப்பார்கள். அப்படியொரு காந்தசக்தி அவருக்கு.

கோபம் வராது. ஒரு முறைதான் அவர் கோபமாக இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். புட்டபர்த்தியில் ஒரு சமயம் நூற்றுக்கு மேற்பட்ட ஜோடிகளுக்கு இலவசத் திருமணங்கள் நடந்தபொழுது ஏற்பட்ட இரைச்சல் தாளாமல் மந்திர் என்றழைக்கப்படும். தனது குடியிருப்பிலிருந்து வெளிவந்து தனது அலுவலர்களைக் கடிந்துகொண்டார். எல்லாற்றிலும் ஒழுங்கை வேண்டுபவர். அதுதான் அவரது பலம். பாபாவின் சமூகப் பணிகளை-- அவற்றில் பெரும் சிகரங்களாக விளங்குவன அனந்தபூர், மேடக், சென்னை ஆகிய இடங்களுக்கு குடிதண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்தது.-- சுலபமாக பட்டியலிட்டுவிட முடியாது. இவற்றையெல்லாம் அவரால் செய்ய முடிந்ததற்கு அவருக்கு செல்வந்தர்களான அடியார்கள் அளித்த தாராளமான நன்கொடைகள் மட்டுமல்ல. பாபாவின் நிர்வாகத் திறமைதான் எல்லாவற்றையும்விட முக்கியமானது. தனது அனைத்து நிறுவனங்களையும் அவரே நேரிடையாக நிர்வாகம் செய்தார். பொதுவாக சாமியார்கள் நிர்வாகத்தில் கோட்டைவிடுவார்கள். மற்றவர்களை அளவிற்கதிகமாக சார்ந்திருப்பார்கள். தங்களைக் கவனித்துக்கொள்ளக்கூட அவர்களால் முடியாது போய்விடும். இதனால் பலவிதமான துன்பங்களுக்கும் ஆளாவார்கள். ராமகிருஷ்ண பரமஹம்சரை அவரது உதவியாளர் பாடாய்படுத்தி வைத்தார். பாபாவிடம் அதெல்லாம் நடக்காது. உடல்நலம் குன்றிப்போன கடைசி நாட்களில் எப்படியோ, அவர் நன்றாக இருந்தவரை, சிறுவயது முதலே தனது சேவைகளாக வளர்ந்த சகோதரரின் மகன் ரத்னாகர் தவிர வேறு உறவினர்கள் எவரையும் அண்டவிட்டதில்லை.

முதியவர்கள் மீது மிகுந்த அன்பு காட்டியவர் பாபா. மிகச்சிறந்த முதியோர் இல்லங்கள் அவரது ஆசிரமங்கள். அங்கு நிரந்தமாகக் குடியிருப்பவர்கள் அனைவரும் முதியவர்கள். பாபாவின் மீது அவர்களைப்போல் நம்பிக்கையும் பக்தியும் வைத்திருப்பவர்கள் வேறு எவருமில்லை. அவரின்றி அவர்களுக்கு அணுகூட அசையாது. அவர்களை பைத்தியங்கள் என்று வாஞ்சையுடன் பாபா சில வேளைகளில் அழைப்பார் என்று ஒரு ஆசிரம வாசி சொல்லக் கேட்டிருக்கிறேன். தங்களது உறவினர் வீட்டிற்கு செல்ல வேண்டுமெனறால் கூட முதலில் அவரது அனுமதியைத்தான் கோருவார்கள். பாபாவிடம் ஒரு குணாதிசயம் உண்டு. அவர் பல சமயங்களில் புதிர் தன்மையோடு நடந்து கொள்வார். ஏன் என்று அவர்கள் புரிந்து கொள்ள முடியாமல் அவர்களுக்கு அனுமதி மறுப்பார். ‘உங்களுக்கு அனுகூலமாக இருந்தால் செய்யுங்கள்’ என்று மட்டும் கூறினால் அவருக்கு அதில் விருப்பமில்லை என்று பொருள். பின்னர் என்ன அவர்கள் ஓர் அடி கூட ஆசிரமத்தைவிட்டு வெளியே வைக்க மாட்டார்கள். அதேபோல் எவ்வித முன்னறிவிப்புமின்றி பாபா பிரசாந்தி நிலையத்திலிருந்து ஒயிட் பீல்டுக்கு கிளம்பி விடுவார். அவரருகிலேயே சதாகாலமும் இருக்க வேண்டும் என அவாவும் அவரது அடியார்களும் உடனேயே அவருக்குப் பின்னால் அடுத்த சில நிமிடங்களில் புறப்பட்டுவிடுவார்கள். புட்டபர்த்தி. பெங்களூர், கொடைக்கானல் ஆகியவை அவர் செல்லுமிடங்கள். சென்னை சேமியர்ஸ் சாலையிலுள்ள சுந்தரம் இல்லத்திற்கு ஆண்டிற்கொருமுறை வந்து கொண்டிருந்தவர் திடீரென அதையும் நிறுத்திவிட்டார். உகாண்டா தவிர வேறு வெளிநாடு எதுவும் சென்றதில்லை.
சாய்பாபா யார்? மனிதரா? அவதாரமா?

