Skip to main content

நாய்கள் என்ற நாவலில் நகுலன் எழுதிய முன்னுரை..



அழகியசிங்கர்






நகுலனே தயாரித்தப் புத்தகம் நாய்கள் என்ற நாவல்.   அவருடைய பெயரிலியே வெளியிட்டுள்ளார்.  அதை புக் வென்சர் என்ற வாசகர் வட்ட அமைப்பில் விற்பனை உரிமை கொடுத்துள்ளார். 102 பக்கங்கள் கொண்ட நாவல் இது.  அதில் அவர் எழுதியது சில வார்த்தைகள் என்ற பகுதி.  

இகர் முதல்விக்கு சமர்ப்பணம் செய்துள்ளார்.  அதில் அவர் எழுதியதைப் படித்தப்போது எனக்கு தாங்க முடியாத சிரிப்பு வந்து விட்டது.

நீ யாரோ
நான் யாரோ
யார் யாரோ
யார் இவரோ  

-  ''  நகுலன் '' -
இதோ அவர் எழுதிய சில வார்த்தைகள்.


சில வார்த்தைகள்

இது நான் எழுதிய நாவல்களில் ஆறாவது நாவல். இந்த ஆறு நாவல்களில் நிழல்கள்'', (நினைவுப் பாதை" இவ்விரண்டும் புஸ்தக -- ஸ்தாபனங்கள் வெளி யிட்டவை. (ரோகிகள்'' (குருஷேத்ரம்" என்ற தொகுப்பில் வந்தது. இரண்டு நாவல்கள் இன்னும் கையெழுத்துப் பிரதிகளாகவே இருக்கின்றன. இதைப் பற்றி நான் எவ்வித மனக்கிலேசமும் அடையவில்லை. ஒரு எழுத்தாளன் என்ற வகையில் எனது அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று - ஒரு எழுத்தாளனுக்கு மூலதனம் அவன் எழுத்துத்தான். இது இப்பொழுது பிரசுரமாகிறது.

இந்த நாவல் எழுதுவதற்கும் பிரசுரமாவதற்கும் காரணம் எனது சமீப காலத்தியச் சில அனுபவங்கள். இப்பொழுது சில காலமாகப் பசுவய்யா'' எழுதிய கவிதைகள் என்னைக் கவர்ந்தன. அவர் எழுதிய “நான் கண்ட நாய்கள்'' என்ற கவிதைதான் இதற்கு மூல வித்து. நாவலில் முதல் அதிகாரத்தில் இந்தக் கவிதையை நான் வேறு வகையில் அப்படியே எழுதியிருக்கிறேன். இதைத் தொடர்ந்து இதே கால கட்டத்தில் ந. முத்துசாமி 'பசுவய்யா' எழுதிய “ஆந்தைகள்'' என்ற கவிதையில் “ஆந்தை'' என்று" குறிப்பிடப்பட்டவன் நான்தான் என்றும் (ஞானரதம் - அக்டோபர்-73. ரசமட்டம் பக்கம் 15) இதைத் தொடர்ந்து சுந்தர ராமசாமி (பசுவய்யா) இது இப்படி யில்லை என்றும், எழுத்தாளர்களைக் கதாபாத்திரங் களாகத் தன் சொந்த விருப்பு வெறுப்புகளை வெளியிட “ பாத்திரப் படைப்பிற்கான நோக்கங்கள் என்ற பாதுகாப்பில் முதல் முதலாக நாவல் எழுதினவன் நான்தான் (ஞானரதம்-நவம்பர் 1973-ரசமட்டம்பக்கம் 21) என்றும் குறிப்பிட்டிருந்தார். ஏறக்குறைய இதே சமயத்தில் ஸிந்துஜா' என் பெயரைக் குறிப்பிடாமல் என் கவிதை ஒன்றை வைத்துக்கொண்டு (தனக்கே'' (?) தெரியாமல் கவிதை எழுதும் கவிஞர் களில் நான் ஒருவன் (சதங்கை -செப்டம்பர் (73'அலுப்புத் தரும் நிழல் யுத்தம்-பக்கம் 24) என்று குறிப்பிட்டிருந்தார். இதே ப த் தி ரி கை யி ல் திரு. வெங்கடசாமிநாதன் என்னுடைய எந்த எழுத்தும் அவருக்கு ஆண்டர்ஸனின் சக்கரவர்த்தியின் ஆடை யைத்தான் (சதங்கை -டிசம்பர் '73. பக்கம் 3) நினைவுறுத்துகிறது என்று எழுதியிருந்தார்.

