சமீபத்தில் தேர்தல் வருகிறது என்றால் கதிகலங்க வேண்டிய நிலை வந்து விட்டது. என்னைப் பொருத்தவரை எந்த ஆட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஒன்றுமில்லைதான். ஆனால் என் மனைவிக்கு தேர்தல் ஒரு பிரச்சினையாக மாறி விட்டது. அதுவும் சமீபத்தில்தான். பொதுவாக அரசாங்கப் பணியாளர்கள்தான் தேர்தலுக்கு உட்படுத்துவார்கள். ஆனால் இந்த முறை வங்கியில் பணி புரிபவர்களையும் தேர்தல் பணிக்காக அழைத்துவிட்டார்கள். என் மனைவி பணிபுரியும் வங்கியில் உள்ள மேலதிகாரி அங்கு பணிபுரியும் 10க்கும் மேற்பட்டவர்களை தேர்தல் பணிக்காக சிபாரிசு செய்து விட்டார். அந்த விபரீதம்தான் என் மனைவி தேர்தல் பணிக்கு ஆளானது.
நாங்கள் இருப்பது மேற்கு மாம்பலம். தேர்தலில் பணிபுரிய வேண்டுமென்றால் அதைத்தாண்டி வேறு ஒரு இடத்தில்தான் தேர்தல் பொறுப்பாளராகப் பணிபுரிய விடுவார்கள். மாநிலத் தேர்தல் போது, அண்ணாநகரில் உள்ள ஒரு பள்ளியில் Proceeding Officer ஆகப் பணிபுரிய சொன்னார்கள். நான் சீர்காழியிலிருந்ததால், என்னால் மனைவிக்கு உதவி செய்ய முடியவில்லை. மனைவியின் தேர்தல் பணிக்காக ஒரு நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு மனைவிக்கு உதவி செய்ய வேண்டுமென்று என் மேலதிகாரியைக் கேட்டேன். அவர் உதவி செய்ய மறுத்ததை இன்னும்கூட என்னால் மறக்க இயலவில்லை Proceeding Officer என்ற பொறுப்பை ஏற்றுக்கொள்ள என் மனைவி விரும்பவில்லை. இது குறித்து தேர்தல் அதிகாரியிடம் கூறி பொறுப்பிலிருந்து விடுவிக்கக் கோரியும் அவர்கள் விடவில்லை. அல்லது வேறு பொறுப்பிற்கு மாற்றும்படி கேட்டுக்கொண்டும் அவர்கள் காது கொடுத்துக்கூட கேட்க தயாராக இல்லை. அந்தத் தருணத்தில் தேர்தல் நடக்கும் பள்ளிக்கூடத்திலேயே இரவு தங்க வேண்டும். அங்கு தங்குவதற்கு எந்த வசதியும் இருக்காது. மனைவிக்கு அங்கு தங்குவதுதான் பிடிக்கவில்லை. நல்லவேளையாக என் நண்பரும் மருத்துவரான செல்வராஜ் வீடு பக்கத்தில் இருந்ததால், பெரிய இடர்பாடிலிருந்து தப்பித்தோம். எனக்கு ஒரு நாள் முன்னதாக விடுமுறை கிடைத்திருந்தால், மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்திருப்பேன்.
என் மனைவி சாதாரண computer operator அதாவது CTO. அதை அவர்கள் Commercial Tax Officer என்று எடுத்துக்கொண்டு விட்டார்கள் போலிருக்கிறது. அதற்குத்தான் Proceeding Officer என்ற பதவியைக் கொடுத்து மனைவியை அலற அடித்துவிட்டார்கள். இன்னும் சில கூத்துக்களும் நடந்தன. மனைவி அலுவலகத்தில் பணிபுரிந்த வேறு சிலர் Single Window Operatorகள் அவர்கள் பணம் பட்டுவடா செய்பவர்கள். அவர்களை Sweeper பதவிக்கு தேர்தலில் பணிபுரிய கூப்பிட்டார்கள். அவர்கள் அந்தப் பதவியை ஏற்றுக்கொள்ள கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். ஒருவழியாக சமாளித்து வந்தவுடன், மனைவிக்கு அப்படா என்றிருந்தது. ஆனால் விதி விடவில்லை. திரும்பவும் மேயர், பஞ்சாயத்துத் தேர்தலுக்கும் மனைவி அலுவலகத்தில் உள்ள எல்லோரையும் கூப்பிட்டார்கள். இந்த முறை நிலைமை மோசம். முன்பாவது அண்ணாநகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் தேர்தலில் மனைவி கலந்து கொண்டார். இந்த முறை புதிய வண்ணாரப்பட்டையில். மகாராணி தியேட்டர் பக்கத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு எந்தப் பள்ளிக்கூடம் என்று சொல்கிறார்களோ அங்கே போகவேண்டும் என்றார்கள்.
