Skip to main content

செப்டம்பர் மாத இலக்கியக்கூட்டம்


வீன விருட்சம் செப்டம்பர் மாதக் கூட்டம் 27.09.2009 மாலை 6 மணிக்கு ஆரம்பித்தது. நான் அடித்துப்பிடித்துக் கொண்டு ககஅ பில்டிங் சென்றேன். சுத்தமாக கூட்டத்திற்கு யாரும் வர மாட்டார்கள் என்பதில் பலமான நம்பிக்கையுடன் இருந்தேன். காரணம். மழை. அப்படி யாரும் வராவிட்டால் கொடுத்த காசுக்கு (ரூ.250) 3 மணி நேரம் அங்கு தனியாக இருந்துவிட்டு வருவது என்று தீர்மானித்தேன். நான் உள்ளே நுழைந்தவுடனே மழை பிடித்துக்கொண்டது. லாவண்யா என்கிற என் நண்பர், "நான் வீட்டைவிட்டு கிளம்பிவிட்டேன். மழை பிடித்துக்கொண்டது. வீட்டிற்குப் போகட்டுமா?" என்று கேட்டார். "வரவே வேண்டாம். வீட்டிற்குப் போய்விடுங்கள்," என்றேன். பழைய அழகியசிங்கராக இருந்தால், கூட்டம் ஏற்பாடு பண்ணிவிட்டு யாரும் வரவில்லை என்றால் பெரிதாக கவலைப்படுவேன். இப்போதோ தெளிவாக இருக்கிறேன். இந்தக் கூட்டம் ஏன் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அதற்கான பதிலையும் மனதிற்குள் வைத்திருக்கிறேன். பதில் என்ன தெரியுமா? வெறுமனே.

இக் கூட்டத்தில் பேச சா கந்தசாமியையும், யவனிகா ஸ்ரீராமனையும் கூப்பிட்டேன். சா கந்தசாமி சிறிது நேரத்தில் வந்துவிட்டார். ஆட்டோவைப் பிடித்துக்கொண்டு வந்து விட்டேன். அவரைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது. எல்லாவற்றையும் எளிமையாக சிந்திப்பார். சாதனை மன்னர். ஆனால் பந்தா இல்லாமல் சாதாரணமாக இருப்பார்.
உடனே பேச ஆரம்பித்துவிட்டார். யாரும் வராவிட்டால் அவரைப் பேட்டிகண்டு விருட்சத்தில் போட்டுவிடலாமா என்று நினைத்தேன். என்னுடைய டேப் ரெக்கார்டர் மக்கர் பண்ணுகிறது என்பதை அப்போதுதான் கண்டுபிடித்தேன். போன கூட்டத்தை நான் ரிக்கார்ட் பண்ணியதெல்லாம் வீணாகப் போய்விட்டது. ஃபேன்களின் சப்தம் மனிதர்களின் சப்தங்களை பதியவிடாமல் செய்து விட்டது. கூட்டத்தில் பதியவிடாமல் 2 வாரங்கள் கம்ப்யூட்டர் மக்கர் செய்துவிட்டது. அதனால் போன கூட்டத்தை பதிவு செய்ய முடியவில்லை. மேலும் என்னுடைய மெமரி ரொம்ப வீக். உடனே ஞாபகத்திலிருந்து பதிவு செய்யாவிட்டால் எல்லாம் தப்பாகப் போய்விடும்.

கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கூடத் தொடங்கியது. கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்விட்டது. மௌனி என்ற எழுத்தாளரைப் பற்றி யாருக்காவது தெரியுமா? அவர் நூற்றாண்டு கடந்து போய் 2 ஆண்டுகள் ஓடி விட்டன. அவர் எழுதியது மொத்தமே 24 கதைகள்.

மௌனியைப்பற்றி எப்படிப் பேச்சு வந்தது. பார்த்தசாரதி கோயில் எதிரில் உள்ள குளத்தில் உட்கார்ந்துகொண்டு நானும் ஞானக்கூத்தனும் பேசிக்கொண்டிருந்தோம். 'மெல்ல நகர்ந்த நூற்றாண்டு என்ற தலைப்பில் மௌனியைப் பற்றி கூட்டம் நடத்த வேண்டுமென்று கூறினார் ஞானக்கூத்தன். உடனே மௌனி என் தலைக்குள் நுழைந்துவிட்டார்.

சா கந்தசாமி, கவிஞர் வைதீஸ்வரன் போன்றவர்கள் மௌனியை நேரில் சந்தித்திருக்கிறார்.

