Skip to main content

உயிர்ப்பித்தல்..

அமைதிச்சாரல்


விளைநிலங்களிலும்
வளர்ந்து நிற்கும் கான்கிரீட் காடுகளில்
மொட்டைத்த(ரை)லையில்
கொஞ்சம்
பூச்செடிகளுடன் குறுமரங்களையும்
சூடிக்கொண்டிருக்கும்
கட்டிடங்களைக் கண்ணுறும்போது மட்டும்
ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது
எப்பொழுதோ கிரயம் செய்து கொடுத்துவிட்ட
மாந்தோப்பும் மல்லிகைத்தோட்டமும்.
சிந்திச்சிதறிக்கிடக்கும் சூரியச்சில்லறைகளில்
புரண்டெழுந்த அணிற்பிள்ளைகளுடன்
பகிர்ந்துண்ட தித்திப்பு
இன்னும் ஒட்டிக்கொண்டுதானிருக்கிறது அடிநாக்கில்.
“செவ்வகப்பெட்டியினுள் அடைபட்டிருப்பது
என் தோப்புக்கிளியிலொன்றாக இருக்குமோ”
என்றெழும் எண்ணத்தைக் கடந்து செல்ல முயன்று
தோற்றுப் போகும் ஒவ்வொரு முறையும்.
விசும்பியழும் மனதைச் சமாதானப்படுத்த
தொட்டி ரோஜாவும், க்ரோட்டன்ஸுமாய்
வீராவேசத்துடன் உயிர்த்தெழுகிறான்
மனதுள் உறங்கும் விவசாயி.


Comments

Kasthuri Rengan said…
நல்ல கவிதை

அருள் கூர்ந்து வோர்ட் வெரிபிகேசன் நீக்கவும்.