Skip to main content

எதையாவது சொல்லட்டுமா / 23ஆகஸ்ட் 8ஆம்தேதி ராம் மோகனின் பிறந்த தினம். யார் இந்த ராம் மோகன். அவர்தான் ஸ்டெல்லா புரூஸ். அவர் இப்போது உயிரோடு இருந்திருந்தால், 70 வயது ஆகியிருக்கும். அவர் தானகவே தற்கொலை செய்துகொள்வதற்கு முன்புவரை சாதாரணமாகத்தான் இருந்தார். எந்தக் கொடிய நோய் எதுவுமில்லை. கண் பார்வை சற்று தடுமாற்றம்.


அவர் தற்கொலை செய்து கொண்டதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் மட்டுமல்ல இன்னும் பல நண்பர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முதலில் நம்ப முடியவில்லை. அவர் பல விஷயங்களில் தீர்மானமாக இருந்தார். அவர் குடும்ப வியாபாரத்தைத் தொடர்ந்து பார்த்தார். அதில் பெரிய வெற்றி பெற முடியவில்லை என்று தெரிந்ததும், அவருக்கு உரிய தொகையை வீட்டிலிருந்து பெற்றுக்கொண்டு வங்கியில் சேமிப்பில் வைத்திருந்தார். வங்கித் தரும் வட்டித் தொகையை எடுத்து குடும்பம் நடத்தினார். தனியாக இருந்தார். வீட்டை விட்டு வெளியில் வந்து, சென்னையில் அறைவாசியாக பல ஆண்டுகளாக இருந்தார். புத்தகம் படிப்பது, நண்பர்களைச் சந்திப்பது, நினைத்தபோது ஊருக்குச் செல்வது என்று பொழுதைக் கழித்தார். ஆடம்பரமாக பணம் செலவு செய்யமாட்டார. ஆனந்தவிகடன் மூலம் தொடர்கதை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் அவர் புகழ் பரவத் தொடங்கியது. ஹேமா என்ற பெண் கிடைத்தாள்.


பல ஆண்டுகளாக அவர் திருமணம் செய்துகொள்ள வேண்டாமென்று நினைத்தார். பின் திருமணம் செய்து கொண்டார். ஹேமா, ஹேமாவின் தங்கை பிரேமா, அவர் என்று மூவரும் ஒன்றாகவே வாழ்ந்து வந்தார்கள். பிரேமா ஒரு இதய நோயாளி. மயிலாப்பூர், ஆதம்பாக்கம் என்று முதலில் பல இடங்களில் வசித்து வந்தார்கள். பின் கோடம்பாக்கத்திலுள்ள யூனைடட் இந்தியா என்ற இடத்தில் உள்ள ஹேமாவின் சகோதரர் இல்லத்தில் வசித்து வந்தார்கள். இங்குதான் தொடர்ந்து பல ஆண்டுகளாக வசித்து வந்தார் ஸ்டெல்லா புரூஸ். அந்த இடத்திற்கு அடிக்கடி நான் சென்றிருக்கிறேன். நண்பர்கள் பலரும் சென்றிருக்கிறார்கள். அங்கே உட்கார்ந்தால் மணிக்கணக்கில் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருப்போம். புத்தகம் படிப்பது, பேசிக்கொண்டிருப்பது, எங்காவது செல்வது இப்படித்தான் பொழுதைப் போக்குவார்கள்.


ஹேமாவும், பிரேமாவும் எழதுவார்கள். பிரேமாவின் ஒரு கதை தொடர்கதையாக ஆனந்தவிகடனில் வெளி வந்திருந்தது. ஹேமா கவிதைகள் எழுதுவார். நான், வைத்தியநாதன், ராஜகோபாலன் மூவரும் சேர்ந்து அவர்கள் வீட்டிற்குச் செல்வோம். பிரேமா ரொம்ப நாட்கள் உயிரோடு இருக்க மாட்டார் என்பதை ஸ்டெல்லா புரூஸ் எங்களிடம் சொல்லியிருக்கிறார்.


ஒருநாள் அப்படித்தான் நடந்தது. பிரேமா இறந்துவிட்டார். பிரேமாவின் இழப்பு பெரிய அளவில் பாதிப்பை ஹேமாவிற்கு ஏற்பட்டு விட்டதாக ஸ்டெல்லா புரூஸ் சொல்லியிருக்கிறார். வெகுநாட்கள் இந்தத் துக்கத்தை வெளியே சொல்லாமல் மனதிற்குள்ளேயே குமைந்து கொண்டிருந்திருக்கிறார் ஹேமா. மிகச்சாதாரண உணர்வுகளுடன் எளிமையாக வாழ்ந்த வாழ்க்கையில் புயல். ஹேமாவிற்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்பு அடைந்து விட்டன. பெரிய அளவில் மருத்துவத்திற்காக செலவு செய்யாத சாதாரண குடும்பத்தில் ஹேமாவின் உடல் பாதிப்பு மனோ ரீதியான பாதிப்பையும் ஸ்டெல்லா புரூஸிற்கு ஏற்பட்டு விட்டது.


