Skip to main content

யார் தமிழ் புத்தகங்கள் படிக்கிறார்கள்?

அழகியசிங்கர்



எனக்கு எப்போதும் இந்தச் சந்தேகம் வருவதுண்டு.  முன்பை விட இப்போது தமிழ்ப் புத்தகங்களை யாராவது விரும்பிப் படிக்கிறார்களா என்ற சந்தேகம்தான்.  இது குறித்த நான் பலரிடம் விஜாரிக்க விரும்பவில்லை.  சமீபத்தில் பெஸன்ட் நகர் பீச்சில் காலை 6 மணிக்கு சில இளைஞர்கள் கிட்டத்தட்ட 30 வயதுக்குள் இருப்பவர்கள் பெரும்பாலோர் ஐடியில் பணிபுரிபவர்கள் ஆங்கிலத்தில் கதைகளை வாசித்தார்கள்.  அவர்கள் வாசித்தக் கதைகளின் தரம் அவ்வளவாய் சிறப்பாய் இல்லை.  ஆனால் தமிழில் இதுமாதிரியான கூட்டத்தை நடத்தத்தான் முடியுமா?  யார் தமிழில் எழுதுகிறாரகள்? யார் தமிழ் கதைகளைப் படிக்கிறார்கள்? நானும் சிறி;து முயற்சி செய்து பூங்காவில் கதை கவிதை வாசிப்புக் கூட்டம் ஏற்பாடு செய்து நடத்தினேன்.  அக் கூட்டத்திற்கு யாரும் வரவில்லை.  அது நடத்துவது கேலிக் கூத்தாகி விடுமா என்று கூட எனக்குத் தோன்றியது.  

இப்போது உள்ள இளைஞர்களில் தமிழ் படிப்பவர்கள் மிக மிக குறைவு.  பொதுவாக பெரும்பாலோர் புத்தகங்களே படிப்பதில்லை. மீறிப் படிப்பவரகள் என்ன புத்தகங்களைப் படிக்கிறார்கள்.  பெரும்பாலோர் கட்டுரைகள் அடங்கிய புத்தகங்களை வாசிக்கிறார்கள். அல்லது தமிழ் நாவல்களை வாசிக்கிறார்கள்.  ஆனால் சிறுகதைப் புத்தகமோ கவிதைப் புத்தகமோ யாரும் பொருட்படுத்துவதில்லை.  அதனால் தமிழில் கவிதைப் புத்தகம் சரியாக விற்க முடியவில்லை.  சிறுகதைக்கும் அந்த நிலைதான். 

கட்டுரைகள் கூட பல்கலைக் கழக மாணவர்கள் இயற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை யாரும் படிப்பதில்லை.  தமிழின் இந்த நிலைக்கு யார் காரணம்?  இன்னும் போக போக நிலைமை மோசமாகி விடும்.  முன்பை விட தமிழில் இப்போது எதிர்கொள்கிற பிரச்சினைகளை சாதாரணமாக விளக்கி விட முடியாது.  

நான் இப்போது கூட தமிழில் எழுதிக்கொண்டிருக்கிற எழுதப் போகிற எழுத்தாளர்களை நினைத்து கவலைப்பட்டுத்தான்  இதைக் குறிப்பிடுகிறேன்.  அடிப்படையில் தமிழில் படிப்பது என்பது சரியாக வரவில்லை.  இன்றைய தமிழ் மாணவர்கள் மூலம் தமிழ் படைப்புலகம் சிறக்கப் போவதில்லை.  தமிழை மட்டும் நம்பாமல் இருக்கும் இளைஞர்களிடம்தான் அதாவது தமிழை ஆங்கிலத்திற்கு அடுத்ததாகப் பயன்படுத்தும் இளைஞர்களிடம்தான்  தமிழில் இனி படிக்கவும் தமிழ் மொழியில் படைப்புகளை உருவாக்கவும் வழி இருப்பதாகப் படுகிறது.  

