Skip to main content

மறந்து போன பக்கங்கள்...2


அழகியசிங்கர்


தி சோ வேணுகோபாலனின் கோடை வயல் தொகுப்பில் உள்ள இரண்டாவது கவிதை இது.  இத் தொகுதியில் மொத்தம் 29 கவிதைகள் உள்ளன.  ஒவ்வொரு கவிதையாகக் கொண்டு வர எண்ணத்தில் உள்ளேன். படித்து உங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டுகிறேன்.

நான் கவியானேன்

முகக் கண்ணாடியில்
முனைந்து பார்த்தேன்.
கண்களில் கவனமாய்
கவிஞனைத் தேடினேன்.
புருவ மத்தியில்
புலப்படவில்லை
சிந்தனைக் கொக்கி
சுருங்கிடும் நெற்றியில்
கோடுகட் கிடையில்
தேடினேன்:  கண்டிலன்.
நாசியின் நீளம்
சிந்தனைக் கறிகுறி
என்றனர்: அளந்தேன்.
அளவிலும் தோல்வியே!
என்ன தெரிந்தது?
நானும் மக்களின்
தொகுதியில் ஒருவனாய்
பேதம் தவிர்த்துக்
கலந்து நிற்பதே!

கவிதை பின் எப்படிக்
கனன்றுயிர்க் கின்றது?
காகிதம் எடுத்து
வேண்டுமென் றெழுத
விரும்பினாலும் வராத
வித்தையை எங்ஙனம்
விளைவித்தேன் நான்?
என்னுளே ஏதோ
குமுறிச் சிரித்தது:

பித்தோ ? வெறியோ?
எழுத்திலே வேகம்
ஏறித் துடித்தது:
நான் எதற்கெழுதினேன்?
என்செயல் இதிலே
எதுவும் இல்லை.
ஏனெனில் எனக்கே
புரிந்திட வில்லை!
ஒருக்கால் மாந்தர்
ஒவ்வொருவருமிக்
கர்ப்ப வேதனை
கொண்டவர் தாமோ?
ஏதோ சொல்ல
எழுதுகோல் எடுத்திங்கு
எழுதிய பின்னர்
ஏமாறிப் போய்
புரியாப் புதிராய்
உலவிட விட்டுக்
காகிதம் கிறுக்கிக்
'கவி-யானேனே!'

Comments