அழகியசிங்கர்
சமீபத்தில் நினைவோடை என்ற பெயரில் சுந்தர ராமசாமி அவர்களுடைய புத்தகம் படித்தேன். இந்தப் பெயரில் க நா சு வைப் பற்றி அவர் எழுதிய புத்தகத்தைத்தான் படித்து முடித்தேன். சுந்தர ராமசாமி பேசியதை அரவிந்தன் அவர்கள் பதிவு செய்து அதை ஒரு அற்புதமான புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார். இந்தப் புத்தகம் படிக்கும்போது நேரிடையாகவே சுந்தரராமசாமி க நா சுவைப் பற்றி சொல்வதுபோல் இருக்கிறது. 2003ஆம் ஆண்டு வெளிவந்த புததகம் இது.
இந்தப் புத்தகத்தில் இன்னொரு ஆச்சரியம். அரவிந்தன் ரொம்ப கேள்விகளைக் கேட்டு சுந்தர ராமசாமியை தொந்தரவு செய்யவில்லை. உண்மையில் சு ரா தான் க நா சுவைப் பற்றி தனக்குத் தோன்றியதையெல்லாம் பேசிக் கொண்டே போகிறார். 100 பக்கங்களுக்கு மேல் இந்தப் புத்தகம் போய்க் கொண்டிருக்கிறது.
இந்தத் தலைப்பில் பல புத்தகங்கள் வந்த சமயத்தில் நான் சிலரைப் பற்றி சுரா எழுதியதைப் படித்திருக்கிறேன். இன்னும் இரண்டு புத்தகங்களான பிரமிள் பற்றி சுரா எழுதியது, கிருஷ்ணன் நம்பியைப் பற்றி அவர் சொல்ல சொல்ல எழுதிய புத்தகங்களை முன்பே படித்திருக்கிறேன். இப் புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் எனக்கு அந்தப் புத்தகங்களையும் திரும்பவும் எடுத்துப் படிக்க வேண்டுமென்று தோன்றுகிறது.
எதிலும் மிக உணர்ச்சி இல்லாமலே சு ரா அவர்கள் அவருடைன் பழகிய எழுத்தாள நண்பர்களைப் பற்றி எழுதியிருக்கிறார். இந்தப் பதிவில் பதிவின் நம்பகத்தன்மையை சுரா சொல்வதன் மூலம் உறுதிப் படுத்தி உள்ளார்.
இந்தப் புத்தகம் மூலம் க நா சு வைப் பற்றி தெரியாதவர்கள் அறிந்து கொள்ள முயற்சி செய்யும்போது சில விஷயங்கள் ஆச்சரியமாகவே இருக்கும். க நா சுவைப் பற்றி சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்று படிப்பவர்கள் நம்புவார்கள். உண்மையும்அ அதுதான்.
ஒரு நாள் என்ற க நா சு நாவல் மூலம் சுராவிற்கு க நா சு எப்படி அறிமுகம் ஆகிறார் என்பதைச் சொல்லிக் கொண்டே போகிறார். க நா சு வை மட்டும் இப் புததகம் மூலம் சொல்ல வரவில்லை. புதுமைப் பித்தன் பற்றியும், மௌனியைப் பற்றியும் சொல்கிறார். இன்னும் பலரைப் பற்றியும் அவர் சொல்லிக் கொண்டே போகிறார். பேச்சு வாக்கில் இதையெல்லாம் சொல்வதுபோல் தெளிவாக சொல்லிக் கொண்டே போகிறார்.
வெள்ளமடம் என்ற இடத்தில் ஒரு பள்ளிக்கூட திறப்பு விழாவிற்கு சுந்தர ராமசாமி அவருடைய மாமாவுடன் போகிறார். அப்போது அவர் பார்த்த புதுமைப் பித்தனை இப்படி வர்ணிக்கிறார்.
''எங்களது வரிசையில் ஒருவர் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவரது உடல் அசைவுகளும் சிரிக்கிற விதங்களுமெல்லாம் கவனிக்கும்படியாக இருந்தன. இதைத் தவிர அவரைப் பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. ரகுநாதனுடைய 'வாழ்க்கை வரலாறு' படித்தபோது பு.பி பற்றி ஒரு இடத்தில் வர்ணித்திருப்பார். அது அந்தக் கூட்டத்தில் நான் பார்த்த உருவத்தோடு ரொம்பவும் பொருந்தி வருவதாக இருந்தது."
