Skip to main content

ஜோல்னாப் பைகள்

விதம்விதமாய் ஜோல்னாப் பைகளை
சுமந்து வருவேன்
பார்க் ரயில்வே ஸ்டேஷன் வாசலில்
கூவி விற்பார்கள் ரூபாய்க்கு பத்தென்று
வகைவகையாய்ப் பைகளை வாங்குவேன்
வீட்டில் உள்ளவர்களுக்கு
ஏனோ பிடிப்பதில்லை
நான் வாங்கும் ஜோல்னாப் பைகளை

பைகளில் ஸ்திரமற்ற தன்மையை
கொஞ்சம் அதிக கனமுள்ள
புத்தகங்களை சுமக்காது
ஓரம் கிழிந்து தொங்கும்
இன்னொரு முறை தையல் போடலாமென்றால்
மூன்று பைகளை வாங்கும்
விலையை வாய்க்கூசாமல் கேட்பார்கள்

ஜோல்னாப் பைகள்
மெது மெதுவாய் நிறம் மாறி
வேறு வேறு விதமான
பைகளாய் மாறின
ஆனால் என்னால் பைகளை விடமுடியவில்லை
உறவினர் வீட்டிலிருந்து
அளவுக்கதிமாய் தேங்காய்களை
உருட்டிவர
சாக்குப் பைகள் தயாராயின

மைதிலிக்கு மனசே வராது
என்னிடம் பைகளைத் தர
வீட்டில் புத்தகக் குவியலைப்
பார்க்கும் கடுப்பை
பைகளில் காட்டுவாள்
ஆனால் என்னால் பைகளை விடமுடியவில்லை

பைகளில் இன்னது என்றில்லாமல்
எல்லாம் நுழைந்தன சுதந்திரமாய்

வீரன் கோயில் பிரசாதம்
மதியம் சாப்பிடப் போகும் பிடிசாதம்
வழுக்கையை மறைக்க
பலவித நிறங்களில் சீப்புகள்
உலக விசாரங்களை அளக்க
ஆங்கில தமிழ் பத்திரிகைகள்
சில க.நா.சு கவிதைகள் புத்தகங்கள்
எல்லாவற்றையும் எழுதி வைத்திருக்கும்
போன ஆண்டு டைரி

பின்
பின்
உடைந்த சில
கண்ணாடி வளையல் துண்டுகள்
பேப்பர் வெயிட்டுகள்
எல்லாம் எப்படி வந்தன
பைக்குள்...

Comments

அருமை சுதந்திரமாக எல்லாம் நுழைய முடிந்த
ஜோல்னா பைகளில் உடைந்த கண்ணாடி வளையல்கள்
நுழைந்ததை புரிந்து கொள்ள முடிகிறது
அது என்ன பேப்பர் வெயிட் ?
நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்
வாழ்க்கையையே சுமக்கிற இந்த ஜோல்னா பைகள் வெறும் காற்றுப் பைகளல்ல... புத்தகங்களையும் சுமக்கிறது... உணர்வுகளின் ஊடகமாய் ஆடி ஆடி அலைகிறது... அருமையான கவிதை
ஹ ர ணி said…
எனக்கும் இந்த அழகழகான பைகள் வாங்குவது பிடிக்கும். தேவையில்லாமல் எதற்கு வாங்குகிறீர்கள் என்று பேச்சும் வாங்கியிருக்கிறேன். ஆனாலும் அது இன்றுவரை தொடர்கிறது. என் பெண் சிறுவயதில் நான் எந்தப் பை வாங்கிவந்தாலும் அதில் தன்னுடைய விளையாட்டுப்பொருள்களைப் போட்டுவிடுவாள். கண்டிப்பாக அதில் ஒரு உடைந்த வளையல் இருக்கும். நினைவுக்கு வருகிறது. நினைவுப் பதிவு.