நான் இருக்கும் சீகாழி என்ற இடத்தில் தேர்தல் 19ஆம் தேதி. 17ஆம் தேதி நான் சென்னையில் இருக்க வேண்டும் மனைவிக்கு உதவி செய்ய. இந்தத் தேர்தல் வருவதற்குள் முன்பிருந்த மேலதிகாரியை மாற்றிவிட்டு வேறு ஒருவர் என் அலுவலகத்திற்கு வந்து விட்டதால், இந்த முறை நான் விடுமுறை எடுப்பதில் எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை. திரும்பவும் மனைவி Proceeding Officer. வேண்டாம் வேண்டாமென்று கேட்டாலும் விடவில்லை. அவருக்கு தைரியம் கொடுக்க மனைவியை நானே அழைத்துக்கொண்டு போனேன். அங்குள்ள தேர்தல் அதிகாரியைப் பார்த்து மனைவிக்குப் பதிலாக நான் Proceeding Officer ஆகப் பணிபுரிகிறேன் என்றேன். நானும் வங்கியில் இருக்கிறேன் என்பதற்கு உரிய சான்றிதழ் கேட்டார்கள். அப்போது கொடுக்க முடியவில்லை. கொடுத்திருந்தால், நான் அங்கிருப்பேன். மனைவியை வீட்டிற்கு அனுப்பி விட்டு. மனைவிக்கு நான் பக்கத்தில் இருந்தது ஆறுதலாக இருந்தது. இந்த முறை புதிய வண்ணாரப்பேட்டையில் உள்ள சென்னை துறைமுகக் குடியிருப்பு உள்ள ஒரு பள்ளியில் தேர்தல் பணி. Proceeding Officer என்பதால் பொறுப்பு அதிகம். அன்று 16ஆம் தேதி. மொத்தம் ஐந்து பேர் கொண்ட ஒரு குழு. மனைவிதான் தலைமை தாங்கி நடத்த வேண்டும். ஒருவர் காஞ்சிபுரத்திலிருந்து வந்திருந்தார். இன்னொரு பெண்மணி பாலவாக்கத்திலிருந்து வந்திருந்தார். அன்று நான் மனைவியை அழைத்துக்கொண்டு மாம்பலம் கிளம்ப இரவு 9.30 மணி ஆகிவிட்டது. வீட்டிற்கு வந்து சேர 10.30 மணி ஆகிவிட்டது.
அடுத்தநாள் காலை அவசரம் அவசரமாக 5 மணிக்குக் கிளம்பிப் போய்விட்டோ ம். தேர்தல் 7 மணிக்கு ஆரம்பித்து விட்டது. மனைவியின் குழுவிற்கு டிபன் வாங்கித் தருவது, மதியம் சாப்பாடு வாங்கித் தருவது என்று பொறுப்பை ஏற்றுக்கொண்டு உதவி செய்தேன். அந்த இடத்திலிருந்து திருவொற்றியூர் பக்கத்தில் இருப்பதாக சொன்னார்கள். அதனால் பட்டினத்தார் சமாதியைப் போய்ப் பார்க்கலாம் என்று நினைத்தேன். திருவெற்றியூர் போனபோது, பட்டினத்தார் கோயில்தான் இருக்கிறதாம். கோயில் உள்ளே சென்று பட்டினத்தார் சமாதி எங்கே என்று கேட்டேன். ஒரு பெண்மணி,'இங்கேதான்' என்றாள். 'சிவலிங்கம்தான் இருக்கிறது..பட்டினத்தார் சமாதி எங்கே?' என்று திரும்பவும் கேட்டேன். 'பட்டினத்தார்தான் சிவலிங்கமாக மாறிவிட்டார்,' என்றார் அந்தப் பெண்மணி. 'எப்படி அப்படி மாற முடியும்? என்னால் நம்ப முடியவில்லை,' என்றேன். 'நீங்கள் பட்டினத்தார் வரலாறு புத்தகம் உள்ளது. வாங்கிப் படியுங்கள்,' என்றார். நான் பட்டினத்தார் வரலாறு புத்தகம் வாங்கி கோயிலில் உட்கார்ந்தபடி படித்தேன். பட்டினத்தார் வரலாறு மிகவும் சுவாரசியமாக இருந்தது. பட்டினத்தார் வாழ்க்கையிலும் சரி, வள்ளலார் வாழ்க்கையிலும் சரி சில சம்பவங்களை என்னால் நம்ப முடியவில்லை. மூடிய அறையிலிருந்து வள்ளலார் எப்படி காணாமல் போனார். இதெல்லாம் ஆச்சரியம்..
திரும்பவும் தேர்தல் இடத்திற்கு வந்து, மனைவியை அழைத்துக்கொண்டு போகும் போது இரவு மணி 10.30. அடுத்தநாளும் நான் சீகாழி அலுவலகத்திற்குப் போகவில்லை. தேர்தல் பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டாமென்று எழுதிக்கொடுக்க ஒரு அரசாங்க உத்தரவு இருப்பதாக சிலர் சொல்ல கேள்விப்பட்டேன். அது உண்மையா என்பது தெரியவில்லை. ஆனால் அரசாங்க உத்தரவை மீறினால், மெமோ கொடுப்பார்கள் என்று பலரும் பயந்துகொண்டிருந்தார்கள்.
Comments