Skip to main content

சில துளிகள்.......3


அழகியசிங்கர் 
- இன்றைய தமிழ் ஹிந்துவில் நவீன விருட்சம் 100வது இதழ் குறித்து குறிப்பு வந்துள்ளது.   தமிழ் ஹிந்துவிற்கு நன்றி.  

- நவீன விருட்சம் பத்திரிகையோனடு சேர்ந்து நான் இலக்கியக் கூட்டமும் நடத்தியிருக்கிறேன்.  ஆனால் எவ்வளவு கூட்டம் என்று எண்ணவில்லை. 200 இருக்கும்.  100 கார்டு வாங்கி எல்லோருக்கும் கூட்டம் பற்றி விபரம் சொல்வேன்.  திருவல்லிக்கேணி லேடீஸ் ஹாஸ்டல் மாடியில்தான் கூட்டம் நடக்கும்.  பார்த்தசாரதி கோயில் பக்கத்தில். வழக்கம்போல் கொஞ்சம் பேர்கள்தான் வருவார்கள்.  பெண்கள் வர மாட்டார்கள்.  வருபவர்கள் தலை வழுக்கையாக இருப்பார்கள்.

- கடந்த நாலைந்து மாதங்களாக அப்பா படுத்துப்படுக்கையாக இருக்கிறார்.  சில நாட்கள் நல்ல நினைவோடு இருக்கிறார்.  நான் அவரைப் பார்த்துக் கேட்டேன் : "நான் யார்?" என்று.  அவருக்கு இந்த 94 வயதிலும் கிண்டல் உண்டு.  "நீ என் அப்பா" என்றார் கையைக் காட்டியபடி.  அவர் சொன்னதைக் கேட்டு சிரிப்பாக இருந்தது.  என் மனûவிதான் குறிப்பிட்ட வேளைக்கு சாப்பாடு தருகிறார்.   நான்தான் ஊட்டி விடுவேன்.  ஆனால் அப்பா என்னைப் பார்த்துக்  கேட்பார்: க்ரோம்பேட்டையிலிருந்து உன் மனைவி எப்போது வருவாள் என்று.

- அப்பா கொஞ்சம் தெம்பாக இருந்தபோது வாசலைப் பார்த்தபடி இருந்த அறையிலிருந்து இன்னொரு அறைக்குப் போய் படுத்துக்கொள்ளப் போவார். நான் வாசலில் இருந்த அறையை இந்தியா என்பேன்.  தூங்கப் போகும் அறையை பாக்கிஸ்தான் என்பேன்.  அப்பாவைப் பார்த்து, "இந்தியாவிலிருந்து பாக்கிஸ்தான் போயிட்டியா," என்று கிண்டல் அடிப்பேன்.

- நான் விருட்சம் நூறாவது இதழ் கொண்டு வந்து விட்டேன் என்றேன் அப்பாவிடம்.  அவருக்கு ஒன்றும் புரியவில்லை.  

- நான் தலைமை அலுவலகத்தில் பணிபுரியும்போது விருட்சம் பத்திரிகையை ஒரு சில நண்பர்கள்தான் பார்ப்பார்கள்.  ஒன்றிரண்டு பேர்கள்தான் படிப்பார்கள்.. போனபோகிறது என்று ஒருவராவது அது குறித்துப் பேசுவார்.  2000 பேர்கள் உள்ள அலுவலகத்தில் இந்தக் கதி.

- மேற்கு மாம்பலத்தில் உள்ள ஆர்யாகவுடர் ரோடில் உள்ள  பிள்ளையார் கோயில் பக்கத்தில் உள்ள பத்திரிகைக் கடையில் விருட்சம் பத்திரிகையை விற்கக் கொடுத்தேன்.  5 பிரதிகள். அங்கே ஏகப்பட்ட சிறுபத்திரிகைகள் தொங்கிக் கொண்டிருக்கும்.  விருட்சம் பத்திரிகை விலை ரூ15.  அவருக்கு ரூ5 கொடுத்துவிடுவேன். பத்திரிகையும் புத்தகங்களையும் கொடுத்தேன்.  ஆனால் அவர் பத்திரிகை/புத்தகம் விற்றாலும் பணமே தர மாட்டார்.  பலமுறை அவரைப் பார்க்கப் போக வேண்டும்.  ஒருமுறை அவரைக் காணவே காணும்.  யாரோ இருந்தார்கள்.  போன் பண்ணினாலும் அவர் எடுக்க மாட்டார். அவரைப் பார்க்க முடியவில்லை.  எனக்கு கோபமாக இருந்தது.  அந்தக் கடை முன் சிறிது நேரம் நின்றேன்.  கண்ணை மூடிக்கொண்டேன்.  இனிமேல் இந்தக் கடைப்பக்கம் வரக்கூடாது என்று திரும்பி விட்டேன்.

