Skip to main content

அசோகமித்திரனின் காந்தியைப் பற்றி ஒரு கவனம்

அழகியசிங்கர் 





அசோகமித்திரனின் காந்தி கதை அவருடைய மற்ற எல்லாக் கதைகளை விட வித்தியாசமான கதை என்று எனக்குத் தோன்றுகிறது.  ஒருவர் இக் கதையைப் படிக்கும்போது ஒருவருக்கு இயல்பாக தோன்றக் கூடியது, இக் கதை காந்தியைப் பற்றிய கதையா அல்லது இரு நண்பர்களைப் பற்றிய கதையா அல்லது ஒரு ஓட்டலில் சர்க்கரைப் போடாத காப்பியை குடிக்காமல் வைத்துக்கொண்டிருக்கும் ஒருவரின் கதையா என்ற சந்தேகம் எழாமல் இருக்காது. 
இக் கதையை இப்படி மூன்று விதமாக யோசிக்கலாம்.  ஒருவர் ஒரு காபி சாப்பிட ஒரு  அசைவ ஹோட்டலுக்கு வருகிறார்.  காபி ஒன்றை ஆர்டர் செய்கிறார்.  அந்தக் காபியில் சர்க்கரை வேண்டாம் என்கிறார்.  பின் அதைக் குடிக்காமல் வைத்துக்கொண்டிருக்கிறார்.
கதை ஆரம்பத்தில் இப்படி ஆரம்பிக்கிறது.   'அன்று காபி அவனுக்கு மிகவும் கசப்பாக இருந்தது.  கசப்பு அவனுக்கு என்றுமே பிடித்தமானதொன்று.'
இப்படி ஆரம்பிக்கிற இக் கதை காப்பியைப் பற்றி முதலில் மட்டும் சொல்லிவிட்டு கதை நடுவில், 'ஒரு இடத்தில் காபிக் கோப்பை மீது உட்கார வந்த ஒரு ஈயைச் சட்டென்று விரட்டினான்.  அரைக் கோப்பை அளவு மிஞ்சியிருந்த காபிமீது லேசாக ஏடு பரவ ஆரம்பித்திருந்தது.  இந்த காபியைத்தான் குடிக்கப் போவதில்லையே ஏன் ஈயை விரட்டினோம்ý என்று அவனுக்குத் தோன்றியது.  பின் கதை முடிவில், அவன் எதிரே üஅரைக்கோப்பை அளவில் ஆறிக்குளிர்ந்து போயிருந்த காபிமீது காற்று வீசும்போது நூற்றுக்கணக்கான நுணுக்கமான கோடுகளின் நெளிவு மூலம் காபி திரவத்தின் மேற்பரப்பில் பரவிய மெல்லிய ஏடு தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருந்தது..' என்று முடிக்கிறார். 
இப்படி இந்தக் கதையைப் படிக்கும்போது காப்பியைப் பற்றிய தனிக் கதையாகத் தோன்றும்.  
ஆனால் வேறு விதமாகப் படிக்கும்போது இரு நண்பர்களைப் பற்றிய கதையாகக் கூட இது இருக்கிறது.   நான்கு  மாதங்களுக்கு முன் அறிமுகமான ஒரு நண்பன். 
இப்படிப்பபட்ட நண்பனைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார் ;
'அவனுக்கு அவனைப் பற்றிய பொய்கள் வெளியில் உலவுகின்றன என்பதில் கூட அவ்வளவு துக்கம் ஏற்படவில்லை.  ஆனால் அந்த நண்பனால் அவை உலவவிடப்படுகின்றன என்பதுதான் சித்ரவதையேற்படுத்தியது.  நண்பன்.  எப்பேர்ப்பட்ட நண்பன் என்கிறான் இன்னொரு நண்பன்.'  இந்த இடத்தில் இக் கதை இரண்டு நண்பர்களைப் பற்றிய கதையாக நமக்குத் தெரிய வருகிறது.
அதே சமயத்தில் காந்தியைப்பற்றிய கதையாகக் கூட இதை அடையாளப்படுத்தப்படலாம்.  இரண்டு நண்பர்கள் காந்தியைப் பற்றி முரணான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காந்தியைப் பற்றி தீவிரமாகப் பேசுகிறார்கள்.  இந்த இடத்தில் இக் கதையை காந்தியைப் பற்றிய கதையாக நாம் அடையாளப் படுத்தி விடலாம்.
ஒரே சமயத்தில் மூன்று விதமாக ஒரு கதையைப் பார்க்க முடியும் என்பதை இக் காந்தி கதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
உண்மையில் எளிதான வாசகனால் இக் கதையை அவ்வளவு சுலபமாகப் புரிந்துகொண்டு விட முடியுமா என்பது தெரியவில்லை.   
இப்படி எழுதப்படுகிற கதையில் பளிச் பளிச்சென்று வரிகள் அங்கங்கே தட்டு தெறித்துவிழுகின்றன.
'சிம்னி விளக்கு ஒளி விழுந்து ஆகாயத்தில் சஞ்சரிக்கும் தேவதைபோல - அப்படித் தேவதைகள் இருக்குமானால் - பூமியின் எண்ணற்ற ஸ்தூல சக்திகளால் கட்டுபட்பட்டிருக்கும் மனித உணர்வை, மனிதக் கற்பனையை, உள் மன எழுச்சியை, எல்லைக்கடங்கா அகண்ட வெளியில் இழுத்துச் செல்லும் தேவதை போலக் காட்சியளித்தது' என்கிறார்.  இப்படி அபாரமான வர்ணனையைப் படிக்கும்போது அசோகமித்திரனா இப்படி எழுதியிருக்கிறார் என்று வியப்பாக இருக்கிறது.  
காந்தியைப் பற்றி குறிப்பிடும்போது கதை இப்படி நகர்கிறது.  'அவன் எதிரே அந்த அசைவ ஹோட்டலிலும் தன்ககு இடமுண்டு என்று சொல்வது போல் ஒரு காந்திப்படம்  புன்முறுவலித்துக் கொண்டிருந்தது.  காந்தி.  எப்பேர்பட்ட மனிதர். வழக்கம்போல் அசோகமித்திரன் அதே கிண்டல் தொனியுடன் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்.
இப்படி ஆரம்பிக்கிற கதையில் காந்தியைப் பற்றி இரு நண்பர்களும் காரசாரமாகக் கருத்து வேற்றுமை வெளிப்படுவதுபோல் பேசுகிறார்கள்.    காந்தி ஒரு மகத்தான மனிதர் என்று ஒரு நண்பர் சொல்ல, இன்னொரு நண்பர் அவருக்கு எதிராக வாதிடுகிறார்.  இறுதியில் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்வதில்லை. 'ஆர் பி டட்' எழுதிய 'இன்றைய இந்தியா' என்ற புத்தகத்தைப் படித்துவிட்டு எதிர்வாதம் செய்கிறான் ஒரு நண்பன்.
இங்கிருந்து இக் கதை இன்னொரு பிரிவுக்குப் போய் விடுகிறது.  அதாவது காந்தியால் நண்பர்களுக்குள் பிளவு ஏற்படுகிறது.  அதாவது 4 மாதங்களாக எல்லாரையும் விட நெருக்கமாகப் பழகிய ஒரு நண்பர் பிரிந்து விட்டாலும் துவேஷத்துடன் இன்னொரு நண்பரைப் பற்றி பொய் வதந்திகளை அவிழ்த்து விடுகிறார். 
கீழ் கண்டவாறு இக் கதையை விவரித்துக் கொண்டு போகலாம்:

