Skip to main content

எதையாவது சொல்லட்டுமா........36

மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி பஸ்ஸில் செல்லும்போதெல்லாம் என் கண்ணில் அடிக்கடி தட்டுப்படுவது திருக்குறள். பெரும்பாலான குறலுடன் நான் ஒத்துப் போயிருக்கிறேன். சில குறள்களை நினைத்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஆனாலும் போதனை செய்வது எனக்குப்பிடிக்காத ஒன்று. உலகத்தில் ஒவ்வொருவரும் இன்னொருவருக்குப் போதனை செய்வதைத்தான் விரும்புவார்கள். பதவி மமதைப் பிடித்தவர்களுக்குத் தன்னடக்கம் என்பது தெரியாது. அவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் மாதிரி சுற்றித் திரிவார்கள். ரோடில் நடந்துசென்றால் எல்லோரும் ஒன்றுதான்.

நான் சமீபத்தில் படித்த ஒரு குறள்.

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.


எனக்கு என்னமோ இந்தக் குறளைப் படிக்கும்போது வள்ளூவர் தெரியாமல் எதையோ சொல்கிறார் என்றே எனக்குத் தோன்றியது. வள்ளுவரை இழிவுப் படுத்துவதாக யாரும் நினைக்கக் கூடாது. எனக்கு அந்தத் தகுதியும் கிடையாது. ஆனால் இந்தக் குறளைப் படித்ததிலிருந்து எனக்கு என்னமோ உறுத்திக்கொண்டே இருக்கிறது.

முதலில் இந்த உலகத்தில் தோன்றுவது என்பதே நம் கையில் இல்லை. ஒரு அணும் பெண்ணும் உள்ள இச்சையில் ஒவ்வொருவரும் பூமியில் அவதரிக்கிறோம். அதேபோல் நம் பிள்ளைகளும் அப்படித்தான் பிறக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, எப்படி புகழோடு தோன்ற முடியும்? புகழ் என்பதே அபத்தமானது.

கொஞ்ச நாட்கள் முன் டிவியில் பல நிகழ்ச்சிகளில் ஒருவர் அடிக்கடி தோன்றிகொண்டே இருப்பார். அவர்தான் ஒரு தேசிய வங்கியில் தலைவர் பதவியில் இருந்தவர். எல்லா விழாக்களுக்கும் வங்கியிலிருந்து பணத்தை வாரி இழைப்பார். அதைப் பார்த்து அவரை எல்லோரும் கூப்பிடுவார்கள்.

ஒரு முறை நகுலன் என்ற படைப்பாளிக்கு விருது வழங்கினார்கள். சாந்தோம் விருது. நகுலனுக்கு கூச்சமான கூச்சம். அவர் உடல் நடுங்கத் தொடங்கியது. எப்படி மேடையில் போய் அமர்ந்து விருது வாங்கப் போகிறோம் என்ற அச்சமும் அவரிடம் இருந்தது. ஆனால் அவர் பக்கத்தில் நம் வங்கித் தலைவர். அவருக்கு நகுலனைப் பற்றி ஒன்றும் தெரியாது. அவர் புத்தகத்தை அவர் எழுத்துக் கூட்டிக்கூட படித்திருக்க மாட்டார். அப்படிப்பட்டவர் கையிலிருந்துதான் நகுலன் விருது வாங்கப் போகிறார்.

விருது வழங்கும் தருணம் வந்தபோது நகுலன் தடுமாறி எப்படியோ போய் நின்று விருதை வாங்க நின்றுவிட்டார். நம்முடைய வங்கித் தலைவரோ அந்தத் தருணத்திற்காக காத்துக்கொண்டிருந்தார். டிவியில் அவர் முகம் பளிச்சென்று விழ சிரித்தபடியே நகுலனுக்கு விருதை வழங்குகிறார். இப்படி புகழோடு தோன்றிய வங்கித் தலைவர் இறுதியில் சிறையில் கம்பி எண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டார். சில ஆண்டுகளுக்குள்ளாகவே எப்படி நிலைமை மாறி விட்டது.

இப்போது சொல்லுங்கள் திருவள்ளுவர் எந்தத் தோன்றலைச் சொல்கிறார். இது மாதிரி அர்த்தமே சரியாக வராத குறளை நான் படித்ததே இல்லை. புகழ் என்பது ஒன்றுமில்லை. அதே போல் தோன்றுதலும் ஒன்றுமில்லை.

ஒருவர் புகழோடுதான் தோன்ற வேண்டும் என்பதில்லை. அதேபோல் புகழ் என்பதும் ஒருவித அபத்தம்தான். ஏன் வள்ளுவர் இதுமாதிரி ஒரு குறளை படைத்தார்? இந்தக் கேள்வி அடிக்கடி என்னிடம் தோன்றி கொண்டே இருக்கிறது.

