தினமும் காலை 9 மணி சுமாருக்கு, மயிலாடுதுறையிலிருந்து பஸ்ஸில் கிளம்பி சீர்காழிக்குச் சென்று வருவேன். சீர்காழியிலிருந்து திரும்பவும் வீடு வந்து சேர மணி 9 மணிமேல் ஆகிவிடுகிறது. சில சமயம் பத்தைத் தொட்டு விடுகிறது. இதுமாதிரியான வேலை கடுமையை நான் இதுவரை பார்த்ததில்லை. சுருக்கெழுத்தாளராக நான் சென்னையில் இருந்த காலம் பொற்காலம்.
எந்தத் தப்பை யார் செய்துவிடுவார்களோ என்ற பதைபதைப்போடு இருக்க வேண்டி உள்ளது.
பெரும்பாலும் என் அலுவலக நண்பர் அறிவானந்தமும் நானும் சேர்ந்துதான் வருவோம். அவரைப் பார்க்கும்போது பெரும்பாலும் சோர்வாக இருப்பார். நானும் அவரும் energy எல்லாம் தீர்ந்துபோய் வற்றிப் போய் வருவோம். வங்கியில் பணிபுரியும் பெரும்பாலோருக்கு தொடர்ந்து அதில் பணிபுரிய விருப்பமில்லை. இதில் தப்பிப்பவர்கள் க்ளார்க்காகப் பணிபுரிபவர்கள். அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு இருக்க மாட்டார்கள். எந்த வேலையாக இருந்தாலும் அப்படியே வைத்துவிட்டுப் போய்விடுவார்கள். கொஞ்ச வேலை பளு அதிகமாக இருந்தால் முணுமுணுப்பார்கள். சண்டைக்கு வருவார்கள். ஆனால் 5 மணிக்குமேல் அவர்களை இருக்கச் சொல்லமுடியாது.
முன் யோசனை எதுவுமின்றி 2004ல் நான் இப்படி மாட்டிக்கொண்டேன். இதனால் எந்தப் பயனுமில்லை என்பதோடல்லாமல் எல்லாவித அவமரியாதையும் பெற்றுக்கொண்டேன். இதைப் பற்றி நான் எழுத ஆரம்பித்தபோது இதைப் பற்றியே நான் எழுதிக்கொண்டிருந்தேன். இப்படி சில கவிதைகளையும் கதைகளையும் எழுதிப் பார்த்துக்கொண்டேன். என் எழுத்தைப் படித்த சிலருக்கு என் மீது இரக்க உணர்ச்சியே ஏற்பட்டது. சிலருக்கு அலுப்பாகவும் இருந்திருக்கும்.
சரி இது இப்படியே எத்தனை நாட்கள் போகுமோ போகட்டுமே என்று நினைக்கத் தொடங்கி விட்டேன். என்ன எந்த விஷயம் நடக்க வேண்டுமென்றாலும் யாரையாவது நம்ப வேண்டி உள்ளது. தனியாக இருப்பதால் வீட்டிற்கு தினமும் போன் பண்ண வேண்டியுள்ளது. நான் நடத்தும் விருட்சம் தடுமாற்றம் அடைகிறது. இலக்கிய நண்பர்களைப் பார்க்க முடியவில்லை. பேசவும் முடிவதில்லை. ஜெயமோகன் வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டதாக இந்துவில் படித்தேன். அவருக்கு சினிமா இருக்கிறது. என்னால் வேலையை விட முடியாதுதான் என்று தோன்றுகிறது.
பஸ்ஸில் சென்று கொண்டிருப்பதால் எத்தனையோ விதமான மனிதர்களை தினமும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். அன்று அப்படித்தான். அலுவலக வேலையை முடித்துவிட்டு நானும் அறிவானந்தனும் கொள்ளீட முக்கில் நின்றிருந்தோம். ஒரு பஸ் வந்தது. இந்த பஸ்ஸில் ஏறவேண்டாம் என்றார் அறிவானந்தன். 'சீட்டெல்லாம் காலியாக இருக்கிறது,' என்றேன். ஏனோ தடுத்துவிட்டார். அடுத்த பஸ்ஸில் ஏறினோம். சீர்காழி புது பஸ் ஸ்டாண்ட் வந்தவுடன், ஒரு பெரியவர் பஸ்ஸில் ஏறினார். ஒரு கம்பு வைத்திருந்தார்.. நிற்க முடியாமல் நின்று கொண்டிருந்தார். என் பக்கத்து சீட் இளைஞர் எழுந்து அந்தப் பெரியவருக்கு இடம் கொடுத்தான். பெரியவர் என் பக்கத்தில் அமர்ந்தார். தலையில் முண்டாசு கட்டியிருந்தார். சட்டைப் பொத்தான்களைப் போடாமல் இருந்தார். கண் தெரியவில்லை. காதும் கேட்கவில்லை.