- ஒரு சிறு பத்திரிகை வர வேண்டுமென்றால் அதற்கு முன்மாதிரியாக வேற ஒரு சிறு பத்திரிகை இருக்க வேண்டும்.  ஆரம்பத்தில் மலர்த்தும்பி என்ற பத்திரிகைதான் என்னைத் எழுதத் தூண்டியது.  அதை நடத்தியவர் என் பெரியப்பா பையன். அதன் பின் விருட்சம் என்ற பத்திரிகையை நடத்தத் தூண்டியது, ழ, கவனம் பத்திரிகைகளை நடத்திய நண்பர்களைப் பார்த்துதான்.   

- விருட்சம் பத்திரிகையை வாங்கிப் படிக்கும் நண்பர்களிடம் சொல்வேன். இந்தப் பத்திரிகையில் எதாவது ஒரு கவிதை, ஒரு கதை, அல்லது கட்டுரை படிக்க சிறப்பாக இருக்கலாம்.  அதற்காக நீங்கள் பைசா கொடுத்து வாங்கியதாக நினைத்துக் கொள்ளுங்கள் என்று.    

- ஒருமுறை என் நண்பர் ஒருவர் எனக்கு உதவி செய்வதாக சொன்னார்.  வேண்டாம் என்றேன்.  அவர் கேட்கவில்லை.  அவரிடம் ஒரு நோட்டைக் கொடுத்து விருட்சம் அனுப்ப வேண்டிய கவர்களைக் கொடுத்து முகவரிகளை எழுதச் சொன்னேன்.  ஒருவாரம் கழித்து நண்பரைப் பார்த்துக் கேட்டேன் : "என்ன ஆயிற்று?" அவர் சிரித்தபடியே  "இன்னும் பசங்க யாரும் கண்ணில் படவில்லை," என்றார்.  

- விருட்சம் 17வது இதழில் பாதகமான சில கடிதங்களைப் பிரசுரம் செய்து விட்டேன்.  அச்சடித்து வந்தும் விட்டது.  அதைத் தபாலிலும் அனுப்பி விட்டேன்.  ஆனால் நான் நிம்மதி இல்லாமல் இருந்தேன்.  அந்தக் கடிதங்கள் மூலம் சிலர் மனதைப் புண்படுத்தி விட்டதாகத்  தோன்றியது.  அந்தச் சமயத்தில் பிரமிள் நட்பினால் நான் ஷ்ரிடி சாய்பாபா பக்தனாக இருந்தேன். சாய்பாபாவை வேண்டிக்கொண்டேன்.  இந்த இக் கட்டிலிருந்து என்னைக் காப்பாற்று என்று.  இரண்டு நாட்கள் கழித்து ஒரு தபால்காரர் என் வீட்டிற்கு வந்தார். நான் அனுப்பிய எல்லா தபால்களும் எக்மோரில் உள்ள சார்டிங் அலுவலகத்தில் இருப்பதாகவும், உரிய தபால்தலைகள் இணைக்கவில்லை என்றும் கூறினார். எடுத்துப் போகச் சொன்னார்.  என்னால் நம்பவே முடியவில்லை. நான் சரியாகத்தான் ஸ்டாம்பு இணைத்திருந்தேன்.  ஆனால் அங்குப்போய் எல்லாவற்றையும் எடுத்து வந்து விட்டேன்.   பத்திரிகையில் இருந்த கடிதம் வந்தப் பக்கங்களைக் கிழித்து விட்டேன்.  திரும்பவும் எல்லோருக்கும் அனுப்பி விட்டேன்.   நான் அடைந்த நிம்மதிக்கு அளவே இல்லை.  சாய் மிராக்கல்.

- எனக்கு கவிதை ரொம்பவும் பிடிக்கும்.  ஆனால் அது ஆபத்தானது. எழுதுபவர்களுக்குத் தெரியாமல் கவிதை எழுதுபவர்களைக் காட்டிக் கொடுத்துவிடும். உங்கள் தலைவிதியைச் சொல்லி விடும்.   'நானை' பிரதானப்படுத்தி  கவிதை எழுதினால் ஆபத்துதான்.  ஆனால் ஒருவர் அக் கவிதையைப் படிக்கிறார் என்றால் அது படிப்பவரையும் பிடித்துக்கொள்ளும். கவிதையைப் படியுங்கள்.  எழுதுங்கள். ஆனால் உணர்ச்சி வசப்பட்டு அதனுடன் ஐக்கியமாகி விடாதீர்கள். 

- நவீன விருட்சம் ஒன்றாவது இதழ் 16 பக்கங்கள்தான்.  எல்லாப் பிரதிகளும் தீர்ந்து விட்டன.  என் நண்பர் ஸ்ரீகுமார் திரும்பவும் ஒரு 100 பிரதிகள் அதேபோல் அச்சடித்துக் கொண்டு வந்து விட்டார்.  என்னால் நம்பவே முடியவில்லை.  ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மேற்குமாம்பலத்தில் மகாதேவன் தெருவில் உள்ள  காமாட்சி ஹாலில் நடைபெறும் கூட்டத்தில் இலவசமாகக் கொடுக்க உள்ளேன்.
                                                                                (இன்னும் வரும்)

Comments

Popular posts from this blog