Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 114


அழகியசிங்கர்  

 டீ குடிக்கி

செல்வசங்கரன்


நல்லவேளை டீ குவளையை அடைந்துவிட்டார்
ஒரு டீயைக் குடித்து முடிப்பதற்கு இவ்வளவு நேரமென
ஒரு நேரம் கிடையாது
அதன் சூடு போவதற்குள் குடித்து முடிப்பதே
நல்ல டீ குடிக்கிக்கான சவால்
சூடு போய்க்கொண்டிருக்கிறது பாதி முடித்துவிட்டார்
முழுவதும் அதன் கதையை முடித்து அங்கிருந்து கிளம்ப,
இன்னொரு மலையையும் கடக்கவேண்டும்
ரம்மியமான மலை
இருபத்தைந்து ஆண்டுகளாக கடந்துகொண்டுதானே
இருக்கிறார்
அவரது நாற்காலிக்குக் கீழிருந்து விரியும்
பழைய பூ போட்ட கல் படியிறங்கி
வரும் வளைவில் திரும்பி சிறிது தூரம் நடந்தால்
அந்த டீயை அடைந்துவிடலாம்
இங்கிருந்தென அங்கிருந்தென
அதற்காக அவர் நடந்து போய் வருவதைப் பார்த்தால்
போங்கடா மயிருங்களாயென்று ஒரு நாள்
எல்லாவற்றையும் உதறி அப்படியே கிளம்பிடுவாரோ
என யாருக்கும் வரலாம்
அப்படியரு கூத்து அப்படியரு லயிப்பு
இருக்கையிலிருந்து எழுந்து செருமியபடி
சமஸ்தானம் கீழிறங்க ஆரம்பித்துவிட்டால்
அங்கு எதுவும் நடக்கலாம்.


நன்றி : கனிவின் சைஸ் - மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல். மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் - 636453 தொலைபேசி : 9894605371. பக்கங்கள் : 80 - விலை : 90

Comments