Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 98


அழகியசிங்கர்  


தீவட்டித் திருடர்கள்                                                   


லாவண்யா



தீவட்டித் திருடர்கள் மூவர் பண்டொரு நாளில் 
அம்மணி அம்மாளின் வீடு புகுந்தார். 
அரிவாளொருவன் கையில் இரும்புத்தடியும் 
தீவட்டியும் மற்றிருவர் கையிலுமாக.

மருமகளும் பேரனும் முற்றத்திலுறங்கினார்.
 அகமுடையாரும் பிள்ளையும் அயலூர் சென்றவர்
 அடுத்த நாள்தான் வரவிருந்தார்கள்.

அமைதியாய் இருக்கச் சொல்லி அரிவாளைக் 
கும்பிட்டாளம்மணி.  நெல்லொரு சாக்கிலும் 
கம்பங்கருதும் மல்லாக்கொட்டையும் 
மற்றுமிரு சாக்கிலவர் முன் வைத்தாள் 
தங்க வளையல்களிரண்டோடு.

தண்ணீர் கேட்டதட்டினானொருவன். 
பயத்தில் வெண்கலச் சொம்பிலிருந்த பாலைத் 
தந்தாள் நீரென்றெண்ணி.
 பாலைக் குடித்தவன் தீமிதித்தவன் போலானான்.
 புறப்பட்டானிருவரோடும். எதையும் 
எடுத்துச் செல்லாமல். நல்லாயிரம் மணியென்று.. 
பின்னாறிரண்டாண்டுகள் ஆடிப்பெருக்கன்றிரவு 
சுங்கடிச் சேலையும் மஞ்சள்கொத்தும். 
தீவட்டித் திருடர்கள் தலைவாசலில் வைத்தாரென 
அம்மணி அம்மாளின் சந்ததிகள் சொல்வார்கள்.

எப்போதேனும் நினைவில் வருவாள் அம்மணி, 
அப்போதெனக்குத் தோன்றும்.


நன்றி : கடலின் மீது ஒரு கையெழுத்து - கவிதைகள் - லாவண்யா - விருட்சம் வெளியீடு, சென்னை 33- மொத்தப் பக்கங்கள் : 59 - வெளியான ஆண்டு : 2009 - விலை : ரூ.30

Comments