எப்போது ஜானகிராமனைப் படிக்க ஆரம்பித்தேன்? இப்போது ஞாபகத்தில் வரவில்லை. மற்ற நாவல்களைப் படிக்க ஆரம்பித்தபோதுதான், ஜானகிராமன் பெயரையும் கேள்விப்பட்டு படிக்க ஆரம்பித்தேன். அவருடைய 'அம்மா வந்தாள்' நாவலைத்தான் முதலில் படிக்க ஆரம்பித்தேன். எந்த ஆண்டு? ஞாபகமில்லை. ஆனால் ஜானகிராமனுடன் கூட இன்னும் சில நாவலாசிரியர்களின் நாவல்கள் ஏனோ என்னைக் கவரவில்லை. தனிப்பட்ட முறையில் இலக்கிய ஆசிரியர்களின் நாவல்களைப் படிக்கத் தொடங்கியபோது, ஜானகிராமனும் அதில் இருந்தார். கிட்டத்தட்ட தமிழில் இலக்கிய நாவல்கள் பல வெளிவந்துள்ளன. அப்படி ஒவ்வொன்றாகத் தேடிப் படிக்கும்போது ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்', 'மரப்பசு' நாவல்களையும் படித்தேன். பின்பு 'மோகமுள்' என்ற நாவலையும் படித்தேன். ஜானகிராமன் நாவல்களில் பெண் பாத்திரங்கள் படும்பாடை நினைத்துப் பார்த்ததுண்டு. பொதுவாக அவருடைய நாவல்களில் 'அடல்டிரி' விஷயம் முக்கியமாகக் கையாளப்படுகிறது. 'அம்மா வந்தாள்' நாவலில் பூடகமாகவும், 'மரப்பசுவில்' பகிங்கரமாகவும் வெளிப்படுகிறது. பிறகு அவருக்கு எழுதுவது என்பது கைவந்தகலையாக இருக்கிறது. ஆண் þ பெண் உறவுமுறையில் உள்ள ஒழுங்கின்மையையும், முரண்பாட்டையும் சுவாரசியமான முறையில் எழுதி உள்ளார். நாவல் மட்டுமல்லாமல், சிறுகதைகள், பயணக் கட்டுரைசள், மொழிபெயர்ப்புகள், நாடகங்கள் என்று இலக்கியத்தில், பல தளங்களில் செயல்பட்டவர் என்பதை நினைத்ப் பார்க்க ஆச்சரியமாக உள்ளது.ஜானகிராமனைப் படிக்கும்போது, இங்கு குபாராவையும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. ஆண்þபெண் உறவின் அதீதப் போக்கைஙுமுரண்பாட்டை குபாரா சிறுகதைகள் மூலம் வெளிப்படுத்திக் காட்டியவர். எளிமையான நடையில், பூடகமாக எழுதுவது அவருடைய கலை. அதே பாணியை ஜானகிரமான் ஸ்வகரித்துக் கொண்டவர். குறைந்த வயதிலேயே கு ப ரா மறைந்து விட்டார். அவர் இல்லாத குறையைப் போக்கியவர் ஜானகிராமன். ஜானகிராமனின் எல்லை நீண்டு, சிறுகதைகள், நாவல்கள், பயணக் கட்டுரைகள், என்றெல்லாம் போய்விட்டது.
அவர் நாவல்களை மட்டும் படித்து பழக்கப்பட்ட எனக்கு, அவர் சிறுகதைகளைப் படிக்க ஏனோ அப்போது தோன்றவில்லை. அதனால் அவர் சிறுகதைகளை முதலில் படிக்க ஆரம்பிக்கவில்லை. இப்போதுதான் அவர் சிறுகதைகளைப் படிக்க வேண்டுமென்று தோன்றியது.
1956ல் எழுதிய 'கங்கா ஸ்நானம்' என்ற கதையிலிருந்து 70 கதைகள் கொண்ட தொகுப்பைப் படிக்கும்போது, எனக்கு மலைப்பே ஏற்பட்டது. முழு தொகுப்பை என்னால் படித்து முடிக்க முடியவில்லை. ஆனால் 1000 பக்கங்கள் கொண்ட புத்தகத்தில் 200 பக்கங்களைத்தான் படிக்க முடிந்தது. அத்தனை கதைகளிலும் அடிநாதமாக ஒரே ஒரு விஷயத்தைத் திரும்ப, திரும்ப ஜானகிராமன் சொல்லிக்கொண்டே போகிறார். மனித உறவுகளிடையில் உண்டாகும் 'துரோகம்'தான் அவர் சிந்தனையில் பெரும் பங்கு வகித்துள்ளது. அத் துரோகத்தை விதம்விதமாக விவரிப்பதில், பெரிய சாதனையாளராக உள்ளார்.
