Skip to main content

என்னை ஆளும் விலங்குகள்






எல்லாமாயும் எனக்குள்ளே

ஒளிந்திருக்கின்றன பல விலங்குகள்

பூசி மெழுகும் சொற்களெதுவும்

அவையிடத்திலில்லை

சில மீன்களைப் போல அமைதியாயும்

இன்னும் சில தேவாங்குகளைப் போல சோம்பலாயும்

சில நேரங்களில் மட்டும்

எறும்பு, தேனி, கரையான்களைப் போல

சுறுசுறுப்பாகுபவையுமுண்டு

காலத்தைப் பயனுள்ளதாக

நகர்த்திப் போவதாகப் பெருமை பேசி

திரும்பிப் பார்க்கையில்

தடங்களேதுமற்ற பொழுதில் பறவையாயும்

கோபமுறுகையில்

சீறும் சர்ப்பத்தைக் கொண்டு சிலதும்

நன்றி காட்டுகையில் நாயின் வாலாட்டுதலோடும்

நன்றி மறப்பதில்

பூனையின் மெதுநடைத் திருட்டு போலவும்

குவிந்த பல குணவியல்புகளோடு உலாவருகையில்

புன்னகைப்பது மட்டும்

மனிதத்தை ஒத்திருக்கிறது


Comments

Subbaraman said…
நன்றாக இருக்கிறது..நன்றி..
எனக்குப் பிடித்திருந்தது , நன்றி !
நன்றி நண்பர்கள் சுப்பராமன், ஜெனோவா :)