Skip to main content

கசடதபற மே 1971 - 8வது இதழ்



நானுமென்னெழுத்தும்

                                                                                       நகுலன்

    



நின் கைவசம்
என் கைப்பிரதி

"இதனையெழுது"என்றாய்
எழுதினேன்.

"இதனையழி" என்றாய்
"அழித்தேன்"
"இதனையிவ் வண்ணமெழுது" என்றாய்
சொன்னவண்ணமே செய்தேன்.

இதுவென்னூல்
இதுவென் பெயர்
இது வென்னெழுத்து
விமர்சனமும் விரைவில் வந்தது
"ஆ என்ன வெழுத்து," என்றாரொருவர்
"ஆ இதுவன்றோ வெழுத்து" என்றாரொருவர்.

என்எனழுத்தில் நானில்லை
என்றாலுமென் பெயருண்டு
எழுதியெழுதி அழித்தேன்
அழித்து அழித்து ஆளானேன்.
விமர்சகரும் சொல்லி விட்டார்
இல்லா ததையெல்லாம்
உண்டென்று
சொல்லி விட்டார்.

மாமுனி பரமஹம்ஸன்
அவன் மாபெரும் சீடன்
சொன்னான்
"மாயை யென்பது
மன்பதையனுபவம்"
மாயையென்னெழுத்து
மாமாயை
என் வாழ்வு
என்றாலுமென்ன
இது வென்னூல்
இது வென்பெயர்
இது வென்னெழுத்து.

கவிதையை பொதுவாக எளிதாக எழுதுவதாக தோன்றினாலும, நகுலன்   எழுத்து எளிதாக புரிந்து விடாது.  இக் கவிதையில் நகுலன் என்ன சொல்ல வருகிறார். அவருடைய கவிதையை எழுதிவிட்டு யாரிடமோ கொடுக்கிறார்.  பின் அவர் சொல்வதுபோல், வேறு மாதிரியாக கவிதையை மாற்றி மாற்றி எழுதுகிறார்.  அவர் எழுத்தில் அவர் இல்லை என்கிறார்.  ஆனால் அவர் எழுதியதாக கவிதை அடையாளப் படுத்தப் படுகிறது.  அப்படி வெளிப்படுகிற கவிதையை விமர்சகர் இல்லாததையெல்லாம் சொல்லி புகழ்கிறார்.

இறுதியில் அவர் எழுத்தை மாயை என்கிறார். இந்த மாயையில் அவர் வாழ்வு, அவர் எழுத்து எல்லாம் ஒன்று என்கிறார்.

Comments