சு ரா அவர்கள் புதுமைப்பித்தனைப் பார்த்ததைப் பற்றி உறுதிப் படுத்த கமலா விருத்தாசலத்திடம் கேட்கிறார். வெள்ளை மடததிற்கு பு பி வந்தாரா என்பததான் கேள்வி. ஆனால் அவர் கேள்வியை யாரும் உறுதிப் படுத்தவில்லை.
ஏன் சு ரா புதுமைப் பித்தனைப் பற்றி இப்படி விஜாரிக்கிறார் என்றால் அவர் பார்க்க விரும்பிய எழுத்தாளர்களில் ஒருவர் புதுமைப்பித்தன், இன்னொருவர் க நா சு.
இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது க நா சுவை சந்தித்த நிகழ்ச்சியையே இவ்வளவு சுவாரசியமாக சு ரா விவரிப்பார் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. திருவனந்தபுரத்தில் தங்கியிருந்த க நா சுவைப் பார்க்க சு ராவும் நம்பியும் செய்கிற முயற்சியை ஒரு கதைபோல் விவரித்துக் கொண்டு போகிறார்.
பின் அவர்கள் இருவரும் சேர்ந்து க நா சு வை ஒரு பள்ளிக்கூடத்தில் பேச ஏற்பாடு செய்கிறார். அந்தப் பள்ளிக்கூடத்தில் இருப்பவர்களுக்கு க நா சுவைப்பற்றி தெரிந்திருக்க வில்லை. ஆனால் கே என் எஸ் என்ற பெயர் தெரிந்திருக்கிறது. க நா சு ஆங்கிலத்திலும்ட எழுதுவதால் இந்தப் பெயர் தெரிந்திருக்கிறது. க நா சு திறமையாகப் பேசுவார் என்று எதிர்பார்த்த சு ராவுக்கும் நம்பிக்கும் பெரிய ஏமாற்றம். அந்தக் கூட்டத்தில் க நா சு சரியாகவே பேசவில்லை.
இந்தப் புத்தகத்தில் க நா சு தான் புதுக்கவிதை என்ற பதச் சேர்க்கையை முதன் முதலாக உருவாக்கியவர் என்று குறிப்பிடுகிறார் சுரா.
க நா சு வைப் பற்றி பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. க நா சு எந்த ஊருக்குச் சென்றாலும் ஒரு இடத்தில் தங்கி விட்டால் அந்த ஊரைச் சுற்றிப் பார்க்க விரும்ப மாட்டார். நாகர் கோவிலில் 15 நாட்கள் வந்து தங்குவதாக சொல்லிவிட்டு ஒரு மாதத்திற்கு மேல் தங்கி விட்டுச் சென்றிருக்கிறார். க நா சு அவர் குடும்பத்தைப் பற்றி எந்தத் தகவலையும் யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை என்று குறிப்பிடுகிறார் சுரா.
ஒரு இடத்தில் க நா சு வைப் பற்றி சுரா இப்படி குறிப்பிடுகிறார்:
"அவரிடம் ஒரு சின்னப் பெட்டி மட்டுமே இருந்தது. வேறெதுவும் கிடையாது. அவரிடம இருக்கும் ஆடைகளும் குறைவு. அதைத் தூக்கிக்கொண்டு போய்விடுவார். அந்தப் பெட்டியை அறையிலேயே வைத்துவிடடு போங்கள் என்று நாங்கள் சொல்ல முடியாது. அவர் திரும்பி வராமலேயே போய் விடுவார். போய்விட்டால் என்றால் அவரிடமிருந்து ஒரு கடுதாசிகூட வராது. அவருடைய சுபாவம் அப்படி."
இதைச் சொல்லும்போது சுரா கநாசுவைப் பற்றி எந்தப் புகாரும் செய்யவில்லை.
இந்தப் புத்தகத்தில் சுந்தர ராமசாமி க நா சு படைப்புகளைப் பற்றி கூறும் சில கருத்துக்களுடன் நான் முரண்படுகிறேன்.