துரோகத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் கதைகள்எழுதினாலும், ஏமாற்றுபவர்/ஏமாற்றப்பட்டவர் என்ற இரண்டு முனைகளில் ஏமாற்றப்பட்டவர் சாத்விகமான முறையில், துரோகத்தை/ஏமாற்றத்தை எந்தவிதமான எதிர்ப்பும் காட்டாமல் ஏற்றுக்கொள்வது இவர் கதையின் உத்தி. ஆனால் விதிவிலக்காக சில கதைகளில், ஏமாந்தவர், வேறுவிதமாகவும், ஆனால் பழி தீர்க்கப்பட்டது என்ற உணர்வு வெளியே தெரியவராமல், செயல்படவும் செய்கிறார்.
உதாரணமாக, 1956 ஆம் ஆண்டு எழுதிய 'கங்கா ஸ்நானம்' என்ற கதையில், துரைய்யாவை சின்னசாமி கங்கையில் சந்திக்கிறார். இதில் சின்னசாமி துரைய்யாவிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர். உண்மையில் சந்திப்பு நடக்கவில்லை. துரைய்யா தங்கியிருக்கும் இடம் தெரிந்து, சந்திப்பு நிகழ்ந்துவிடக் கூடாதென்ற பதைப்பு சின்னசாமியிடம் ஏற்படுகிறது. சின்னசாமி திருப்பித்தர வேண்டிய பணத்தைக் கொடுத்தும், கொடுக்கவில்லை என்று சாதித்தவர் துரையப்பா. மேலும், பணத்தைப் பெற சின்னசாமி மீது கோர்ட்டில் வழக்குத் தொடுத்து பணத்தை வலுகட்டாயமாக பெற்று விடுகிறார். இது சின்னசாமி மனதில் ஏற்பட்டுள்ள மாறாத வடு. அவமானம். இந்த 'துரைய்யப்பா'வை சந்திக்காமல், அவர்கள் இருந்த இடத்தை காலி செய்ய வேண்டுமென்ற எண்ணம் உண்டாகிறது. இக் கதையில் வெளிப்படுகிற துரோகத்திற்கு தீர்வாக, சின்னசாமி மனைவி அளிக்கிறாள் தீர்ப்பு.
"அவன் பாவத்துக்கும் சேர்த்து முழுக்குப் போடுங்கோ," என்பதுதான் தீர்ப்பு.இக் கதையில் முரண்பாடாகத் தெரிவது துரைய்யாவின் பாத்திர அமைப்பு. கதையில் முன் பகுதியில் துரையப்பாவைப் பற்றி பேசும்போது, இப்படி எழுதப்படுகிறது. 'துரையப்பா பெரிய மனுஷன். பெரிய மனுஷ்யன்தான் எவ்வளவு மரியாதை....விட்டுக் கொடுக்கிற தன்மை. சாயங்காலம் சின்னசாமி பஸ்ஸிலிருந்து விளாஞ்சேரி முக்கில் இறங்கி வந்தபோது துரைய்யாவின் அன்னதானத்தைப் பற்றிதான் யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள். யார் எப்போதும் போனாலும் துரைய்யா வீட்டில் சாப்பாடு கிடைக்கும். 'அன்னதாதா, அன்னதாதா' என்று அவர் பெயர் ஜில்லா முழுவதும் சுற்றம் முழுவதும் முழங்கிக் கொண்டிருக்கும். எப்போது ரயிலில் போனாலும் அதைப் பற்றிப் பேசுகிற ஒரு பிரயாணியாவது பார்க்க முடியும் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிற துரைய்யா, இறுதியில் சின்னசாமியை ஏமாற்றுகிறார். இது மாதிரி பல 'கதா பாத்திர முரணை' கதைகளில் வெளிப்படுத்துகிறார் தி ஜானகிராமன். 