Skip to main content

துளி : 14 - மறக்க முடியாத இரண்டு புத்தகங்கள்




அழகியசிங்கர்






ஒவ்வொரு முறையும் சாகித்திய அக்காதெமி அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்குச் செல்லும்போது அங்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்களைத் தேடுவது என் வழக்கம்.  
அப்படி தேடிய இரண்டு புத்தங்களைப் பற்றி இங்கே குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.
ஒரு புத்தகத்தின் பெயர் வசவண்ணர் வாக்கமுது.  இப் புத்தகத்தின் முதல் பதிப்பு 1972ல் வெளிவந்துள்ளது.  மறுபதிப்பு 1993.  இப் புத்தகத்தின் விலை ரூ.85 தான்.  ஒவ்வொருவரும் கட்டாயம் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டிய புத்தகம்.
வசவண்ணர் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய புத்தகம் இது.  வசவண்ணரால் பாரதத்தின் ஆன்மக் கருவூலம் வளர்ச்சி பெற்றது.  கன்னட இலக்கிய ரலாற்றில் ஒரு யுகபுருஷரான வசவண்ணர் உயர்ந்த இறை உணர்வை எளிமையும், சுவையும் மிக்க இனிய பாடல்களில் படைத்தவர்.  இப்புத்தகம் 500 வாக்கமுதுகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ளது சாகித்திய அக்காதெமி.  அதிலிருந்து சிலவற்றை இங்கு அளிக்கிறேன்.
வசவண்ணர் கூடல் சங்கம தேவாவை முன்வைத்து தன் வாக்கமுதுகளை வெளிப்படுத்தி உள்ளார்.


1

ஐயா, ஐயா என்றழைத்துக் கொண்டிருக்கிறேன் 
ஐயா, ஐயா எனக் கதறிக் கொண்டிருக்கிறேன் 
'ஏன்' எனல் ஆகாதோ, ஐயனே! 
இரவு பகலாக உன்னையே அழைக்கிறேன்.
மௌனமோ, கூடல் சங்கமதேவா!*


2.

காட்டில் வழி தவறிய பசுவினைப் போல்
 'அம்மா, அம்மா' வென் றலறுகின்றேன்;
 'அம்மா, அம்மா' வென்று கதறுகின்றேன்
 'வாழ்ந்து போ' வென்றருளாயோ, 
கூடல் சங்கம் தேவா!


அடுத்தப் புத்தகம் கபீர் அருள்வாக்கு என்ற புத்தகம்.  250 பக்கங்களுக்கு மேல் உள்ள புத்தகம் மிகவும் உபயோகமான புத்தகம்.  இப் புத்தகத்தின் முதல் பதிப்பு 1964ஆம் வெளிவந்துள்ளது.  மூன்றாம் பதிப்பு 1992ஆம் ஆண்டு.  புத்தகத்தின் விலை ரூ.65 தான்.

சம்பிரதாயத்தினரிடையே நிலவிவரும் நம்பிக்கைப்படி அவர் ஓர் அந்தண விதவையின் மகவாவார்.  சமூகக் கொடுமைக்கு அஞ்சி அவர் தாய் தன் குழநதையை 'லஹர் தாரா' என்ற குளத்தின் கரையருகில் எறிந்து விட்டாள்.  எதிர்பாராத பொருத்தமாய் நீரு என்கிற முஸல்மான் சேணியன் ஒருவன் அவ் வழியே சென்று கொண்டிருந்தான்.  பச்சிளங் குழந்தையைக் கண்ட அவன் உள்ளத்தில் இரக்கம் பரிந்தெழுந்தது.  குழந்தையை எடுத்து வந்து தன் வீட்டிலே சீராட்டி வளர்த்தான். இதுதான் கபீர்தாஸின் வரலாறு.  

கபீர்தாஸர் நாட்டில் உண்டாகியிருந்த சலசலப்பையும், குலவையும் பார்த்தார்.  நிலைமையைப் புரிந்துகொண்டு மக்களின் கவனத்û8த அந்த 'அடிப்படைப் பரம்பொருள்'பால் திரும்பச் செய்தார்.  அவர் காட்டிய உண்மை இரண்டு சமயத்தினருமே ஏற்றுக்கொள்ளத்தககதாக இருந்தது.
கபீர் வாக்கை இப்போது காண்போம்.

- அடியார்கள் எல்லாம் நான்கு கைகள் கொண்ட தேவனைப் போற்றி ஏமாறுகின்றனர்.  கபீரோ, எண்ணற்ற கைகள் கொண்ட பரம்பொருளையே வழிபடுகின்றனர்.

- என்னுடையதென்று என்னிடம் ஒன்றும் இல்லை.  இருப்பதெல்லாம் உன்னுடையதுதான்.  உன்னுடையதை உன்னிடமே தந்துவிடுவதில் எனக்கு என்ன செலவு.

- மனத்தின் எண்ணபடி நடக்காதே.  மனத்தின் அபிப்பிராயங்கள் (ஒன்றல்ல இரண்டல்ல) அநேகம்.  மனத்தை ஏற்க சவாரி செய்கிற (அப்படிப்பட்டஜ) சாது யாரோ ஒருவர் தாம்.

இந்த இரண்டு புத்தகங்களில் கபீர் அருள்வாக்கு அட்டையெல்லாம் உடைந்து போகும்படி உள்ளது.  இன்னும் எத்தனைப் பிரதிகள் உள்ளதோ தெரியவில்லை.  

வசவண்ணர் வாக்கமுது அட்டை போகவில்லை  ஆனால் மிகவும் பழையத் தாள்களைக் கொண்ட புத்தகம். இன்னொருமுறை இந்தப் புத்தகங்களை சாகித்திய அக்காதெமி வெளியிடுமா என்பது தெரியவில்லை. 



Comments