Skip to main content

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் - 9 - Part 1



அழகியசிங்கர்



1. அமெரிக்கா அனுபவம் எப்படி?
பிரமாதம்.  நான் அமெரிக்கா வந்து 2 மாதங்கள் முடிந்து விட்டன. இதோ சென்னை கிளம்புகிறேன்

2. எப்படிப் பொழுது போயிற்று?
எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதான் பொழுது போகப்போகிறது.  அமெரிக்காவில் கூடுதலாகப் பொழுது இருந்தது.  சென்னையில் அது குறைவு.

3. என்னன்ன புத்தகங்கள் வாங்கினீர்கள்?
ஆங்கிலப் புத்தகங்கள்தான் வாங்கினேன்.  ஆரம்பத்தில் கடையில் வாங்கினேன்.  ஆனால் மிகக் குறைவான விலையில் அமெரிக்கன் நூலகங்களில் வாங்கினேன்.

4. எந்தப் புத்தகம் படீத்தீர்கள்?
பெரும்பாலும் தமிழ் நூல்கள் படிக்கிற ஆசாமி நான்.  இங்கு ஆங்கில நூல்களைப் படிக்கும்படி நேரிட்டது. முராகாமியின் 2 நாவல்கள்.  மொராவியாவின் நாவல் ஒன்றையும் முழுதாகப் படித்தேன். இதைத் தவிர ஐ பி ஸிங்கரின் சிறுகதைகள்.  ஜே டி சாலிங்கர், பிலிப் ராத்,  ஜப்பானிய எழுத்தாளரான காஷ÷ இஷøகுரோ நாவல்கள்.  இவற்றில் சில புத்தகங்களை முழுதாகப் படிக்க முடியவில்லை.  இரண்டு கதைகளையும் ஒரு கவிதையும் மொழி பெயர்த்துள்ளேன்.

5. முக்கியமாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
நேரம்.  இங்கே கிடைத்ததுபோல் நேரம் எங்கும் கிடைக்காது.  இந்த நேரத்தை ஒருவர் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.  நான் சரியாகத்தான் பயன்படுத்தி உள்ளேன் என்று நினைக்கிறேன்.

6. எழுதினீர்களா?
எழுதினேன்.  முதலில் பயண நூல் மாதிரி ஒன்றை எழுதலாம் என்று துவங்கினேன்.  காலையில் 5 மணிக்கு விழிப்பு வந்து விடும். எழுத ஆரம்பித்துவிடுவேன்.  ஆனால் அது பயணம் பற்றிய நூலாக வரவில்லை.  எங்குச் சென்றாலும் என் அப்பா போகாதே என்று தடுத்துவிடுவார்.  அது பற்றி எழுதுகிற நூலாக மாறும்போல் தோன்றியது.  அதனால் எழுதுவதை நிறுத்திவிட்டேன்.  பிலிப்ரோத் அவர் அப்பாவைப்பற்றி எழுதிய பாட்டிரிமோனி புத்தகம் படித்தேன். அதுமாதிரியான புத்தகமாக எழுத முயற்சி செய்யலாமென்று தோன்றியது. ஆரம்பத்தில் கவிதைகள் சில எழுத முயன்றேன்.  அதுவே 26 கவிதைகள்.

7. கவிதை எழுதுவது எளிதா? சிறுகதை எழுதுவது எளிதா?
என்னைப் பொறுத்தவரைக் கவிதை எழுதுவதுதான் எளிது.  சிறுகதைக்கு முயற்சி அதிகமாகத் தேவைப்படும்.  கவிதை என்றால் யார் தூண்டுதல் இல்லாமலே எழுதி விடலாம்.  ஆனால் கதைக்குத் தூண்டுதல் தேவைப்படுகிறது. கட்டுரைக்கும், நாவலுக்கும் இது பொருந்தும்.

8.  நீங்கள் எழுதியது கவிதையா என்று எப்படித் தெரியும்?
அதில் கொஞ்சம் சிக்கல் இருக்கத்தான் செய்கிறது.  என்னால் மற்றவர்கள் படைப்புகளைப் படித்து நிறை குறைகளைக் கண்டு பிடித்து விட முடிகிறது.  நான் எழுதியதைப் படிக்கும்போது மற்றவர்கள் யாராவது நல்ல மாதிரியாகச் சொன்னால் தேவலை என்று தோன்றும்.

9. தேர்தலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன்.  எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகள் என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும்.  இந்த முறை தேர்தலில் கலந்து கொள்ள முடியவில்லை.
10. அமெரிக்காவில் திரைப்படம் பார்த்தீர்களா?
பார்த்தேன்.  தடம் என்ற தமிழ் படம் பார்த்தேன்.  அதன் பிறகு நெட்டில் நிறையா தமிழ்ப்படங்களைப் பார்த்தேன்.   பார்த்ததால் தமிழ் படங்களைப் பற்றி உயர்வான அபிப்பிராயம் ஏற்பட்டுள்ளது.  இதைப் பற்றியும் எதாவது எழுத முடியுமா என்று யோசிக்கிறேன். சென்னையில் இந்த வசதி உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் திரை அரங்குகளில்  போய்ப்  படம் பார்க்க உத்தேசித்துள்ளேன்.
                                                                                                              (இன்னும் வரும்)



Comments