''என்ன வயது?"
''84''
''ஏன் இந்தத் தள்ளாத வயதில் பஸ்ஸில் வருகிறீர்கள்?''
''என்ன பண்றது? பையன் யாரையோ இழுத்துக்கொண்டு வந்துட்டான். வச்சுக்க மாட்டேங்கறான்..''
''வேற பையன்கள் இல்லையா?''
''யாருமில்லை.''
''பொண்டாட்டி இல்லையா?''
''அது எப்பவோ போயிடுத்து.''
''அப்ப எங்க வசிக்கிறீங்க?''
''மயிலாடுதுறை பஸ் ஸ்டாண்ட்.''
''ஏன் சீர்காழி வந்தீங்க?''
''தப்புதான் தெரியாம வந்துட்டேன்.''
''ஏன்?''
''எதாவது கிடைக்கும்னு பார்த்தேன்.''
''மாயவரம் நல்ல ஊர். சீகாழி ஒண்ணும் கிடைக்காது..''
''ஆமாம். ஆமாம். ஒருத்தன் கேட்டத்துக்கு தாடையில அடிச்சுட்டான்.''
எனக்கு பாவமாக இருந்தது அந்தப் பெரியவரைப் பார்க்கும்போது. 84 வயதில் கண் சரியாத் தெரியவில்லை. காதும் கேட்கவில்லை.
''டிக்கட் வாங்க பணம் இருக்கா?''
''இருக்கு.,'' என்றார்.
பஸ் கண்டக்டர் டிக்கட் கேட்டபோது, சரியாக 6 ஒரு ரூபாய் காசுக்களைக் கொடுத்தார். நானும், அறிவானந்தனும் அவர் மேல் இரக்கம் கொண்டோம். இருவரும் கொஞ்சம் பணம் சேர்த்து அவரிடம் கொடுத்தோம். அறிவானந்தன் குறிப்பிட்டார். 'இந்தப் பெரியவரைப் பார்க்கத்தான் நாம இந்த பஸ்ஸில் ஏறினோம்,' என்றார். நான் திரும்பவும் அவரிடம் பேச்சை ஆரம்பித்தேன்.
''நீங்க எங்க வேலை பாத்தீங்க?''
''சிங்கப்பூரில..வண்டி ஓட்டிக்கொண்டிருந்தேன்..''
கொஞ்ச நேரம் கழித்து அந்தப் பெரியவரே பேச ஆரம்பித்தார்.
''எதுக்கு நான் இருக்கணும்......போனாத் தேவலை....கடவுள் கூப்பிட மாட்டேங்கறான்..''
அவருடைய பேச்சு சாதாரணமாகத்தான் இருந்தது. விரக்தி எதுவும் தெரியவில்லை. நான் இருக்கும் தெருவில் பிச்சைக்காரர்கள் இருப்பார்கள். இவர்கள் குளித்துவிட்டு சுத்தமாக காவி உடையை உடுத்திக்கொண்டு வியாழக்கிழமை மட்டும் வருவார்கள். அவர்கள் யார் எங்கிருந்து வருகிறார்கள் என்பதெல்லாம் தெரியாது. ஒருமுறை அவர்களை என் காமிராவில் படம் பிடிக்க வேண்டுமென்று நினைப்பேன். அன்று இரவு வீட்டில் அந்தப் பெரியவரைப் பற்றியே நினைப்பு ஓடிக்கொண்டிருந்தது.
எனக்குத் திடீரென்று ஆத்மாநாம் எழுதிய கவிதை ஞாபகம் வந்தது.
பிச்சை
நீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போ
பிச்சை பிச்சை என்று கத்து
உன் கூக்குரல் தெருமுனைவரை இல்லை
எல்லையற்ற பெருவெளியைக் கடக்ணும்
உன் பசிக்காக உணவு
சில அரிசி மணிகளில் இல்லை
உன்னிடம் ஒன்றுமே இல்லை
சில சதுரச் செங்கற்கள் தவிர
உனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை
உன்னைத் தவிர
இதனைச் சொல்வது
நான் இல்லை நீதான்
Comments
குமரி எஸ். நீலகண்டன்
தப்பு என்னோடது. சீர்காழியை விட்டு 1982ல் நான் கிளம்பிய பின் நல்ல மனுஷன்கள் இல்லாமற் போயிருக்கலாம் - கிழவன் புருடாவும் விட்டிருக்கலாம், இரக்கப் பிச்சை வேண்டி, யாரறிவார்.
4 மைல் தொலைவில் வள்ளல் குமணன் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் குமணக்காடு இருக்கும் பகுதி அய்யா இது ;)