நான் பள்ளிக்கூடத்தில் எட்டாவது வகுப்பு படிக்கும்போதே பள்ளி நூல்நிலையத்திலிருந்து புத்தகங்களை எடுத்துப் படித்துக் கொண்டிருப்பேன்.  தென்னாட்டுப் பழங்கதைகள் என்ற புத்தகம், இராமசாமிப் புலவர் தொகுத்தது எட்டுப் பாகங்கள் கொண்ட புத்தகம்.  ஒவ்வொரு பாகமும் 300 பக்கங்கள் இருக்கும்.  அப் புத்தகங்களை எடுத்து எடுத்துப் படிப்பேன்.  அப்படி தமிழில் புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வமாக இருப்பேன்.  இப்போதோ அத் தென்னாட்டு கதைகள் தொகுதி எங்கும் கிடைப்பதில்லை.  அவற்றை புத்தகங்களாகக் கொண்டு வந்த சைவ சித்தாந்த கழகம் அப் புத்தகத்தை திரும்பவும் பிரசுரிக்க விரும்பவில்லை.  காரணம் அப் புத்தகத்தைப் படிக்க சிறுவர்கள் யாரும் தயாராய் இல்லை.

இப்போது கொஞ்சம் யோசித்துப் பார்க்கிறேன்.  அப்படி ஆர்வமாக இருந்த நான், இப்போது அந்த அளவிற்கு ஆர்வம் ஏற்படாமல் போனதற்குக் காரணம் என்ன?  யோசித்துப் பார்க்கிறேன்.  இன்னும் நான் தினமும் புத்தகங்கள் படித்துக் கொண்டிருக்கிறேன்.  ஆனால் முன்புபோல் படிக்க முடியவில்லை.  ஏன்?  என்னுடைய பள்ளிக்கூட காலத்தில் நான் தங்கசாலையில் இருந்தேன்.  அங்குள்ள ஒரு தியேட்டர் பக்கத்தில் கீழே பிளாட்பாரத்தில் மர்ம நாவல்களை விற்றுக்கொண்டிருப்பார்கள்.  பி டி சாமி, மாயாவி, அரூர் ராமநாதன் என்றெல்லாம்.  அப் புத்தகங்களை விலை கொடுத்து வாங்கிப் படித்துபின் மற்றவர்களுக்கும் படிக்கக் கொடுப்பேன்.  அதன் பின் என் வாசக எல்லை சற்று விரிவடைந்து, கல்கி, சாண்டில்யன், தமிழ்வாணன் என்றெல்லாம் போயிற்று.  மு வ வின் கரித்துண்டு, அகல் விளக்கு என்றெல்லாம் படித்திருக்கிறேன்.  என் கல்லூரி ஆண்டுகளில் நான் பாரதியாரின் கட்டுரைகளை எல்லாம் படிக்க ஆரம்பித்தேன்.  ஆனால் எங்கு சென்றாலும்  புத்தகம் படித்துக்கொண்டே இருப்பேன்.  

கொஞ்சங் கொஞ்சமாக ஆங்கிலப் புத்தகங்களையும் எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.  ஆனால் இப்போதோ அந்த அளவிற்கு வேகமாக என்னால் புத்தகங்களைப் படிக்க முடிவதில்லை.  நான் அலுவலகத்தில் சேர்ந்த புதியதில் ராயப்பேட்டாவிலிருந்த க்ரியாவில் வித்தியாசமான புத்தகங்களை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.  கவிதைப் புத்தகங்களை வாங்கிப் படிப்பேன்.  பெரும்பாலும் சிறுகதைகளையும் கவிதைகளையும்தான் நான் படிப்பேன்.  எப்போதும் எனக்கு சில புத்தகங்கள் படித்தாலும் புரியாது.  அதுமாதிரி புரியாத புத்தகங்களையும், பத்திரிகைகளையும் நான் வைத்திருப்பேன்.  

முன்னே மாதிரி என்னால் புத்தகங்கள் படிக்க முடியாவிட்டாலும், புத்தகங்களை வாங்கி குவிக்க வேண்டுமென்ற ஆர்வமும், எந்தச் சந்தர்ப்பத்திலாவது இப் புத்தகங்களைப் படித்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.  என்னுடைய பலம் டிவியில் நான் முழுவதுமாக மாட்டிக்கொள்ளவில்லை.

