ழ கவிதைகள்
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சென்னை கடற்கரையில் உள்ள திருவள்ளூவர் சிலை பக்கத்தில் அமர்ந்து இலக்கிய உரையாடலைத் தொடர்ந்து நடத்திக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் பேச்சு பல விஷயங்களைக் குறித்து இருக்கும். அங்கு ஆத்மாநாமை நான் பார்க்கவில்லை. ஆத்மாநாமின் தற்கொலை அந்த எளிமையான கூட்டத்திற்குப் பெரிய அதிர்ச்சியே ஏற்படுத்தியது. ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்டு விடுவார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
சாத்வீகமான கவிஞர்களாக ஒவ்வொருவரும் இருந்தாலும், ழ கூட்டத்தில் இருக்கும் மற்ற கவிஞர்களுக்கு இருந்த மனத்துணிவு ஏன் ஆத்மாநாமிற்கு இல்லாமல் போய்விட்டது என்பது தெரியவில்லை. நான் ஆத்மாநாமை மூன்றுமுறை சந்தித்து இருக்கிறேன்.
ஒருமுறை ஞாநி இருந்த பீட்டர்ஸ் சாலையில் உள்ள காலனி வீட்டில் நடந்த கூட்டத்தில். அப்போது ஆத்மாநாம் கையில் ழ பத்திரிகையின் பிரதிகளை வைத்துக்கொண்டிருந்தார். ழ பத்திரிகையுடன் அவரைப் பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது.
இன்னொரு முறை நான், வைத்தியநாதன், ஆத்மாநாம் சந்தித்துக் கொண்டபோது. கவிஞர் ஆனந்த் வீட்டிற்கு நாங்கள் பயணம் செய்தோம். அப்போது ழ வெளியீடாக வந்திருந்த நகுலனின் 'கோட் ஸ்டாண்ட் கவிதைகள்' ஆத்மாநாமின், 'காகிதத்தில் ஒரு கோடு' ஆனந்த் - தேவதச்சனின் 'அவரவர் கை மணல்' ஞானக்கூத்தனின், 'சூரியனுக்குப் பின்பக்கம்' என்ற புத்தகங்களை விலைக் கொடுத்து வாங்கினேன். ஆத்மாநாம் அவர் புத்தகத்தில் என் பெயரை எழுதி கையெழுத்துப் போட்டு கொடுத்தார்.
மூன்றாவது முறையாக நான் ஆத்மாநாமைச் சந்தித்தது. ஞாநியின் திருமண அறிவிப்புப் போது. ஞாநி பத்மாவுடன் சேர்ந்து வாழப்போவதாக அறிவிப்பு செய்து, நாடகம் ஒன்றை சென்னை மியூசியம் தியேட்டரில் நடத்தினார். எல்லோருக்கும் டீ வரவழைத்துக் கொடுத்தார். நான் ஆத்மாநாமைப் பார்த்து அவர் சீட் பக்கத்தில் போய் அமர்ந்தேன். நகுலனைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். திடீரென்று விமலாதித்த மாமல்லனைப் பார்த்து ஆத்மாநாம் எழுந்து போய்விட்டார். அப்புறம் ஆத்மாநாம் வரவேயில்லை.
ஆத்மாநாமின் முடிவு சோகமானது. யாரும் எதிர்பார்க்காதது. குறைந்த வயதே வாழ்ந்தாலும், ஆத்மாநாம் தமிழ் கவிதையில் பல புதிய முயற்சிகளை உருவாக்கத் தவறவில்லை. ழ வின் முதல் இதழில் ஆத்மாநாமின் கவிதை எதுவும் பிரசுரமாகவில்லை. ஆனால் ஜூன் 1978 ஆம் ஆண்டு ஆத்மாநாமின் இரண்டு கவிதைகள் பிரசுரமாகியிருந்தன.
தூரத் தெருவிளக்குகள்
இரவில் இரும்பு மனிதர்கள் ஆகின்றன
கையில் நிழற்சுமையுடன்
இரவைக் காவல் காக்கின்றன
பகலிடமிருந்து
காலை மெல்லப் புலர்கிறது
கொஞ்சம் கொஞ்சமாய்
தெரு விளக்குகள் இறந்து விடுகின்றன
கண்ணுக்கே தெரியாத் தொலைவு சென்றுவிடுகின்றன
மீண்டும் இரவு
மெல்ல மெல்ல வருகிறது
வெளிச்சத்தை விரட்டிக்கொண்டு
மீண்டும் எங்கிருந்தோ
வந்து குதிக்கின்றன
தெரு விளக்குகள் இரவைப் பாதுகாக்க
கவிதை இரண்டு
ஒரு புளியமரம் சமீபத்தில் என் நண்பனாயிற்று
தற்செயலாய் அப்புறம் நான் சென்றபோது
நிழலிலிருந்து ஒரு குரல் என்னைத் தெரிகிறதா
திடுக்கிட்டேன் அப்புளிய மரம் கண்டு
நினைவிருக்கிறதா அன்றொரு நாள்
நீ புளியம் பழங்கள் பொறுக்க வந்தபோது
என் தமக்கையின் மடியில் அயர்ந்துபோனாய்
அப்பொழுது குளிர்ந்த காற்றை வீசினேனே
உன் முகத்தில் உடலில் எங்கும்
வா எப்படியும் என் மடிக்கு
இங்கு தொடர்ந்து ழ பத்திரிகையிலிருந்து சில கவிதைகளை உங்களுக்கு வாசிக்க அளிக்கலாம் என்று நினைக்கிறேன். ழ வந்த சமயம் கவிதைக்குப் பொற்காலம் என்று சொல்லத் தோன்றுகிறது. கவிதைக்கு மரியாதையை ஏற்படுத்தித் தந்த சமயமும் அதுதான் என்று சொல்லத் தோன்றுகிறது. இன்னும் என்னவெல்லாமோ சொல்லத் தோன்றுகிறது. ஆனால் சொல்லத் தெரியவில்லை.
Comments