Skip to main content

நான்,பிரமிள்,விசிறி சாமியார்.......9









The Active side of infinity என்ற புத்தகம் Carlos Castenada எழுதியது. பல ஆண்டுகளுக்கு முன் இப் புத்தகத்தைப் படித்திருக்கிறேன். இப் புத்தகத்தில் ஒரு விஷயம் என் மனதை விட்டு நீங்கவில்லை. நாம் எத்தனையோ பேர்களை சந்திக்கிறோம். எத்தனையோ சம்பவங்கள் நம் முன்னால் நடக்கின்றன. நாமும் அதில் ஒரு பாத்திரமாக இருக்கிறோம். நம் முன்னால் நாமும் பாத்திரமாக மாறி நடக்கும் பல நிகழ்ச்சிகளில் சம்பவம் நடந்த சமயத்தில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம். அப்போது நாம் கோபமாக இருக்கிறோமா துக்கமாக இருக்கிறோமா? ஒரு சம்பவம் நடந்து முடிந்தபின் அந்தச் சம்பவத்திலிருந்து விலகி நாம் எப்படி அதை எதிர்கொள்கிறோம். Castenada சம்பவத்தை திரும்பவும் யோசிக்க சொல்கிறார். அந்தச் சம்பவத்தை ஞாபக அடுக்கிலிருந்து எடுக்கச் சொல்கிறார். எடுத்து அதை படத்திற்கு ப்ரேம் போடுவதுபோல் ஞாபகத்திலிருந்து கொண்டு வரச் சொல்கிறார். அந்தச் சம்பவத்தை ஒரு சட்டம் மாதிரி உருவாக்கி அதை ஞாபகத்தில் பத்திரப்படுத்தச் சொல்கிறார். ஞாபகத்திலிருந்து எடுக்கப்பட்ட அந்தச் சம்பவம் என்கிற சட்டத்தை திரும்பவும் பார்க்கச் சொல்கிறார். அதில் நாம் எப்படி நடந்துகொண்டிருக்கிறோம். பல ஆண்டுகள் கழித்து அந்தச் சம்பவத்தைப் பார்க்கும்போது, அதை Subject ஆகப் பார்க்காமல் Object ஆகப் பார்ப்போம்.

பிரமிளுடன் நான் விசிறி சாமியாரைப் பார்த்தது முதலில் விருப்பமாக இருந்தாலும், திரும்பி வரும்போது, கசப்பான அனுபவமாக எனக்குத் தோன்றியது. பல நாட்கள் பலரிடம் அந்தச் சம்பவத்தைப் பற்றி சொல்லியிருக்கிறேன். அதன் பிறகு, ஏனோ விசிறி சாமியாரைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று எனக்குத் தோன்றவில்லை. பிரமிளைப் பார்க்கும்போது விசிறி சாமியார் பற்றி அவர் குறிப்பிடுவதைக் கேட்டுக்கொள்வேன். ஆனால் விசிறி சாமியார் பற்றி என் மதிப்பு எந்த அளவிலும் குறையவில்லை. அவரைச் சந்தித்தவர்கள் அவரைப் பற்றி சொல்வதை என் ஞாபகத்தில் நான் பதிவு செய்திருக்கிறேன். பிரமிள் ஒரு முறை விசிறி சாமியார் ஒரு நாய் வைத்திருக்கிறார் என்றும், அந்த நாயிற்கு சாய்பாபா என்று பெயர் என்று குறிப்பிட்டுள்ளார். விசிறி சாமியார் யாரை விரும்புகிறாரோ அவர்தான் அவரைப் பார்க்க முடியும் என்றும் பிரமிள் குறிப்பிட்டிருக்கிறார். யாரையாவது பார்க்க பிடிக்கவில்லை என்றால் விசிறி சாமியார் அவரைப் பார்க்க வந்தவர்களை போகும்படி சொல்லி திருப்பி அனுப்பி விடுவார் என்று பிரமிள் குறிப்பிட்டிருக்கிறார். பிரமிள் பல சாமியார்களைப் பற்றி பல விஷயங்கள் குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படி பல சம்பவங்களை நாம் ஞாபகச் சட்டங்களாக மாற்றி, அந்த ஞாபகச் சட்டங்களைத் திரும்பவும் நினைவுக்குக் கொண்டு வருவது அற்புதமான ஒன்றாக அப்புத்தகம் குறிப்பிடுகிறது. நடந்து போன நிகழ்ச்சிகளை நாம் இப்படித்தான் அசை போட முடியும். ஆனால் நடந்து முடிந்த அச் சம்பவங்களுடன் இப்போது நமக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை. இதுமாதிரியான ஞாபகச் சட்டங்களை பிறருடன் பகிரவும் செய்யலாம்.