ஆனால் என்னுடைய கவலை எல்லாம் இக் காலத்தில் இருக்கும் இளைஞர் மீதுதான். தெருவில் என் வீட்டு கீழே ஏகப்பட்ட இளைஞர்கள் கூடி வெறும் அரட்டை அடித்துக்கொண்டிருப்பார்கள்.  ஆனால் அவர்களில் யாருமே புத்தகம் படித்ததில்லை.  நான் இருக்கும் வளாகத்தில் 6 வீடுகள் உள்ளன.  அதில் ஒருவர் கூட புத்தகம் வாங்கவும் மாட்டார்கள்.  படிக்கவும் மாட்டார்கள்.  ஏன் என் வீட்டில் உள்ள என் மகனோ மகளோ தமிழ் புத்தகங்களைப் படிக்கவே மாட்டார்கள்.  என் அப்பா மனைவி எல்லாம் தமிழ் புத்தகங்களின் பக்கமே வர மாட்டார்கள். என் சகோதரன் வீட்டில் யாருமே தமிழ் புத்தகங்கள், பத்திரிகைகள் பக்கம் வரவே மாட்டார்கள். என் சகோதரன் நான்  தமிழ் புத்தகம் படிப்பதைப் பார்த்து கிண்டல் செய்வான். ஆனால் அவர்கள் முன் நான் குவித்து வைத்திருக்கும் தமிழ் புத்தகங்களைப் பார்த்து அவர்கள் சத்தம் போடுவார்கள்.  

இப்படியே போனால் ஒரு கட்டத்தில் தமிழ் புத்தகம் படிப்பது குறைந்து பின் யாரும் படிக்கக் கிடைக்காமல் போய்விடலாம்.  அந்தத் தருணத்தில் தமிழை வளர்க்க அரசாங்கமே பதிப்பாளர்களைக் கூப்பிட்டு புத்தகம் கொண்டு வர நிதி உதவி செய்யலாம்  அல்லது எதாவது ஒரு இடத்தில் எல்லோரையும் கூட்டி தமிழ் புத்தகங்கள் படிப்பவருக்கு சலுகையாக சன்மானம் வழங்கப்படும் என்று அளிக்கலாம்.  ஆனால் யார் எத்தனை பக்கங்கள் ஒரு புத்தகத்தை வாசிக்கிறார்கள் என்று கணக்குச் சொல்லும்படி இருக்கும்.  ஆனால் எனக்கோ புத்தகங்களைப் பார்த்தால் வாங்கி வைத்துவிட வேண்டுமென்ற வெறி இன்னும் துளிர்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

நான் ஒரே சமயத்தில் பல புத்தகங்களைப் படித்துக்கொண்டு  போவேன். மறந்து விடாமல் போவதற்கு புத்தகம் படித்து முடித்தப்பிறகு இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டேன் என்று எழுதுவேன்.  ஆனால் இப்போதோ நான் படிக்கும் புத்தகத்தைக் குறித்து சில பக்கங்கள் எழுத வேண்டுமென்று எழுதுகிறேன்.

இந்த இடத்தில் வல்லிக்கண்ணன் அவர்களையும், எஸ் ராமகிருஷ்ணன் அவர்களையும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.  ஒருமுறை வல்லிக்கண்ணன் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டத்தில் பேசக் கூப்பிட்டேன்.  வல்லிக்கண்ணன் மூச்சு விடாமல் அவர் படித்த அத்தனை நாவல்களைப் பற்றியும் சொல்லிக்கொண்டே போனார்.  மறக்க முடியாத நிகழ்ச்சி அது. 

சமீபத்தில் குவிகம் இலக்கியம் சார்பாக எஸ் ராமகிருஷ்ணன் எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று பத்து புத்தகங்களுக்கு மேல் புத்தகங்களைப் பற்றியும் புத்தக ஆசிரியரைப் பற்றியும் உற்சாகம் கரைபுரண்டோட சொல்லிக்கொண்டே போனார்.  

ஆனால் நான் உடனே படித்துவிட்டு எழுதி விட வேண்டும்.  இல்லாவிட்டால் மறந்து விடும்.  
    


Comments