Comments

திருவள்ளுவர் கூறியது
தோன்றின் நகுலன் போல் தோன்றுக அஃதிலார் தோன்றலிற் தோன்றாமை நன்று என்று.
shanmugavel said…
//ரோடில் நடந்துசென்றால் எல்லோரும் ஒன்றுதான்//-சரி.திருவள்ளுவர்,ஒரு செயலில்,பணியில் தோன்றுவதை சொல்லியிருப்பாரோ?
Unknown said…
வணக்கம் சார், நீண்ட இடைவெளிக்கு பின் உங்களிடம் பேசுகிறேன்

ஆனால் நவீன விருச்சத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன் .

யாரும் எண்ணாத எண்ணங்கள் நீங்கள் சொல்வது ..

யோசிக்க வைக்கிறது ..
எனக்கு குமரி எஸ். நீலகண்டன் சொன்ன விளக்கவுரை பிடித்திருக்கிறது
புகழ் என்பதை வேறு அர்த்தத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
திருவள்ளுவர் காலத்தில் இருந்த புகழ் என்ற சொல்லின் அர்த்தம் இன்றைய காலத்தில் வேறு அர்த்தத்தில் திரிந்து விட்டது.ஆட்டோ சங்கர், ரவுடி வீரமணி பெயர் கூடதான் தினத்தந்தியில் வரு‌கிறது. அவர்களை புகழ் பெற்றவர்கள் எ‌ன்று சொல்ல முடியுமா? புகழப்பெற்றவர்களே புகழ் அடைந்தவர்கள். ஒரு கிராமத்தில் யாருக்குமே தெரியாமல் யாரோ ஒருவர் இருப்பார். அவர் ஏதாவது நல்லது செய்திருப்பார். அவர் பொருட்டு எல்லாருக்கும் மழை பெய்யும். மழை நல்லவர்களை புகழ்கிறது. புகழப்பெற்ற அனைவரும் புகழ் அடைந்தவர்களே.
Aathira mullai said…
இப்படி இதுவரை சிந்தித்ததே இல்லையே.. இதுவும் சிந்திக்க வேண்டியதுதான். எனக்கு இதுவரை அவர் எழுதிய 6 வது அதிகாரத்தில்தான் உடன்பாடு இல்லாமல் இருந்தது.
ஆதி said…
இதனை நானும் பல முறை சிந்தித்திருக்கிறேன்..

புகழுடைய எல்லோரும் இகழவும் படுகிறவர்களுமாக இருக்கிறார்கள்..

ஆதலால் இன்னொருத்தர் போற் தோன்றுக என்பதே அபத்தம் தான், நகுலனை புகழ்வோரும் உண்டு, இகழ்வோரும் உண்டு, ஆதலால் நகுலன் போல் தோன்றுக புகழாய் என்று சொல்வதே ஏற்க இயலாது..

இது போல், இந்த குறளிலும் எனக்கு உடன்பாடில்லை...

தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
புகழுக்கான அளவுகோல் ஒவ்வொரு தனி மனிதரின் இயல்பையும் அவரின் ஆர்வத்தையும் பொறுத்தது. காந்தியை இகழ்பவர்கள் கூட இருக்கிறார்கள். அதற்காக காந்தியின் புகழை குறைத்து மதிப்பிட முடியாது. எந்தத் துறையானாலும் அதிகமாக சமூக நன்மை சார்ந்து தன்னலமின்றி இயங்கும் ஆளுமைகளை சமூகம் புகழுக்குரியவர்களாக கருதுகிறது. திருவள்ளுவர் கூட அந்த நோக்கிலேயேச் சொல்லி இருக்கலாம்.
குமரி எஸ். நீலகண்டன்
yaavarumkelir said…
தோன்றல் என்பது பிறத்தல் என்ற குறுகிய உணர்வில் பார்த்தால் அப்படித்தான் தெரியும். உங்களையே கேட்டுப் பாருங்கள்? அதே போல் புகழ் என்பதும் உங்கள் அளவுகோலால் பார்த்தால் அப்படித்தான் தெரியும்.
Unknown said…
ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால், புகழோடு தோன்ற வேண்டும்; அத்தகைய சிறப்பு இல்லாதவர், அங்குத் தோன்றுவதைவிடத், தோன்றாமலிருத்தல் நல்லது. - குறள் விளக்கத்துக்கும் உங்கள் பதிவுக்கும் சம்மந்தமே இல்லை. :(

Popular posts from this blog