துளி - 239
இன்று கநாசுவின் பிறந்தநாள் என்று முகநூலில் பலர் பகிர்ந்திருக்கிறார்கள்.
க.நா,சுவின் 100வது பிறந்தநாள் போது, கநாசு கவிதைகள் என்ற புத்தகம் ஒன்றைத் தயாரித்து எல்லோருக்கும் இலவசமாகக் கொடுத்தேன்.
அப்போது நான் சீர்காழி வங்கிக் கிளையில் பணி புரிந்துகொண்டிருந்தேன்.
நான் கொடுத்த பலருக்கு க.நா.சு யார் என்று தெரியவில்லை. நான் மயிலாடுதுறையில் தங்கியிருந்தேன். தினமும் பேருந்தில் அலுவலகம் செல்வேன். ஓட்டலில் , செய்தித்தாள் கடைகளில் எல்லா இடங்களிலும் கொடுத்தேன்.
யாரும் இலவசமாகக்கூட அதை வாங்கிக்கொள்ளவில்லை. இது பெரிய ஏமாற்றமாக எனக்கிருந்தது .
க.நா.சு எவ்வளவு பெரிய எழுத்தாளர் அவரைக் கூட யாருக்கும் தெரியவில்லையே என்று நினைத்துக்கொண்டேன்.
இன்று க.நா.சு . கவிதை ஒன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
வேஷம்
நான் அறிவாளி என்று வேஷம் போட்ட போது எல்லோரும்
என்னை அறிவாளி என்றார்கள்
நான், சோம்பேறியாக வேஷம் போட்டபோது எல்லோரும்
நான் எழுதத் தெரியாதவன் மாதிரி வேஷம் போட்டபோது
எல்லோரும், பாவம் அவனுக்கு எழுதவராது என்றார்கள்.
நான் பொய்யன் போல வேஷம் போட்டபோது
அவர்கள் எல்லோரும் என்னைப் பொய்யன் என்றார்கள்.
நான் பணக்காரன் போல நடந்துகொண்டபோது
அவர்கள் என்னைப் பணக்காரன் என்றார்கள்.
நான் எதையும் லட்சியம் பண்ணாதவன் மாதிரி வேஷம் போட்டபோது
நான் எதையும் லட்சியம் பண்ணாவதன் என்றார்கள்.
நானும் அறியாமலே, மனவலி தாங்காது நான் முனகியபோது
நான் துயருற்றவன் பேல வேஷம் போடுகிறேன் என்றார்கள்.
Comments