ஒரு அசைவ ஹோட்டலில் காப்பி சாப்பிட வருகிற ஒருவர் எதிரில் இடம் பெற்றுள்ள காந்தி படத்தைப் பார்க்கிறார்.  உடனே அவர் நினைவு காந்தியைப் பற்றி அவரும் அவர் நண்பரும் போட்டுக்கொண்ட சண்டை ஞாபகத்திற்கு வருகிறது.  அதனால் அவர்களுக்குள் இருந்த நெருக்கமான நட்பு உடைந்து போய்விடுகிறது.  துவேஷத்தோடு தன்னைப் பற்றிப் பொய்களைக் கூறிப் பரப்பி வருகிறான் என்கிறார் ஹோட்டலில் காபி சாப்பிடாமல் அமர்ந்திருக்கும் நண்பர்.  
காபிக் கோப்பை மீது உட்கார வந்த ஒரு ஈயைச் சட்டென்று விரட்டினான் என்று சொல்லிக்கொண்டே காந்தியுடன் இதைத் தொடர்புப் படுத்திக்கொண்டு போகிறார்.
அதனால் இக் கதையில் காந்தி மூன்று விதத்தில் சேர்க்கப் படுகிறார்.

அசைவ ஹோட்டல் - காபி - காந்தி
காபிப் கோப்பை - ஈ - காந்தி
நண்பர் - உயர்ந்த கருத்து - காந்தி
நண்பர் - எதிர் கருத்து - காந்தி
நண்பர் 1 - நண்பர் 2 - காந்தி ஒரு காரணம்.  நண்பரைப் பற்றி தூஷணை செய்ய.
அசோகமித்திரன் எழுதிய கதைகளில் வித்தியாசமான கதையாக எனக்கு இது  தோன்றுகிறது. 
(28.10.2017 அன்று குவிகம் இலக்கியக் கூட்டத்தில் பேசிய கட்டுரை)


  

Comments