இதையெல்லாம் நான் இங்கு எழுதுவது ஒரு விவாதத்தைக் கிளப்புவதற்கு அன்று. ஒரு எழுத்தாளன் என்ற வகையில் நான் அனுபவத்தை எப்படிக் கையாள்கிறேன் என்பதைச் சுட்டிக் காட்டுவதற்கே.. (பசுவய்யா" எழுதிய “நான் கண்ட நாய்களில் வரும் நாய்களில் நிச்சயமாகப் பேசுவய்யா'' என்னை ஒரு நாயாகக் குறிப்பிடவில்லை! ஆனால் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. ஒரு மனிதனை ஒரு நாய் என்று குறிப்பிட்டால் அதை நாம் ஏன் ஒரு சம்பிரதாய வசை மொழியாகக் கொள்ள வேண்டும் என்று எனக்குத்.தோன்றிற்று! நாய் என்பதை ஒரு தத்துவ-க்-குறி யீடாக அமைத்துக் கொண்டு அதைத் தொடர்ந்து விசாரணை செய்வதே இந்த நாவலின் ஒரு முக்கிய நோக்கம். இதைப் போலவே ஒரு கதை ஒரு விமர்சகரிடம் (சக்கரவர்த்தியின் ஆடை'' என்ற பிரமையை எழுப்புமானால் எனக்கு அதுவும் ஒரு கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகத் தோன்றியதால் அதையும் ஒரு சரடாக இதில் அமைத்தேன். பிறகு நண்பர் எஸிந்துஜா" குறிப்பிட்டதையும் ஏற்றுக் கொண்டு அதிலும் ஒரு இலக்கியக் கொள்கை அமைந் திருப்பதையும் சுட்டிக் காட்டுவதும் என் நோக்கம்! பிறகு இந் நாவலில் வரும் ஒரு பாத்திரத்திற்கு ஜான் துரைசாமி என்ற பெயரை வேண்டுமென்றே வைத்திருக் கிறேன். என்னைப் பற்றிய வரை என் பெயர் (எழுத்தாளன் அல்லாத சமயத்தில்) துரைசாமி என்றாலும் ஜான் துரைசாமி வேறு; டி. கே. துரைசாமி வேறு! இந்தப் புதுக் கவிதை சகாப்தத்தில் அதிக மாகச் சர்ச்சைக்குட்பட்டவர் அமரகவி. சி. சுப்ரமண்ய பாரதி. அவர் இந்த நாவலில் ஒரு பாத்திரமாக வந்து சேர்ந்தது அகஸ்மாத்தாக வந்த விளைவு என்று மாத்திரம்.

கடைசியாக ஒரு வார்த்தை-நான் சந்தித்த மனிதர்கள், நான் படித்த புத்தகங்கள், நான் பெற்ற அனுபவங்கள் இவைகள் தான் என் படைப்புக்கு உதவும் ஆதாரத் தகவல்கள்; ஆனால் எனது எந்த நாவலும் இந்தத் தகவல்களின் நகல்கள்'' (கலையே நகல் என்பதையும் இங்கு ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்!) அல்ல. அவைகளை அப்படிக் கருதினால் நான் அதற்கு ஜவாப்தாரியில்லை. இந்த நாவல் உருவாவதற்குரிய சூழ்நிலையைச் சிருஷ்டி செய்த மேற்கூறிய என் நண்பர்களுக்கு என் நன்றி. இந்த நாவலைப் படித்துவிட்டு அதைப் பிரசுரிப்பதற்கு என்னைத் தூண்டி உற்சாகமளித்த நண்பர்கள் சர்வ ஸ்ரீ ஷண்முக சுப்பையா, ஸ்ரீ நீல. பத்மனாபன் ஆகியவருக்கும், இதை அச்சுப்பிழையின்றி தங்களுக்கே உரிய முறையில் சிறப்பாக வெளியிட்டு இதை. விநியோகிக்க முன் வந்த வாசகர் வட்டத்திற்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

18-2-74 ) திருவனந்தபுரம் |
- ''நகுலன்"

Comments