அழகியசிங்கர்
நான் கிட்டத்தட்ட 300 கவிதைகள் எழுதியிருக்கிறேன். 185 கவிதைகள் கொண்ட அழகியசிங்கர் கவிதைகள் என்ற புத்தகம் கொண்டு வந்துள்ளேன். 300 பக்கங்கள் வரை இருக்கும். ஆனால் விலை ரூ.150 தான். புத்தகக் கண்காட்சியின்போது ஒரு சிலர் வாங்குவார்கள். என்னிடம் உள்ள அத்தனைப் பிரதிகளும் விற்க இன்னும் 20 புத்தகக் கண்காட்சியாவது நடைபெற வேண்டும். அதன்பின் வினோதமான பறவை என்ற கவிதைத் தொகுதியைக் கொண்டு வந்தேன். தெரியாமல் 300 பிரதிகள் அடித்து விட்டேன். பின் புத்தக வெளியீட்டு விழா என்றெல்லாம் நடத்தவில்லை. பத்திரிகைகளுக்கு அனுப்பினேன். பல பத்திரிகைகள் கண்டு கொள்ளவே இல்லை. வரப்பெற்றோம் என்ற தலைப்பில் ஒரு சில பத்திரிகைகள் அக் கவிதைத் தொகுதியைப் பற்றி கண்டு கொண்டது. என் கவிதைகளைப் பற்றி தமிழவன், நகுலன், வெங்கட் சாமிநாதன், ஞானக்கூத்தன், ரிஷி போன்ற நான் மதிக்கும் படைப்பாளிகள் எழுதி உள்ளார்கள்.
என் கவிதைத் தொகுதிகளை நான் புரட்டிப் புரட்டிப் பார்ப்பேன். என் கவிதைகளை நானே படித்து ரசிப்பேன். சமீபத்தில் புத்தகக் கண்காட்சியின்போது ஞானக்கூத்தன் வந்திருந்தார். அவரிடம் கேட்டேன். 'நானும் 'வினோதமான பறவை' என்ற கவிதைத் தொகுதி கொண்டு வந்துள்ளேன். யாரும் ஒன்றும் சொல்லவில்லை,' என்றேன். 'காலம் வரும். எல்லோரும் சொல்வார்கள்,' என்றார் அவர். எனக்கு அவர் சொன்னதைக் கேட்டு உடனே ஆச்சரியம். அப்படியெல்லாம் அவர் பேசிவிட மாட்டார்.
இந்த வினோதமான பறவை கவிதைத் தொகுதியை வெள்ளம் வந்து பதம் பார்த்துவிட்டது. அந்தப் புத்தகக் கட்டுகள் மட்டும் இருந்தால், இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ அந்தக் கவிதைத் தொகுதி விற்க.
நான் தொடர்ந்து கவிதைகளை ஒரு நோட்டில் எழுதிக் கொண்டு வருகிறேன். ஆனால் முன்பு இருந்த வேகம் இப்போது இல்லை. சில சமயம் பல தாள்களில் எழுதுகிற கவிதைகளை எங்கயோ வைத்துவிடுவேன். சில தொலைந்தும் போய்விடும்.
30ஆம் தேதி செப்டம்பர் மாதம் ஆறுமணிக்கு பரிசல் செந்தில் என்னை கவிதை வாசிக்க அழைத்தார். எனக்கு ஆச்சரியம். அவருக்கு எப்படி என்னை கவிதை வாசிக்கக் கூப்பிட வேண்டுமென்று தோன்றியது என்ற ஆச்சரியம். எப்படியும் கவிதை வாசிக்க வேண்டுமென்று நினைத்தேன். காரணம். பல கவிதை எழுதுபவர்கள் அங்கு வந்திருப்பார்கள். அவர்கள் முன் வாசிக்கலாம் என்ற எண்ணம்தான். ஆனால் நான் இப்போது இருக்கிற சூழ்நிலையில் என்னால் வர முடியாமல் போய்விட்டது. எதிர்பாராத திருப்பமாக நான் கவிதை வாசிக்க முடியாமல் போய்விட்டது.
அங்கு நான் எழுதி கல்வெட்டில் வந்த ஒரு கவிதையை வாசிக்கத்தான் நினைத்தேன். அதை நான் இங்கே அப்படியே தருகிறேன். நீங்கள் படித்துவிட்டு உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க முடிந்தால் நன்றாக இருக்கும்.
ரிடையர்டு ஆனால்...
அப்பா கேட்டார்:
ரிட்டையர்டு ஆனால் என்ன செய்யப் போகிறாய்?
வீட்டில் உன்னை மாதிரி சும்மா உட்கார்ந்திருப்பேன்
மனைவி கேட்டாள் :
ரிட்டையர்டு ஆனால் என்ன செய்யப் போகிறாய்?
சினிமா கச்சேரி என்று சுத்துவேன்
பையன் கேட்டான் :
ரிட்டையர்டு ஆனால் என்ன செய்யப் போகிறாய்?
ஊரைச் சுற்றுவேன். இந்தியா முழுவதும்
பார்க்காத இடம் அதிகம்
பெண் கேட்டாள் :
ரிட்டையர்டு ஆனால் என்ன செய்யப் போகிறாய்
லைப்ரரி போய் புத்தகக் குவியலில் முகம் புதைப்பேன்
நண்பன் கேட்டான்:
ரிட்டையர்டு ஆனால் என்ன செய்யப் போகிறாய்
காலையில் எழுந்தவுடன், மூக்கைப் பிடித்து உட்கார்ந்து விடுவேன்
பின் ஒவ்வொரு கோயிலாக படி ஏறுவேன்.
இலக்கிய நண்பர் கேட்டார்
ரிட்டையர்டு ஆனால் என்ன செய்யப் போகிறீர்
ஒவ்வொரு இலக்கியக் கூட்டமாகப் போவேன்
நானும் நடத்துவேன் கூட்டங்களை
அலுவலக நண்பர் ஒருவர் கேட்டார்
ரிட்டையர்டு ஆனால் என்ன செய்ய் போகிறீர்
ஒவ்வொரு பிராஞ்சாப் போவேன்
பார்ப்பேன் பணி புரிபவர்களை
எதாவது வித்தியாசம் தெரிகிறதா என்று..
நானே கேட்டேன்
ரிட்டையர்டு ஆனால் என்ன செய்யப் போகிறாய்..
கடைக்குப் போவேன் காய்கறி வாங்க
பால் பாக்கெட்டுகளை எடுத்து பிரிட்ஜில் வைப்பேன்
குளிப்பேன் தோன்றியபோது
சாப்பிட செல்வேன் ஓட்டலுக்கு
வண்டியை ஓட்டுவேன் அங்கும் இங்கும்
வெறுமனே மதியம் படுத்துத் தூங்குவேன்
எழுந்து காப்பி போடுவேன்
கம்ப்யூட்டரில் பேஸ் புக் பார்ப்பேன்.
ஒருநாள் மகிழ்ச்சியாப் போயிற்று என்று சந்தோஷப்படுவேன்.
ஆனால் சம்பாதிக்க மாட்டேன்.
Comments