'மௌனி ஒரு உற்சாகமானவர். என்னைப் பார்த்தாலே போதும், கந்தசாமி என்று கத்திக்கொண்டு அவர் வீட்டு சமையலறை வரைக்கும் அழைத்துக்கொண்டு போவார். உடனே உபசரிக்காமல் இருக்க மாட்டார்.....அவருக்கு எத்தனையோ துன்பம்... ஒரு பையன் டிரெயினில் அடிப்பட்டு இறந்து விட்டான்....இன்னொரு பையனுக்கு மனநிலை பிறழ்ந்து விட்டது....அவர் ஒண்ணும் சம்பாதிக்கலை....சாதாரண மெடில் க்ளாஸ் குடும்பம்...அவர் எழுத்தில எந்த அரசியலும் இல்லை..அவர் முற்போக்கும் இல்லை..பிற்போக்கும் இல்லை...
கந்தசாமி மௌனியை மட்டும் பேசவில்லை வேற சிலவற்றையும் பேசினார். "நாமெல்லாம் இங்கே கூடியிருக்கோம். ஆனா நாமெல்லாம் தனித்தனியா இருக்கோம். பொதுவா நாமெல்லாம் மனிதர்கள்.."

"பி எஸ் ராமையா மௌனியைப் பார்க்கும்போது அவர் நோட்டில் கதைகள் எழுதி வைத்திருந்தார். அந்த நோட்டிலிருந்துதான் கதைகளை மணிக்கொடியில் ராமையா பிரசுரம் செய்தார்..."

"மௌனி என்கிற பெயரைக்கூட ராமையாதான் அவருக்குவைத்தாராம்," என்றேன் குறுக்கே நான்.

"ஆமாம். அவர் இயற்பெயர் மணி. ரொம்ப வருஷத்திற்குப் பிறகு மௌனி எங்களால் கொண்டுவந்த கசடதபற பத்திரிகையில் ஒரே ஒரு கதை எழுதியிருக்கிறார். மௌனி கதைகளில் எந்த ஜாதி என்பது கிடையாது. ஏன் பெயரே கிடையாது...எல்லாரும் மனிதர்கள்...மௌனி மாதிரி இன்னொருத்தர் கதை எழுத முடியாது..."

"ஆனால் கசடதபறவில் பல எழுத்தாளர்கள் மௌனியைப் படித்து கதாபாத்திரங்களுக்குப் பெயர் வைக்காமல் பல கதைகள் வெளிவந்தன..."என்றேன்.

என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த தேவக்கோட்டை மூர்த்தி,"நான் கூட யாரையாவது பார்த்தால் இரக்கப்பட்டு எதாவது கொடுக்கிறேன். மனிதாபிமானம் இன்று எல்லாரிடமும்தான் இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு மௌனியை எடை போட முடியாது. அவர் படைப்புகளைப் பற்றிதான் நாம் பேச வேண்டும்.. கந்தசாமி அதுமாதிரி பேசவில்லை என்று தோன்றுகிறது.."

தஞ்சாவூரிலிருந்து வந்திருந்த சாந்தாராம் என்பவர் மிகச் சுவாரசியமாய் ராமையாவைப்பற்றி பல தகவல்களைத் தெரிவித்தார். "வயதான படைப்பாளிகள் மூவரை ஒரு பத்திரிகை பேட்டி கண்டது. அப்பேட்டியை உடனடியாக அப்பத்திரிகை பிரசுரம் செய்யவில்லை. அப்படி கிடப்பில் போட்டுவிட்டது. பல மாதங்கள் கழித்து ராமையா இறந்தபிறகு, அப்போதுதான் பேட்டி கண்டதுபோல் பிரசுரம் செய்தது,"என்றார்.

அவர் சொன்ன இன்னொரு தகவல். "ராமையா முதலில் எதுவும் எழுதவில்லை. மணிக்கொடியில் எல்லோருடைய படைப்புகளைப் பிரசுரம் செய்ய செய்ய அவரும் எழுதுவதில் தூண்டுதல் பெற்று எழுத ஆரம்பித்தார்."

எஸ் சுவாமிநாதன் பேசும்போது,"மௌனியைப் பற்றி சரியான இலக்கியத் தடம் உருவாகவில்லை. ஆனால் தமிழில் மௌனியைப் போல் ஒருவர் கிடையாது. அவர் எழுத்தில் எந்த வருணனையும் கிடையாது. அனாவசியமாய் ஒரு வார்த்தை கிடையாது... அவர் மனதிற்காகத்தான் எழுதினார். இன்னும் அவர் படைப்புகளைப்படித்து ஆராய வேண்டும்...இது போதாது என்றார."

வைதீஸ்வரன்,"மௌனி அவர்படைப்புகளை மட்டும்தான் சொல்வார்... மற்ற படைப்பாளிகள் பற்றி ஒன்றும் சொல்ல மாட்டார், என்றார்.
(இன்னும் தொடரும்)

Comments

Popular posts from this blog