Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 113



அழகியசிங்கர்  


பேப்பர் பையன் 

பயணி




விடிந்தும் விடியாத காலை தெருக்களில்
சைக்கிளில் பேப்பர் போட்டுக்கொண்டு வருகிறான் பேப்பர் பையன்
மாடியில் குடியிருப்போருக்குக் கீழிருந்து வீசப்படும் பேப்பர்
வழக்கம்போல் பால்கனியில் விழாமல்
பால்கனியைக் கடந்து மாடியைக் கடந்து
காலைவேளை பறவைகளைக் கடந்து
வானத்தை நோக்கிச் செல்கிறது
வானம் நெருங்க நெருங்க
பேப்பர் தன்னைப் பூதாகரமாக விரித்துக் கொள்கிறது
வானமே கூரையாகவிருந்த இந்த நகருக்கு
இப்பொழுது பேப்பரே கூரையாகிவிட்டது
பேப்பரின் இருளும் ஒளியுமே நகரின் இரவு பகலாக மாறுகிறது
ஒவ்வொரு நாள் காலையிலும்
பேப்பரிலுள்ள செய்திகள் மாற்றமடைகின்றன
இதைக் கண்டு பேப்பர் பையன் கலக்கமடைகிறான்
காலப்போக்கில் அவன் குல்பி ஐஸ்காரனாக மாறுகிறான்
இரவுகளில் குல்பி ஐஸ் விற்கும்போது
அதை வாங்குவோர் சிலர் கேட்கிறார்கள்
உன் கரத்தில் பேப்பர் வாசம் அடிக்கிறதே
மேலே அண்ணாந்து பார்த்து
அவன் தனக்குள்ளே சிரித்துக்கொள்கிறான்


நன்றி : மீள மேலும் மூன்று வழிகள் - புது எழுத்து, 2/205 அண்ணாநகர், காவேரிப்பட்டிணம் 12, கிருஷ்ணகிரி மாவட்டம் - முதல் பதிப்பு : டிசம்பர் 2013 - விலை : ரூ.70 

Comments