மலர்த்தும்பியும் நானும்
அழகியசிங்கர்
1979ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பத்திரிகை உதயமானது. மலர்த்தும்பி என்பதுதான் அந்தப் பத்திரிகையின் பெயர். பெயரைப் பார்க்கும்போது இது ஒரு சிறுவர் பத்திரிகை போல் தோன்றும். உண்மையில் இது இலக்கியப் பத்திரிகை. 32 பக்கங்களில் க்ரவுன் அளவில் பத்திரிகை முடிந்து விடும். அதில் கவிதைகள் கதைகள் எல்லாம் உண்டு. இதன் ஆசிரியர் ஸ்ரீதர்-சாமா என்கிற என் ஒன்றுவிட்ட சகோதரர்.
இதில்தான் முதன்முதலாக என் கவிதைகள் பிரசுரமாயின. அக் கவிதைகளை இப்போது எடுத்துப் படிக்குமபோது ஆச்சரியமாக இருக்கிறது.
இந்த மலர்த்தும்பியைத் தொடர்ந்துதான் என் பயணம் சிறுபத்திரிகைகளுடன் ஆரம்பித்தது.
எதிர்பாராதவிதமாய் இந்தப் பத்திரிகை என் கண்ணில் தட்டுப்பட்டது. என் ஆசைக்கு ஒரு 32 பிரதிகள் அச்சடித்து வைத்தக்கொண்டேன். 1979ல் இப் பத்திரிகையின் விலை ரு.50 காசு.
இப்போது அச்சடித்த இந்தப் பத்திரிகையின் விலை ரூ.9. இதோ என் கவிதைகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
இக் கவிதைகளை என் இயல்பான பெயரில் வெளியி0ட்டுள்ளேன்.
முதல் கவிதை :
ஆயிரம் ஜென்மங்கள்
பத்தினியில் சிறந்தவள்
மாதவியா...? கண்ணகியா...?
பட்டிமன்ற விளக்கங்கள்
ஏட்டிக்குப் போட்டி
இடறான கருத்துக்கள்
பட்டிமன்றம் முடிந்து
வெளிவந்த பத்தினிகளை
இடித்திட
ஆயிரம் ஜென்மங்கள்
எடுத்த அவதார புருஷர்கள்.
ஒளியும் இருளும்
எதையோ கடந்த நிலை
கற்பனை முடிச்சுகளை
நீக்க முடியாத
விசித்திர அவஸ்தைகள்
தொடர முடியாததை
தொடர நினைக்கும்போது
ஒளியில் கலந்த
இருளாய்
முடிச்சுகள் அவிழாமல்
திணறுவது ஏன்?
சரி, இரண்டாவது கவிதையில் நான் என்ன எழுதியிருக்கிறேன். உங்களுக்கு எதாவது புரிகிறதா?
Comments