'வீடு' என்ற ஒரு கதை. இது சற்று நீளமான கதை. குறுநாவல் என்று சொல்லலாம். ஜானகிராமன் நாவல்களைப் படித்த அனுபவத்தில், இக் கதை எப்படி ஆரம்பித்து எப்படி முடிக்கப் போகிறாரென்பது தெரிந்து விடுகிறது. வாசகனை முதலில் அவர் வீடு விற்க தயாராக இருப்பதுபோல் காட்டுகிறார். ஆனால் கதை வீடு விற்பது பற்றியல்ல. மகாதேவன் என்பவன் நயமாகப் பேசி டாக்டரின் கம்பவுண்டராகச் சேர்கிறான். காம்பவுண்டராக மட்டுமல்லாமல், அவர் வீட்டிற்கு எல்லா உதவிகளையும் செய்கிறான். அவன் உதவிகளைக் கொண்டு புளாங்கிதம் அடைகிறார் டாக்டர். ஆனால் அவர் மனைவியிடம் கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்கிறான். இதை அறிந்த டாக்டர், அவனை நையப் புடைத்து, உதைத்து அனுப்புவதற்குப் பதிலாக பூடகமாக துரத்தி விடுகிறார். அவர்களுடைய கள்ள உறவு வெளிப்படையாகத் தெரியும்படி வருகிறது. டாக்டரின் மனைவி அவரை விட்டுப் போக விரும்புகிறாள். டாக்டரிடம், வீட்டையும், சாப்பிட எதாவது ஏற்பாடு செய்யும்படி கேட்கிறாள். டாக்டர் மறுத்து விடுகிறார். அவர் இருக்கும்வரை இந்த வீட்டில் இருக்க வேண்டுமென்று சொல்கிறார். வீடை விற்றுவிடுவதாக சொல்பவர், கடைசி வரை வீட்டை விற்காமலிருக்கிறார். இறுதியில் மகாதேவனுடைய சாவுடன் கதை முடிவடைகிறது. இக் கதையில் மூவரும் ஒவ்வொரு விதத்தில் பழிவாங்கப் படுவதாகப் படுகிறது. துரோகத்திற்கு எதிராக துரோகம் செயல்படுகிறது. சங்கிலி தொடர் மாதிரி துரோகம் எல்லோரையும் பிணைத்து விடுகிறது. வெளிப்படையாக இல்லாமல், பூடகத்தன்மையுடன் கதையை எடுத்துச் செல்வதில் ஜானகிராமன் வெற்றி பெறுகிறார்.
ஜானகிராமன் எழுத்து நடை கு ப ராஜகோபாலனிடமிருந்து ஸ்வகரித்த நடை. கதை பாணியும் கு ப ராவைப் போல் பூடகத்தன்மை வாய்ந்தது. ஜானகிராமன் குபாராவிற்குப் பிறகு வளர்ந்த ஒரு பெரிய எழுத்தாளர். பலவிதங்களில் சாதனைப் புரிந்தவர். இன்றைய படைப்பாளிகளுக்கு அவர் எழுத்து நடையின் மிடுக்கு 2001þல் படிக்கும்போது கூட ஆச்சரியத்தை உண்டாக்குகிறது. அவர் கதைகளில் எல்லாவற்றையும் வெளிப்படையாக எடுத்துப் போடுவதல்ல. மனித உள்ளம் எப்படிச் செயல்படுகிறது என்பதுதான் அவருடைய ஆராய்ச்சி. அதாவது, மனிதனின் 'உள்முரணை' வெளிப்படுத்துவதுதான் கதையின் வெற்றியாகக் கொண்டு வருகிறார்.
இன்று ஜானகிராமனின் வாசகராக இன்றும் பல எழுத்தாளர்கள் தோன்றி உள்ளார்கள். உதாரணமாக பாலகுமாரனைச் சொல்லலாம். ஜானகிராமனைப் படிக்கும்போது, ஒருவித உற்சாகம் ஏற்படுகிறது. 'இவ்வளவு எழுதி இருக்கிறாரே' என்ற உற்சாகம்தான் அது.
Comments
தி.ஜா.ரா. பற்றி எழுத நிறைய இருக்கிறது என்று நினைக்கிறேன். ஒரு தொடராக நீங்கள் எழுதலாமே.
அனுஜன்யா
வணக்கம். தி ஜானகிராமன் படைப்புகள் பற்றி இன்னும் எழுத முடியுமாவென்று முயற்சி செய்து பார்க்கிறேன்.