கநாசு ஒரு முக்கியமான இலக்கிய விமர்சகர் என்று சொல்லமுடியாவிட்டாலும் கூட ஒரு மாற்றத்தை உருவாக்கிய இலக்கிய விமர்சகர் என்கிறார். இந்தக் கருத்துடன் நான் உடன் படவில்லை. வேறு ஒருவர் எழுதிய புத்தகத்தைப் பற்றி அபிப்பிராயம் சொல்லக் கூட இன்றைய தமிழ்ச் சூழ்நிலையில் யாரும் இருப்பதில்லை. கநாசுவோ தமிழ் புத்தகங்களையே படிக்காத காலத்தில் தமிழில் எழுதிய பல எழுத்தாளர்களை அறிமுகப் படுத்தி உள்ளார். சுந்தர ராமசாமியின் எழுத்தைக் கூட அவர் சிலாகித்து எழுதி உள்ளார்.
தமிழ்ச் சூழலைப் பார்க்கும்போது இரண்டு மூன்று நல்ல நாவல்களை நன்றாகவே எழுதி இருக்கிறார் என்கிறார் சு ரா. சிறந்த நாவலை அவரால் உருவாக்க முடிந்திருக்கவில்லை என்றும் குறிபபிடுகிறார். இந்தக் கருத்துடனும் நான் உடன்படவில்லை. இரண்டு மூன்று நாவல்கள் மட்டுமல்ல பல நாவல்களை அவர் எழுதியிருக்கிறார். உலக தரத்திற்கு சொல்லும்படியாகவும் அவர் நாவல்கள் இன்றும் இருக்கின்றன.
கநாசுவின் சிறுகதைகள் எனக்கு அவ்வளவு உயர்வாகத் தெரியவில்லை என்று சு ரா குறிப்பிடுகிறார். இந்தக் கருத்துடனும் நான் சுராவிடமிருந்து முரண் படுகிறேன். க நா சுவின் ஆடரங்கு என்ற
சிறுகதைத் தொகுதியே சிறப்பானது. பல தரமான சிறுகதைகளை அவர் எழுதியிருக்கிறார்.
க நா சு மொழிபெயர்ப்புகளை சரளமாக எழுதி உள்ளதாக சுரா அவர்கள் குறிப்பிடுகிறார். ஒரு மொழிபெயர்ப்பு என்பது எழுதப் படுகிற மொழியில் எல்லோரும் வாசித்துப் பழகும்படி எழுதப்பட வேண்டும். அந்த முயற்சியை க நா சு எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் செய்திருககிறார் என்று தோன்றுகிறது.
இறுதியில் க.நாசுவின் பங்களிப்பாக சுரா கருதுவது புதுக்கவிதைக்கு அவர் ஆற்றியது. இதன் மூலம் தமிழில் பல முயற்சிகளில் ஈடுபட்ட க நா சுவை புதுக்கவிதையுடன் முடித்து விட்டார்.அப்படிச் சொல்வது சற்று வருத்தமாகத்தான் உள்ளது.
க நா சுவைப் பற்றி தன்னுடைய அபிப்பிராயங்களை சு ரா சொன்னாலும், க நா சு மீது அளவு கடந்த மரியாதை வைத்திருந்தார்.
கநாசு மறைவைக் குறித்து அவர் இப்படி எழுதுகிறார்:
"அவரது மறைவு எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என்னால் தாங்கிக்கொள்ள முடிந்திருக்கவில்லை. அவரைப் போன்ற ஒரு பெரிய மனிதரைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்ததைப் பெரிய விஷயமாகத்தான் மதிக்கிறேன்."
இதைப் படிக்கும்போது மேன்மையான ஒருவரைப் பற்றி மேன்மையானவர் எழுதியதாகத்தான் தோன்றியது.
சுந்தர ராமசாமி - நினைவோடை - க நா சு -தொகுப்பு : அரவிந்தன் - பக்கம் 110 - முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2003 - விலை ரூ.50 - வெளியீடு : ôலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் பி லிட், 669 கே பி சாலை, நாகர்கோவில் 629001 - தொலைபேசி எண் : 04652-278525
Comments
பாராட்டுகள். .