நான் இல்லாது போனால்
இப்புவியெங்கும் உள்ள
மரங்களனைத்தும்
மூளிகளாகும்.
நான் பச்சை
வண்ணம் சுமந்து
வசந்த காலத்தை
வளமுள்ளதாக்குகிறேன்.
நான் இன்னோர்
இலையாய்த் துளிர்க்க
வேனிற்காற்றின் வேகத்தில்
மரங்களினுடனான
உறவுப்பிணைப்பை
முறித்துக்கொண்டு
மண்ணில் விழுகிறேன்.
நான் காணுமிடமெங்கும்
நிறைந்திருப்பினும்
மலர்களின் மீது மட்டும்
மோகம் கொண்டலையும்
மனிதர்கள் என்னை
மரத்தின் ஒரு பாகமாக
மட்டுமே பார்க்கின்றனர்.
நானின்றி மொட்டு மலர்ந்திடுமா?
காய் கனிந்திடுமா?
மரம் நிலைத்திடுமா?
உணவாகிப் பல நோய்கள்
தீர்க்கிறேன்.
எருவாகிப் பயிர்களைக்
காக்கிறேன்
எரிபொருளாகி
வாகனங்களை
இயக்குகிறேன்.
என் மீது உரசாத காற்றை
சுவாசித்த நபருண்டா
இவ்வுலகில்?
பழுத்து மஞ்சளாகி
உதிரும்வரை
காலையில் நடைப்பயிற்சி
செல்லும் வழியெங்கும்
உங்களின் கண்களுக்கு
இதமாக இலவசமாய்
குளுமை தருகின்ற
பூமித்தாய் தன் மேனியில்
உடுத்தியிருக்கும்
பச்சை வண்ண ஆடை நான்!
Comments