Skip to main content

ம வே சிவக்குமார் என்ற எழுத்தாளரைப் பற்றி சில பகிர்வுகள்..



அழகியசிங்கர்
 எனக்கு ம வே சிவக்குமார் பற்றி வட்டம் என்ற சிறுகதை கணையாழி இதழிலில் வந்தபோதே தெரியும்.  நான் அக் கதையைப் படித்தபோது என்ன ஜோல்னா பை வைத்திருக்கும அறிவு ஜீவிகளை கிண்டல் செய்திருக்கிறாரே என்று நினைத்தேன். 

 அதன்பின் அவர் பேங்க் ஆப் பரோடா வங்கிக் கிளையில் பணிபுரிந்தபோது அறிந்திருக்கிறேன். அவர் அலுவலகம் பீச் ரயில் நிலையத்தின் எதிரில் இருந்தது.  என்னுடைய அலுவலகம் அவர் அலுவலகத்திற்குப் பின்னால் இருந்தது.

 கடைசியாக அவரைப் பார்த்தது மயிலாப்பூர் சங்கீத சபாவில் அவருடைய புத்தக வெளியீட்டு விழாவின் போது.  அப்போது அவர் பரபரப்பாகக் காணப்பட்டார்.  சமுத்திரகனி, எஸ் வி சேகர் போன்ற பிரபலங்கள் அக் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள்.  அப்போதுதான் தெரிந்தது அவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தார் என்று. அந்த முயற்சியை எஸ்வி சேகர்தான் தடுத்தார் என்பதையும் அக் கூடடத்தில் அறிந்து கொண்டேன்.  சிவாஜி மாதிரி நடித்து தானே படம் எடுத்து கொண்டு வரவேண்டும் என்ற அவர் ஆசையை அப்போது வெளியிட்டார். 

 தூர்தர்ஷனில் தான் எழுதியது நாடகமாக வரவேண்டுமென்று போராடியவர் ம வே சிவக்குமார்.  அது நடக்காத கோபத்தில் தூர்தர்ஷன் முன்னால் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.  இப்படி துடிப்பாக பல விஷயங்களில் ஈடுபடுவார் சிவக்குமார்.  என்ன நடக்கிறது பார்க்கலாம் என்ற போக்கு அவரிடம் உண்டு.

 தம் திறமையை யாராவது கவனிக்க வேண்டுமென்ற துடிப்பு அவருக்கு உண்டு.  திறமையாக பல கதைகள் எழுதி இருக்கிறார்.  பாப்கார்ன் கனவுகள்  என்ற பெயரில் கல்கியில் தொடர்கதை எழுதியிருக்கிறார்.  பாப்கார்ன் கனவுகள் என்ற அவர் புத்தகத்தை வங்கியைச் சேர்ந்த அவருடைய  இரண்டு நண்பர்கள் புததகமாகக் கொண்டு வந்தார்கள்.  அந்த அளவிற்கு அவருக்கு வாசகர் வட்டமும்உண்டு.  புத்தகம் விற்கத் தெரியாதவர்கள் அவருடைய பாப்கார்ன் கனவுகள் புத்தகத்தை ஆயிரம் பிரதிகள் அடித்திருந்தார்கள்.

சிவக்குமாருக்கும் புத்தகம் எப்படி விற்பது என்பது தெரியாது. அந்தப் புத்தகத்தை அச்சடித்தவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ள அவரது நண்பர் கணேசனும், இன்னொரு நண்பர் மாதவமூர்த்தியும்.

 விற்காமல் பரணில் போடப்பட்டிருந்த அந்தப் புத்தகப் பிரதியை நான்  புத்தகக் கண்காட்சி சாலையில் விற்க முயற்சி செய்தேன்.  எழுத்தாளர்களுக்கு கர்வம் இருக்க வேண்டுமா என்பது எனக்குத் தெரியாது.  ஆனால் சிவக்குமாரிடம் அந்தக் கர்வம் உண்டு.  துணிச்சலாக வெளிப்படையாகவே அவர் வெளிப்படுத்துவார்.

