Skip to main content

எதையாவது சொல்லட்டுமா....13


July மாதத்தில் நான் நான்கு மாதங்களுக்கு நூலகக் கட்டடத்தின் சின்ன அறையைப் பதிவு செய்திருந்தேன். அதாவது டிசம்பர் மாதம் வரை.ஆனால் எதிர்பாராத திருப்பமாக அக்டோபர் மாதம் சென்னையிலிருந்து கும்பகோணம் போகும்படி நேரிட்டது. இனி பணி நிமித்தமாக அங்குதான் இருக்கும்படி ஆகிவிட்டது. நான் இப்போது சீர்காழியில் இருக்கும்படி இருந்தாலும், சென்னையில் கூட்டம் நடத்தும் சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. நவம்பர் மாதம் முழுவதும் நான் லோலோவென்று கும்பகோணம் முழுவதும் அலைந்தேன். அதனால் நவம்பர் மாதம் நான் நடத்தும் கூட்டம் மழையும் சேர்ந்துகொண்டதால் நடத்த இயலவில்லை. கூட்டம் நடத்தாமலே ரூ.250 போய்விட்டது. டிசம்பர் மாதக் கூட்டம் என்ன செய்யப்போகிறேன் என்று நினைத்தேன். வழக்கமாக மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை என்னால் கூட்டம் நடத்த முடியவில்லை.

நான் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை கிளம்பி சென்னையை அடைந்து, ஒரே ஒரு நாளான ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து, அன்று இரவு 11 மணிக்கு ஒரு பஸ்ûஸப் பிடித்து சீர்காழி வந்து விடுவேன். அப்படி வரும் கால் வீங்கி விடுகிறது. பிறகு சரியாகி விடுகிறது. நான் முதலில் பயந்துபோய் டாக்டர்களிடம் கேட்டதற்கு அதெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டார்கள்.

இப்படி ஞாயிற்றுக்கிழமை அங்கிருக்கும்போது பரபரப்பாக இருப்பேன். எப்படி பரபரப்பைக் குறைப்பது என்பதே என் ஞாயிற்றுக்கிழமைப் பயணமாக இருந்தது. பின் அந்தப் பரபரப்பும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிக்கொண்டு விடுகிறது. திங்கள் கிழமை (28.12.2009) விடுமுறை வந்ததால் அதை நன்றாகப் பயன்படுத்தினேன். திங்கள் மதியம் கூட்டம். எஸ். சண்முகம் பேசினார்.

வழக்கம்போல் முதல்நாள் எல்லோரையும் போனில் கூப்பிட்டுக்கொண்டிருந்தேன். எல்லோரும் தமிழச்சி பாண்டியனின் புத்தக விழாவிற்குச் சென்று கொண்டிருந்தார்கள். அவசரமாகச் சென்று கொண்டிருந்தார்கள். போனில் தொடர்பு கொண்டபோது,

'இதோ போய்க் கொண்டிருக்கிறேன் வண்டியில்' என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதனால் பலரை போனில் கூப்பிடுவதை நிறுத்திக்கொண்டேன். நானும் 7 மணிக்கு அங்குக் கிளம்பிச் சென்றேன். தாங்க முடியாத கூட்டம். ஸ்டாலின் தலைமையில் நடப்பதால் கட்சிக்காரர்களின் கூட்டமும் சேர்ந்து கொண்டு விட்டது.

நான் உள்ளே நுழைந்தபோது ஹால் முழுக்க ஒரே கூட்டம். பலர் இடம் கிடைக்காமல் நின்று கொண்டிருந்தார்கள். இலக்கிய நண்பர்கள் பலரைப் பார்த்தேன். பேசவில்லை. நான் உடனே வெளியே வந்துவிட்டேன். எனக்கு கூட்டத்தைக் கண்டால் பயம்.

கூட்டம் நடத்தும் நாளன்று காலையில் திரும்பவும் இலக்கியம் பேசும் நண்பர்களைக் கூப்பிட்டேன். கூப்பிட்டாலும் யாரும் வரப்போவதில்லை என்றுதான் மனதில் தோன்றி கொண்டிருந்தது. அதேபோல்தான் ஆயிற்று. 5 பேர்கள்தான் வந்திருந்தார்கள். என்னையும் சண்முகத்தையும் சேர்த்தால் 7 பேர்கள்.

10 ஆண்டுகளுக்கு முன் நான் நடத்தும் கூட்டத்திற்கு யாரும் வரவில்லை என்றால் படப்படப்பாக இருப்பேன். ஆனால் இப்போது அப்படி இல்லை. கூல் என்று சொல்லிக்கொண்டேன். வழக்கம்போல் கூட்டம் விறுவிறுப்பாக 3 மணிநேரம் வரை ஓடியது. பேச்செல்லாம் ஆடியோ காசெட்டில் ரிக்கார்ட் செய்தேன். கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது டீக் கடையில் டீயைக் குடித்தபடி பிரிந்தோம்.

அடுத்தக் கூட்டத்தை வீட்டு மொட்டை மாடியிலோ அல்லது பூங்காவிலோ நடத்துவது என்று தீர்மானித்தேன். அது இன்னும் எளிமையானது. லைப்ரரி கட்டடத்தில் வைத்தால் இனி 300 ஆகும். பூங்காவில் அதுகூட ஆகாது. கூட்டத்தில் என்ன பேசினார் என்பதைத் தொடர்ந்து எழுதுகிறேன்.

Comments

இவ்வளவு சிரமங்கள், மனச்சோர்வு தரக்கூடிய சூழலிலும் நீங்கள் மெனக்கெடுவது .... hats off to you.

புது வருடம் சிறப்பாக இருக்க வாழ்த்துகள்

அனுஜன்யா