Skip to main content

எதையாவது சொல்லட்டுமா 35

சிறிது நேரத்திற்குமுன் லட்சுமிபதி போன் செய்தார். 31.1.2011லிருந்து இந்த ஆண்டு முடியும்வரை க.நா.சு நூற்றாண்டு. நாம் அவர் நினைவாக எதாவது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார். நான் சீகாழியில் இருப்பது ஒரு குறையாகப் பட்டாலும், க.நா.சு விஷயமாக எதாவது செய்ய வேண்டும். மாதம் ஒருமுறை கூட்டம் போடலாம் என்று அவரிடம் குறிப்பிட்டேன். பின் அவருடைய புத்தகங்கள் எதாவது கொண்டு வரலாம். அதற்கு இப்போது எந்தத் தடையும் கிடையாது. நான் ஏற்கனவே மையம் வெளியீடாக வந்திருந்த க.நா.சு கவிதைகள் சிலவற்றை திரும்பவும் அச்சடிக்க வைத்திருக்கிறேன். உண்மையில் புத்தகக் காட்சியின்போது அதை இலவசமாக அளிக்க தயாரித்துக் கொண்டிருந்தேன். கடைசி நேரத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் போய் விட்டது.

க.நா.சுவை அவருடைய கடைசிக் கால கட்டத்தில்தான் சந்தித்தேன். புத்தகம் படிப்பது எழுதுவது இதைத் தவிர வேறு எதையாவது சிந்தித்திருப்பாரா என்பது தெரியவில்லை. ஒருமுறை நான், நகுலன், வைத்தியநாதன், ராஜகோபாலன், ஞானக்கூத்தன், ஸ்ரீனிவாஸன் என்று அத்தனைப் பேர்களும் க.நா.சுவை அவருடைய மைலாப்பூர் வீட்டில் சந்தித்தோம். சிறிது நேரம் பேசிவிட்டு எல்லோரும் மைலாப்பூரில் உள்ள ராயர் கபேக்குச் சென்றோம். க.நா.சுவுடன் என்ன பேசினோம் என்பது ஞாபகத்தில் இல்லை. ராயர் கபேயில் டிபன் நன்றாக இருக்கும். க.நா.சுவிற்கு எங்கே டிபன் நன்றாக இருக்கும் என்பது தெரியும். அவர்தாதன் எங்களை அங்கு அழைத்துக்கொண்டு போனார். ராயர் கபேயைப் பற்றி அவர் ஒரு கவிதையும் எழுதியிருக்கிறார். அந்தக் கவிதையின் தலைப்பு கி.வா.ஜ. இதோ அவர் எழுதிய கவிதை.

கி.வா.ஜ வை
நான் இலக்கிய அளவில்
மதிக்க மாட்டேன். அவருக்குத்
தெரிந்தது எனக்குத் தெரியாது
என்று ஏற்றுக் கொள்கிறேன்
ஆனால் அவருக்கு நான்
கடன் பட்டவன். 1938ல்
எனக்கு ராயர் கபேயை -
கச்சேரித் தெரு மைலாப்பூரில்
காட்டித் தந்தார். இப்போதும்
பல சமயம் திருப்தியாக ரவா தோசை சாப்பிட
போய் வருகிறேன்.

க.நா.சு தன் கவிதைகளைக் குறித்துத் தெளிவான முடிவுகளை வைத்திருந்தார். இன்னும் கேட்டால், ந.பிச்சமூர்த்தியை விட க.நா.சுவைத்தான் புதுக்கவிதையின் தந்தை என்று குறிப்பிடலாமென்று தோன்றுகிறது. ஏனெனில் கவிதையின் தன்மையை உடைத்துப் புதுமை செய்தவர் க.நா.சு.

இரண்டு வார்த்தைகள் என்று க.நா.சு எழுதியதை இங்கே கொடுக்க விரும்புகிறேன்.

கவிதைக்கு முன்னுரையோ பின்னுரையோ அல்லது வியாக்கியான விரிவுரைகளோ அநாவசியம் என்கிற நினைப்பும் எனக்குண்டு.

1985ல் கவிதை எழுத நினைப்பவன் ஒரு விதத்தில் அசட்டுப் பட்டம் கட்டிக்கொள்ளத் தயாராக இருப்பவன்தான். கவிதை பத்திரிகைத் துணுக்குகளாகவும், அரசியல் காமெண்டுகளாகவும், சினிமா ரெட்டை அர்த்தங்களாகவும் உருப்பெற்றபின் கவிதை எழுத நினைப்பது ஒரு விதத்தில் தவறு என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் கவிதை எழுதுவதற்கு உள்ளூர இருக்கிற உந்துதல் அடிப்படையான மனுஷ்யத்வம் நிறைந்த உந்துதல் . அவரவர் சக்திக்கு ஏற்ப ஒவ்வொருவரும் கவிதை எழுதிப் பார்ப்பதும் வெளியிட முடியுமானால் வெளியிடுவதும் உலகில் தவிர்க்க முடியாத காரியம்.

எனக்கு நான் புதுக்கவிதை என்று எண்ணுவதில் அபார நம்பிக்கை. அது நிஜமாகவே கவிதையாக இருப்பதுடன் வசனத்தின் பல அம்சங்களையும் கொண்டதாக அடைமொழிகளையும் படிமங்களையும் தேடி ஓடாததாக இருக்க வேண்டும். உணர்ச்சி என்கிற தூக்கக் கலப்பில்லாத ஒரு தாக்கத்துடன் அறிவுத் தாக்கமும் பெற்றிருந்தால் தான் கவிதை புதுக்கவிதையாகிறது என்று எண்ணுபவன் நான்.

இந்த ஆண்டு முழுவதும் க.நாசுவை நினைவுப்படுத்தி எதையாவது செய்ய முடியுமா?

Comments

க ந சு வின் படைப்புக்களை இந்த வருடம் முழுதும் இணையத்தில பகிர்வோம்