அண்ணாவின் உருக்கம் என்ற பெயரில் ஒரு கவிதை எழுதியிருந்தேன். 2005 ஆம் ஆண்டு. இக் கவிதை என் தொகுதியில் வெளிவந்துள்ளது. கவிதையை அண்ணாவின் நூற்றாண்டின் போது இங்கு அளிக்க விரும்புகிறேன்.
மாப்படுகை வழியாகச் செல்லும்
பாதையில் பெரும்பாலும்
அபூர்வமாகவே
வாகனங்கள் வரும் போகும்
நடமாட்டம் இரவென்றால் குறைவு
பள்ளிக்கூடங்கள் இருக்கும் நாட்களில்
சிறு சிறு மாணவ மாணவிகள்
அவர்களுக்குள்ளே தென்படுகிற
கற்பனை உலகத்தில் சஞ்சரித்துக்
கொண்டிருப்பார்கள்....
வண்டியில் செல்லும் நான்
ஜாக்கிரதையாகப் பயணிப்பேன்
ஒவ்வொருமுறையும் பார்த்துக்
கொண்டே செல்கிறேன் ஒரு அண்ணாசிலையை
கழக கண்மணிகளே உங்களுக்கு ஒரு
வேண்டுகோள்
நிச்சயமாய் அண்ணாசிலையிலிருந்து
அண்ணா உயிரோடு தோன்றினால்
சொல்லியிருக்கலாம்
கம்பீரமான அச்சிலையில்
ஆளுயுர அண்ணா கையில் புத்தகம் வைத்தபடி
நடந்து செல்வதுபோல் தோற்றம்....
சிலை வடித்தவன் அண்ணாவைப்
பார்த்திருக்கலாம்
சிலையின் பக்கத்திலேயே
கழக கண்மணிகளின் கூடாரம்
ஆனால்
சிலையோ கம்பீரத்தை இழந்து விட்டது
கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று
அண்ணா சொன்ன மந்திரம் என்று
இவர்கள் சொல்லித்தான் தெரியும்
ஒவ்வொருமுறையும் நான் போகும்போது
சிலையை ஒருமுறையாவது பார்த்துவிட்டுச்
செல்வேன்
அண்ணா முணுமுணுப்பது காதில் விழுகிறது
நான் என்ன பாவம் செய்தேன் எனனை
இங்கே நிறுத்தி விட்டார்களே என்று
புராதான அழுக்கென்றால் அப்படியொரு
அழுக்கை நீங்கள் பார்த்திருக்க முடியாது
பறவைகளின் களிப்பூட்டும் சம்பவம்
எல்லாம் அண்ணாசிலையின் மீது
எப்பவோ கழுத்தில் இட்ட நீண்ட
மாலையொன்று
உதிர்ந்து போகாமல் தெரு தூசிகளுடன் கருத்துக்
கிடக்கும்
அண்ணா என்னசெய்வார் பாவம்
முகத்தில் திட்டுத்திட்டாய்த் தெரியும்
வெண்மை அழுக்குப் போக எத்தனை ஆண்டுகள்
இன்னும் ஆகுமோ?
தினமும் பார்ப்பதால் எனக்குத் தெரிகிறது
அண்ணா கடுகடுவென்று நிற்கிறாரென்று.
Comments