Skip to main content

இன்றைக்கு ஸ்டெல்லா புரூஸ் பிறந்தநாள்....


அழகியசிங்கர்



பொதுவாக நான் யார் பிறந்தநாளையும் ஞாபகம் வைத்துக்கொள்ள மாட்டேன்.  ஆனால் சமீபத்தில்தான் இந்த பிறந்தநாள் ஞாபகம் என்னிடம் ஒட்டிக் கொண்டுள்ளது.  குறிப்பாக ராம் மோஹன் பிறந்த நாளை நான் மறப்பதில்லை.  ராம் மோஹன் என்பவர் வேறு யாருமில்லை ஸ்டெல்லா புரூஸ்.  அவருடைய பிறந்த நாள் இன்று.  அவர் உயிரோடு இருந்திருந்தால், இன்று 75 வயதாவது அவருக்கு ஆகியிருக்கும்.  உண்மையில் எனக்கு அவருடைய பிறந்த தேதி மாதம் மட்டும் ஞாபகம் இருக்கிறது.  அவர் எந்த வருடம் பிறந்தார் என்பது ஞாபகத்தில் இல்லை.  அவர் சொன்னதும் இல்லை. தானாகவே உயிரை மாய்த்துக் கொண்ட எழுத்தாளர்களில் இவர் ஒருவர், ஆத்மாநாம் இன்னொருவர்.  ஸ்டெல்லா புரூஸ் அதுமாதிரி செய்தது சரியான செயலாக நான் கருதவில்லை.  

அவர் ஏன் ராம் மோஹன் என்று எழுதாமல் ஸ்டெல்லா புரூஸ் என்ற பெயரில் எழுதினார் என்பதற்கு ஒரு கதை உண்டு.  அவர் நேசித்த பெண்ணிற்கு வேறு சிலரால்  அந்நியாயம் நடந்ததால் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டு விட்டாள்.  அவள் நினைவாக அந்தப் பெயர் அவர் வைத்துக் கொண்டார்.

ஸ்டெல்லா புரூஸ் காளி-தாஸ் என்ற பெயரில் எளிமையான கவிதைகள் பல எழுதி உள்ளார்.  அவர் கவிதைகள் ழ என்ற பத்திரிகையிலும், விருட்சத்திலும் பிரசுரமாயிருக்கின்றன.  

மையம் வெளியீடாக வெளிவந்த நானும்  நானும் என்ற கவிதைத் தொகுப்பு 1996ஆம் ஆண்டு வந்துள்ளது.  அதைத் திரும்பவும் விருட்சம் வெளியீடாக கொண்டு வந்துள்ளேன்.  அந்தப் புத்தகத்தின் விலை ரூ.50 தான்.   அந்தப் புத்தகம் விரும்புவோர்.  அழகியசிங்கர், விருட்சம் வெளியீடு, 7 ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 33ல் என்னிடம் தொடர்பு கொள்ளலாம்.  தொலைபேசி எண்.9444113205

நானும் நானும் என்ற தொகுப்பிலிருந்து, ஸ்டெல்லா புரூஸ் நினைவாக ஒரு கவிதையை இங்கே வெளிப்படுத்த விரும்புகிறேன்.

ஆட்டம்

கற்றுக் கொள்ள முடியாது இனி
காலம் கழியும்
ஆட வேண்டும் எனக்கு உடனே
நிமிஷங்களுக்கு மேடையில இல்லை
வாழ்க்கை பூரா
நிறுத்தாமல்
களைத்து விடாமல்
நினைத்துப் பார்க்கத் தெரியாமல்
ஆட்டமே மிஞ்ச
ஆட்டமாக நிறைய
ஆடி விட வேண்டும் - ஒரே ஆட்டம்
முடிவு இல்லாத ஆட்டமாகத் துவங்குகிறேன்
இப்போது ஆடிக் கொண்டிருப்பது
ஆட்டம் மட்டும்தான்

Comments