தன்னைக் கடவுள் என்று அவர் அடிக்கடி கூறியதில்லை. அதிசயங்கள் நிகழ்த்துவதையும் அவர் பின்னாட்களில் வெகுவாகக் குறைத்துக் கொண்டார். பிறப்பிலும் இறப்பிலும் இன்ன பிறவற்றிலும் அவர் மனிதராகத்தான் வாழ்ந்து மறைந்தார். இதற்கிடையே அவர் அவதாரம் என்பது சர்ச்சைக்குரிய ஒன்றாக உள்ளது. கடவுளின் அவதாரம், தூதர் என்றெல்லாம் ஒருவர் தன்னைப் பற்றிக்கூறும் பொழுது அவர் மனிதர்கள் காலம் காலமாக எழுப்பும் கேள்விகளுக்கு என்ன பதில்களைத் தருகிறார் என்பதைப் பார்க்க வேண்டும். கடவுளின் அவதாரங்கள் ஏன் எப்பொழுதும் மனிதர்களின் ஒழுக்கங்களைப் பற்றியே பேசுகிறார்கள்? என்றும் விடை காணவியலாத பிறப்பு இறப்பு குறித்த ஆச்சர்யங்கள் மட்டுமின்றி பிரபஞ்சத்தைப்பற்றிய மனிதர்களின் சந்தேகங்களை ஏன் அவர்கள் தீர்த்து வைப்பதில்லை? அவர்கள் புவிக்கு மட்டுந்தான் காப்பாளர்களா? உலகம் உருண்டை, அது சூரியனை சுற்றுகிறது என்பதிலிருந்து தொடங்கி மனிதனின் அறிவார்ந்த ஏக்கங்களுக்கு செவிசாய்ப்பவை மனிதனின் விஞ்ஞான செயல்பாடுகள்தான்.

விஞ்ஞானப் புதிர்களைத் தீர்த்து வைக்காவிடினும் அப்துல் கலாம் கூறியதைப்போல் மக்களிடையே கல்விக்கான விழிப்புணர்வை ஊட்டியதில் பாபாவிற்கு சிறப்பான பங்குண்டு. பாபா செய்த பல நற்பணிகளை நியாயமாக அரசாங்கம் செய்திருக்க வேண்டும். ஊழல் மலிந்த நமது அரசாங்கம் அவற்றை செய்யத் தவறியது. தனிமனிதனாக அவற்றை செய்து காட்டினார் பாபா. பாபாவின் அன்பும் கருணையும் கோடிக்கணக்கான மக்களின் மனதில் அமைதியையும் மகிழ்ச்சியையும் உருவாக்கியுள்ளன.

Comments

பாபாவைப் பற்றி மிக அருமையாக விளக்கமாக அம்ஷன் குமார் அவர்கள் எழுதியுள்ளார். அன்பே கடவுள்... சேவையே கடவுளுக்குச் செய்யும் திருப்பணியென உலகிற்கு உணர்த்தியவர் பாபா... உலக அமைதிக்காகவும் உலக மகிழ்ச்சிக்காகவும் பாபாவின் பணி மகத்துவமானது.... அவர் வழி உலகம் இயங்குமானால் இந்த உலகம்தான் சொர்க்க பூமி...

Popular posts from this blog