 ஒருமுறை சிவக்குமாரின் நாயகன் என்ற சிறுகதைத் தொகுதியை நான் வேற பெயரில் நவீன விருட்சத்தில் விமர்சனம் செய்திருந்தேன். அதில் ஒ வரி ஒருசில கதைகளைப் பார்த்தாலே போதும் நமக்கு அயர்ச்சி ஏற்பட்டு விடும் என்று எழுதி விட்டேன்.  சிவகுமாருக்கு என் மேல் படுகோபம்.  ஒரு சமயம் பீச் ரயில்வே நிலையத்தில் நானும் சிவக்குமாரும் சந்தித்துக் கொண்டோம். 

 "வாங்க... டீ குடிக்கப் போகலாம்," என்று ஓட்டல் அமீனுக்கு அழைத்துக் கொண்டு போனார்.
   அந்தச் சமயத்தில் எனக்கு அவர் புத்தகத்தை விமர்சனம் செய்து விருட்சத்தில் வந்த விஷயமே மறந்து போய்விட்டிருந்தது.

 டீ குடிக்க ஆர்டர் செய்துவிட்டு,  "யார் அந்த ஹரிஹரன்?" என்று கேட்டார்.  நான்தான் அந்தப் பெயரில் அவர் சிறுகதைத் தொகுதியை விமர்சனம் செய்திருந்தேன்.  நான்தான் அந்த ஹரிஹரன் என்று அவரிடம் சொல்லவில்லை.

"அந்த ஹரிஹரனைப் பார்த்தால் செருப்பால அடிப்பேன்," என்றார் கோபத்தோடு.  நான் ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்தேன். உண்மையில் விருட்சத்தில் அவர் புத்தகத்தைப்பற்றிய விமர்சனத்தை அரைப் பக்கம்தான் எழுதியிருந்தேன். 

"என்ன தெரியும் உங்களுக்கு?  இதோ பாருங்கள்... "என்று அவர் வைத்திருந்த சூட்கேûஸத் திறந்தார்.  அதில் உள்ள சில கடிதங்களைக் காட்டினார்.  "இதோ பாருங்கள்...குமுதத்தில் வந்திருக்கிறது...கல்கியிலிருந்து வந்திருக்கிறது...ஆனந்தவிகடன்ல வந்திருக்கிறது..என்ன எழுதச் சொல்லி, ஹரிஹரனுக்குத் தெரியுமா? யார் படிக்கிறாங்க இந்த விருட்சத்தை. பெரிசா விமர்சனம் பண்ணிட்டான், " என்று சத்தம் போட ஆரம்பித்தார்.  அவரை நான் சமாதானம்செய்து அழைத்துக் கொண்டு போனேன்.  அவர் வீடு அப்போது க்ரோம்பேட்டையில் இருந்தது.  மாம்பலம் வரை அவர் என்னை மாதிரி சிறுகதை யாருக்கு எழுத வரும் என்று சொல்லிக்கொண்டே வந்தார்.  உண்மையில் சிவக்குமாருக்குத்தான் இப்படி சொல்கிற தைரியம் இருக்கும்.  இந்தச் சம்பவத்தின் போது புத்தக விமர்சனம் செய்யும் ஆபத்தை உணர்ந்து கொண்டேன்.  அதற்குப் பிறகு அவரை சந்தித்தபோது இந்த நிகழ்ச்சியை அவர் மறந்து விட்டிருந்தார். 

அசோகமித்திரன் 82 என்று கூட்டம் நடத்தினேன்.  அந்தக் கூட்டத்தில் ம வே சிவக்குமாரைப் பேசச் சொன்னேன்.  அவர் வந்து பேசினார். மகேஷ் என்ற அவருடைய நெருங்கிய நண்பரையும், ராஜாமணி என்ற நண்பரையும் பார்க்கும்போது சிவக்குமாரைப் பற்றி விஜாரிக்காமல் இருக்க மாட்டேன்.

 எதிர்பாராதவிதமாக இன்று காலை மூன்று மணிக்கு டீ குடித்துக்கொண்டிருக்கும்போது அவர் மாரடைப்பால் இறந்து விட்டார் என்ற செய்தியை அறிந்தேன்.  அவர் மறைவால் துன்பப்படும் அவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
   

Comments

வேடந்தாங்கல் படித்திருக்கிறீர்களா? மிகச்சிறந்த கதை...