Skip to main content

எதையாவது சொல்லட்டுமா / 21




சீர்காழி வந்து 6 மாதம் ஓடிவிட்டது. நேற்று நாகூர் விரைவு ரயில் வண்டியில் படுத்துக்கொண்டிருந்தபோது யோசித்துக்கொண்டே வந்தேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவும் இப்படித்தான். பஸ்ஸில் பயணம் செய்வது மோசமாக உள்ளது. கால் வீங்கி விடுகிறது. அப்புறம் சரியாகி விடுகிறது. ரயிலில் பயணிப்பது அப்படி அல்ல. எப்போது ரயில் விடப்போகிறார்கள் என்று காத்திருந்து மே மாதத்திலிருந்து விட ஆரம்பித்து விட்டார்கள். பெரிய அனுகூலம் இது. என்னைப்போல் எத்தனைப் பேர்கள். எத்தனைக் குடும்பங்கள்.


ஆனால் ரயிலில் எப்போதும் வெயிட்டிங் லிஸ்டில்தான் இடம் கிடைக்கிறது. பின் படுப்பதற்கான இடமாக மாறி விடுகிறது. கலகலவென்று இருக்கிறது ரயில். விதவிதமான பயணங்கள். விதவிதமான மனிதர்கள். நான் ஒவ்வொரு வாரமும் சென்னையில் உள்ள முதியோர் இல்லத்திற்கு வரத் தவறுவதே இல்லை.


சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். ஜீ எஸ் டி ரோடில் ஒரு இடத்தில் ஒரு முஸ்லிம் முதியோரை யாரோ போட்டுவிட்டுப் போய்விட்டார்களாம். அவர் மயக்க நிலையில் ரோடில் இருந்தாராம். பின் அவருக்கு உரிய கவனம் கொடுத்தபிறகு யார் அவருடைய உறவினர்கள் என்பதை அவர் சொல்ல விரும்பவில்லையாம். அவர்களைப் பார்க்க வேண்டுமென்கிற எண்ணம் கூட அவர்களுக்கு ஏற்படவில்லையாம்.


சரி நான் முதியோர் இல்லம் என்று சொல்கிறேனே எதைச் சொல்கிறேன் என்று தெரியவில்லையா? வேற எதைச் சொல்வேன். முதியோர் இல்லத் தலைவி என் மனைவிதான். என் வீட்டைத்தான் முதியோர் இல்லம் என்று சொல்கிறேன். என் தந்தைக்கு 89 வயதாகிறது. மாமியாருக்கு 85 வயதாகிறது. என் வீட்டிற்கு வந்து உதவி செய்கிற பணியாளருக்கு 75 வயதாகிறது. இவர்கள் மூவரையும் என் மனைவிதான் பாதுகாத்துக்கொண்டிருக்கிறாள். நான் வாரம் ஒருமுறை முதியோர் இல்லத்துக்குச் சென்றுவிட்டு சீர்காழி வந்து விடுகிறேன்.


89 வயதாகிறது என்று அப்பா சொன்னவுடன் ஆச்சரியமாக இருந்தது. என் வீட்டிற்கு வரும் எல்லோரிடமும் ஹோமியோபதி மருந்தைப் பற்றி அடிக்கடிப் பேசுகிறார். எல்லாருக்கும் என்ன வியாதி என்று கேட்டு அதற்கு ஏற்ற மாதிரி மருந்தை வாங்கியே கொடுத்து விடுகிறார். முன்புபோல் வெளியே நடக்க முடியவில்லை. ஐந்தாறு வருடங்களுக்குமுன் அவர் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓட்டிக்கொண்டு போவார். அவர் பயன்படுத்தியது made in england சைக்கிள். சைக்கிள் இவரை ஓட்டுகிறதா? அல்லது இவர்தான் சைக்கிளை ஓட்டிக்கொண்டு போகிறாரா என்று தோன்றும். ஒருமுறை ஏற்பட்ட விபத்தால் சைக்கிள் பக்கம் போவதில்லை. ஒருமுறை உறவினர்கள் என்ற பெயரில் என் அப்பாவை மையமாக வைத்து ஒரு குறுநாவல் எழுதியிருந்தேன். கணையாழியில் வந்திருந்தது. அதைப் படித்ததிலிருந்து நான் எழுதும் எதையும் அவர் படிப்பதில்லை.


84 வயதாகிற என் மாமியார் வீட்டிலேயே நடமாடிக் கொண்டிருக்கிறார். சமையலறைச் சென்று எதுவும் செய்ய முடியவில்லை. யார் உதவியுமின்றி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல முடியாது. பாதங்கள் கோணல் மாணலாக வீங்கி விட்டன. சாப்பிடுவது மிகக் குறைவு.


டிவியில் சீரியல் பார்ப்பதுதான் ஒரே பொழுது போக்கு.

Comments

அவர்களையும் உங்கள் ஊருக்கே அழைத்து செல்லலாமே.
அப்பாவின் ஆரோக்கியத்தின் ரகசியம் ஹோமியோபதி. எந்த செலவுமில்லாத ஆரோக்கியமான இந்த மருந்தின் மகிமை யாருக்குமேத் தெரிவதில்லை .அதுதான் வருத்தமாக இருக்கிறது.
குமரி எஸ். நீலகண்டன்