Skip to main content

எதையாவது சொல்லட்டுமா / 9

நான் சீகாழி மயிலாடுதுறை என்று பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருக்கிறேன். சனிக்கிழமை சென்னையை நோக்கி வந்துவிடுகிறேன். நான் சொல்ல வந்தது வேறு. பொதுக் கழிப்பிடம் பற்றி நீங்கள் எதாவது நினைப்பதுண்டா? பஸ்ஸில் பயணிக்கும்போது ரொம்ப உபத்திரவமானது இந்தக் கழிவறைகள். சனி மதியம் நான் சீகாழி பஸ் ஏறினால், எனக்குப் பெரும்பாலும் பாண்டிச்சேரியில்தான் இந்தக் கழிவறைகளை நோக்கி ஓட வேண்டியிருக்கும்.

இரண்டு ரூபாய் காசு வாங்கிக்கொண்டு கழிவறை வாசலில் ஒருவன் உட்கார்ந்து கொண்டிருப்பான். பை சகிதமாய் வரும் நான் அவன் காலடியில் அதைக் கிடத்திவிட்டு உள்ளே நுழைவேன். ஏண்டா நுழைகிறோம் என்றுதான் இருக்கும். உள்ளே நுழைந்தவுடன் மூக்கைப் பிடித்துக்கொள்ள வேண்டும். கழிவறையில் கொட்டுகிற தண்ணீர் மூத்திரம் மாதிரி இருக்கும். இப்படி ஒரு அவதியா என்று நினைக்காமல் இருக்க மாட்டேன். இந்தக் கழிவறையில் எப்போதும் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்.


ஆண்களை விடுங்கள். பெண்கள் எப்படியெல்லாம் அவதிப்பட வேண்டியிருக்கும். நான் இருக்கும் சீகாழி பிராஞ்சு பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். அதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் உள்ளே மட்டும் வந்து விடாதீர்கள். உள்ளே சாப்பிட ஓட்டை ஒடிசலான நாற்காலிகள். டைனிங் டேபிள் கிடையாது. இதைத் தவிர சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது பாம்பு எதாவது வந்துவிடுமா என்ற பயமும் எனக்குண்டு. அங்கும் கழிவறை மோசம். தாழ்பாள் கிடையாது. ஒரு பக்கம் கையால் கதவைப் பிடித்துக்கொண்டுதான் யூரின் போகமுடியும். நான் சென்னையில் 18 மாதங்கள் பணிபுரிந்த ஹஸ்தினாபுரம் கிளையில் கழிவறை அடைத்துக்கொள்ளும். பீக் சம்மரில் தண்ணீர் வராது. அவஸ்தைதான்.


நான் சென்னையைக் கடந்தபிறகு என் நினைவெல்லாம் கழிவறைகளைப் பற்றிதான். கும்பகோணம் வட்டார அலுவலகத்திலும் கழிவறைப் பார்க்க சகிக்காது. ஏண்டா உள்ளே நுழைகிறோம் என்று இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு குறுநாவல் எழுதியிருந்தேன். 406 சதுர அடிகள் என்று பெயர். அந்தப் பெயரில் ஒரு புத்தகமும் போட்டிருக்கிறேன். எலிகண்ட் ப்ளாட் பிரமோட்டர்கள் 406 சதுர அடியில் ஒரு சின்ன அடுக்ககம் கட்டித்தந்தார்கள். உண்மையில் நான் ஏமாந்துவிட்டேன். அந்த இடம் கட்டித் தரும்போது இப்படித்தான் அமையப்போகிறது என்று சற்றும் எண்ணவில்லை. மாம்பலத்தில் ஏற்கன஧அவர்கள் கட்டித் தந்த இடத்தைப் பார்த்த பிறகுதான் இந்த இடத்தைப் புக் செய்தேன். படுபாவி கட்டி முடித்தப் பிறகுதான் தெரிந்தது. கழிவறை மோசமாக இருக்கிறதென்பது. அதைப் பார்த்த என் அலுவகத்தில் பணிபுரியும் ஒரு பெண்மணி, 'டாய் டாயலட்' மாதிரி இருக்கிறது என்றாள். எனக்கு அவமானமாக இருந்தது.


எதாவது ஒன்று சரியில்லை என்றால், அதைப் பற்றியே நான் நினைத்துக்கொண்டிருந்தால் எனக்குக் கனவு வரும். ஒரு தாய் குரங்கும், குட்டிக் குரங்கும் அந்த இடத்தில் உள்ள சமையலறை சன்னலைப் பிடித்துக்கொண்டிருப்பது போல் ஒரு கனவு. வாடகைக்கு அந்த இடத்தை விடும்போது யாரும் குண்டாக வாடகைக்கு வந்துவிடக் கூடாது என்று நினைத்தேன். ஏன்என்றால் டாயலட்டைப் பயன்படுத்தப் படாதபாடு படுவார்கள்.


அந்த அடுக்ககம் கட்டி முடித்துத் தரும்போது, நடிகர் திலகம் சிவாஜி ஞாபகம்தான் வரும். ரொம்ப குண்டாக மாறி விட்டிருந்தார் அந்தச் சமயத்தில். அவர் என் அடுக்ககத்தில் வந்திருந்து வீட்டு டாயலட்டைப் பயன்படுத்தினால், உட்கார்ந்தால் அவரால் எழுந்திருக்கவே முடியாது. தண்ணீரையும் பயன்படுத்த முடியாது.


நான் அந்த அடுக்ககத்தை யார் பேச்சையும் கேட்காமல் வாங்கியிருந்ததால், என் மனைவி என்னுடன் 1 மாதம் மேல் பேசக்கூட இல்லை. அவ்வளவு கோபம். பிரமிள் சாந்தோமில் மீனவர்கள் குப்பத்தில் பொது கழிவறை பக்கத்தில் ஒரு அறையில் குடியிருந்தார். மழை காலங்களில் கழிவறையிலிருந்து எல்லாம் வெளியே வந்துவிடும். மனிதர் பட்டப்பாடை நான் அறிவேன்.

Comments