சி சு செல்லப்பா திருவல்லிக்கேணியில் உள்ள பிள்ளையார் கோயில் தெருவில் இருக்கும்போது அவரைப் பார்க்கச் செல்வேன். தள்ளாத வயதில் தன் பிள்ளையுடன் இல்லாமல் தனியாக மனைவியை அழைத்து வந்துவிட்டார். மிகச் சின்ன ஒரு வீட்டில் குடியிருந்தார். ஃபேன் போடக்கூட மாட்டார். அந்த வயதில் சுதந்திர தாகம் என்ற அவர் நாவலைப் புத்தகமாகக் கொண்டு வர வேண்டும் என்ற ஆவல் அவரை விட்டுப் போகவில்லை. அது எப்படி சாத்தியமாகுமென்ற திகைப்புத்தான் என்னிடமிருந்தது. ஒவ்வொரு முறையும் அவரைப் பார்க்கும்போதும் ஞாபகச் சட்டங்களிலிருந்து பல விஷயங்களை அவர் வெளிப்படுத்துவார். ஒருமுறை அவர் க.நா.சுவைப் பற்றி குறிப்பிட்டது எனக்கு இன்னும் திகைப்பு ஏற்படாமலில்லை.

தமிழைப் பொறுத்தவரை எழுத்தால் அதிகப் பலன் அடையமுடியாது. எழுத்தையே நம்பி வாழ்க்கை நடத்துவது என்பது ரொம்பவும் சிரமமான ஒன்று. திறமையானவராக இருந்தாலும் எழுத்து பசியைத் தீர்க்காது. தமிழ் எழுத்தாளர்களில் ஒருசிலரைத் தவிர வெற்றி கண்டவர்கள் மிகக் குறைவு. தமிழில் எழுதினால் அதிகப் பணம் கிடைக்காது என்பதால் ஆங்கிலத்தில் எழுதி சம்பாதித்தவர் க.நா.சு. எப்போதும் படிப்பதும் எழுதுவதும்தான் அவர் வாழ்க்கை. சி சு செல்லப்பா மணிக்கொடி எழுத்தாளர்களுடன் நின்றுவிட்டார். ஆனால் க.நா.சு அப்படி அல்ல. அவர் மரணம் அடையும் முன்புகூட விக்கிரமாதித்யன் உள்பட பலரைப் பற்றி குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.

சி சு செல்லப்பா க நா சுவைப் பற்றி சொன்ன விஷயம்தான் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. மயிலாப்பூரோ திருவல்லிக்கேணியோ க நா சுவிற்கென்று ஒரு இடத்தை தங்க ஏற்பாடு செய்தார் சி சு செ. க நா சுவிற்கு வாடகைக்கு விட்டவர், சி சு செ நம்பித்தான் வாடகைக்குக் கொடுத்துள்ளார். சில மாதங்களாக வாடகையை க நா சு கொடுக்காததால் அவரைப் பார்க்க வீட்டுக்காரர் வந்திருக்கிறார். வந்திருப்பவருக்கு ஒரே திகைப்பு. வீடு திறந்தே கிடந்தது. க நா சுவின் குடும்பமே இல்லை. "உங்கள் நண்பர் இப்படி செய்துவிட்டாரே?" என்று க நா சுவைப் பற்றி சி சு செல்லப்பாவிடம் முறையிட்டார் அந்த வீட்டின் சொந்தக்காரர். சி சு செல்லப்பாவிற்கு க நா சுவின் மீது பயங்கர கோபம். இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், எப்பவோ நடந்த ஒரு சம்பவத்தை சி சு செல்லப்பா என்னிடம் சொல்லும்போது க நா சுவின் மீது அவருக்கு உள்ள கோபம் தீரவில்லை. எனக்கு இதைக் கேட்டபோது க நா சுவின் மீதுதான் அதிக இரக்க உணர்ச்சி ஏற்பட்டது. எந்த நிலைமையில் க நா சு யாரிடமும் சொல்லாமல் அந்த இடத்தைவிட்டு கிளம்பியிருக்க வேண்டும். தமிழில் வெறுமனே எழுதி பணம் சம்பாதிக்க முடியாத நிலையில், யாரிடமும் சொல்லாமல் போவதென்றால்? எதுமாதிரியான பரிதாப நிலை? இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் சி சு செ அவருடைய ஞாபக அடுக்கிலிருந்து வெளிப்படுத்திய விஷயத்தில் க நா சு மீது அவருடைய கோபத்தைத் தொடர்ந்ததாகவே எனக்குத் தோன்றியது.

(இன்னும் வரும்)


Comments

nadai suvarashyamaa irunthaalum kashdama irukku sir

ezhuththukku pinpu ulla nitharsanam oru maari suunyama irukku