எஞ்சியிருந்த மெழுகுவர்த்தி சுடரை காற்றின் உதவியுடன் புகையாக்கி ஒளியை விழுங்கியது அறையிருட்டு. மனிதவிழிகள் கூட தனது ஓட்டைகளை பார்க்க முடியாதென கர்வம் கொண்டது. தனது சுயசொரூபத்தை முழுக்க உணரும் வேட்கையில் சன்னலுக்கு வெளியே படர்ந்திருந்த பேரிருட்டின் அங்கமானது. பேரிருட்டு விரியும் திசைக்கு மாற்றுதிசையில் பேரிருட்டுப்பாதையினூடே விரைந்து பறந்தது. +++++ சில ஆயிரம் மைல்கள் தூரத்தில் பேரிருட்டின் எல்லை முடிந்தது. எலலையற்ற தன்மையை அனுபவமாய் உணரும் பேரார்வத்தில் சூரியவொளி ஆக்கிரமித்திருந்த நிலப்பரப்பில் நுழைந்தவுடன் அறையிருட்டின் ஒருபகுதி பஸ்மமானது. வந்த வழி உடன் திரும்பி பேரிருட்டின் பாதையூடெ அறைக்கு மீண்டு வர எத்தனிக்கையில், சூரியவொளியின் நீளும் கரங்களில் சிக்கி பேரிருட்டுடன் சேர்ந்து அறையிருட்டு கரைந்துபோனது. +++++ பேரிருட்டின் ஆவியுடல் சரண் புகுந்த ஏதொவோர் இடத்தினிலேயே அறையிருட்டின் ஆவியுடலும் அகதியானது. பேரொளியின் ஆட்சி ஒய்ந்தபின் மீண்டும் உயிர்க்கும் போது அறையிருட்டையும் உயிர்ப்பித்து அதன் அறையில் சேர்த்துவிடுவதாக பேரிருட்டு வாக்களித்தது.