மனைவியை வாரம் இருமுறை டயலிஸிஸ் அழைத்துப் போகும்படியாக நேரிட்டது. கண் கலங்காமல் அவருடைய தேவைகளை உடனுக்குடன் கவனித்துக்கொண்டிருந்த ஹேமாவை அவர் கவனிக்கும்படி நேரிட்டு விட்டது. கடைக்குச் செல்வது, சமையல் செய்வது என்று எல்லாம் ஹேமாவாக இருந்த நிலை முழுவதும் மாறிவிட்டது. இது பெரிய அதிர்ச்சி. மேலும் மருத்துவ மனைக்குச் செல்வது. அங்கு சென்ற பிறகுதான் அவர் நிம்மதி இன்னும் போய்விட்டது. வாரத்திற்கு இரண்டு முறை செல்லும்படி நேரிட்டுவிட்டது. பணத்திற்கு என்ன செய்வது? எத்தனை நாட்கள் இப்படியே தள்ளுவது? அதைவிட நோயின் கொடுமை. இந்த இடத்தில் ஆன்மிகத்தை அவர் பெரிதும் நம்பினார். Healing Touch மூலம் ஹேமாவின் உடலை குணப்படுத்தலாம் என்றெல்லாம் நம்பினார். நான் அவரைப் பார்க்கச் செல்லும்போதெல்லாம், இது குறித்து அவர் பேச ஆரம்பித்து விட்டார். மனைவியைக் குணப்படுத்துவதோடல்லாமல் இன்னும் பலரை குணப்படுத்தி விடலாமென்று சொல்ல ஆரம்பித்து விட்டார். சமீபத்தில் என் நண்பர் தாஸ் அவர்களின் மாமனார் கடந்த 7 அல்லது 8 ஆண்டுகளாக டயலிஸிஸ் செய்துகொண்டு வருபவர் 91 ஆம் ஆண்டில் இறந்து விட்டார் என்று குறிப்பிட்டார். இது மெடிக்கல் சரித்திரத்தில் ஆச்சரியமான விஷயமாகக் கருதப் படுகிறது. மனைவியை இழப்பது உறுதி என்று அறியும்போது ஸ்டெல்லாபுரூஸ் அழக்கூட அழுது இருக்றார். இதெல்லாம் அவருடைய இயல்பு இல்லை.


மனைவியின் இழப்பு பெரிதும் அவரைப் பாதித்து விட்டது. படித்தப் புத்தகங்களும், எழுதிய எழுத்துக்களும் அவருக்கு உதவி புரியவில்லை. அவர் ஆன்மிகம் என்று பெரிதாக நினைத்ததெல்லாம் போய்விட்டது. இச் சமயத்தில் அவர் ஓரளவு ஆழமான depressionல் தவித்துக் கொண்டிருந்தார். நான் ருத்ரன் என்ற மனோ தத்துவ மருத்துவரைப் பார்த்தார். அவருக்கு யாராவது பக்கத்தில் இருந்துகொண்டே இருக்க வேண்டும். அவரைப் பார்த்துக்கொள்ள வேண்டும். தனிமையில் இருந்தால் தற்கொலை செய்து கொண்டு விடுவார் என்று சொன்னார்.


எல்லா உறவினர்களும் அவருக்கு இருந்தாலும், அவரால் அவர்களுடன் போய் இருக்க முடியவில்லை. இந்தத் தருணத்தில் தேவராஜ் என்ற நண்பர் அவருடன் இருக்க முயற்சித்திருக்கிறார். அவர் திரும்ப திரும்ப ஹேமாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்ததால், தேவராஜூற்கே அங்கு தொடர்ந்து இருக்க முடியவில்லை. அவரை அவருடைய வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போக நினைத்தார் தேவராஜ். ஆனால் அதுவும் முடியவில்லை. நான் ருத்திரனிடம் ஸ்டெல்லா புரூஸை அழைத்துக்கொண்டு போகலாமா என்று நினைத்தேன். என்ன பிரச்சினை என்றால் ஸ்டெல்லா புரூஸ் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டார். இந்தத் தருணத்தில்தான் அவருடைய வீட்டிலுள்ள பொருட்களை எல்லோருக்கும் கொடுக்க ஆரம்பித்து விட்டார். ஹேமாவின் நகைகளை திருப்பதி கோயில் உண்டியில் ஒரு நண்பர் மூலம் போட வைத்துவிட்டார். அவர் தங்கியிருந்த வீட்டையும் காலி செய்யும்படியான நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்து கொண்டு விட்டால். 69வயதில் இப்படி ஒரு காரியத்தை அவர் செய்திருப்பது வருத்தமாக இருந்தது.


எழுத்தாளர் சுஜாதா மரணம் அடைந்த மறுதினம் ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்து கொண்டு விட்டார். மயானத்தில் அவரைப் பார்க்க மிகக் குறைவான பேர்களே வந்திருந்தார்கள். உயிரோடு இருக்கும்போது வராத உறவினர்கள் வந்திருந்தார்கள். ஒரு நல்ல நண்பரை இழந்து விட்டதாக சொல்வதைத் தவிர வேற சொல்ல ஒன்றுமில்லை.

Comments

கட்டுரை மனதை கனக்கச் செய்கிறது........ மன அழுத்தம் ஒரு நல்ல எழுத்தாளரை பலி கொண்டு விட்டது......