Skip to main content

புத்தக விமர்சனம் 7

 


அழகியசிங்கர்






நான் சில தினங்களுக்கு முன் தாம்பரம் சென்றேன்.  வெயில் சற்று குறைவாக இருக்கும்போது போனேன்.  மின்சார வண்டியில தாம்பரம் சென்றேன்.  பஸ்ஸில் சென்றால் அதிக நேரம் எடுக்கும். மின்சார வண்டியில் போவதுதான் சரி.  எப்போதும் நான் எங்காவது போனால் புத்தகம் ஒன்றை எடுத்துக்கொண்டு போவேன்.  படிக்க முடிந்தால் படிப்பேன்.  ஒரு ஜோல்னாப் பையில் நான் இப்படி புத்தகம் போட்டு எடுத்துக்கொண்டு போவது என் நண்பர் ஒருவருக்குப் பிடிக்காது.

நான் இந்த முறை எடுத்துக்கொண்டு போன புததகம் 'இந்தியா 1948' என்ற புத்தகம்.  அசோகமித்திரன் எழுதிய நாவல் இது. கிட்டத்தட்ட 144 பக்கங்கள் கொண்ட நாவல்.  நான் மாம்பலம் ரயில் நிலையத்தில் ஏறியவுடன், உட்கார இடம் பார்த்துக்கொண்டு பின் நிதானமாக இந்தப் புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டேன்.  என் கவனம் எல்லாம் புத்தகத்தில் இருந்தாலும், ஒவ்வொரு ஸ்டேஷனிலும் வண்டி நிற்கும்போது, வண்டியில் ஏறுபவர்களைப் பார்ப்பேன்.  எந்த ஸ்டேஷனலில் வண்டி நிற்கிறது என்பதையும் கவனிப்பேன்.

தாம்பரம் வந்தடைந்தபோது புத்தகத்தில் 35 பக்கங்கள் படித்து விட்டேன்.  எனக்கு இது ஆச்சரியம்.  இது மாதிரி இரண்டு முறை நான் தாம்பரம் வரை போய் வந்த நாட்களில் இப் புத்தகம் முழுவதும் படித்து முடித்து விட்டேன்.

அசோகமித்திரனிடம் எனக்குப் பிடித்த விஷயம்.  அவர் ஆயிரக்கணக்கான பக்கங்களில் நாவல் எழுத மாட்டார்.  அவர் எழுத்தில் சொற் சிக்னம் மிக முக்கிய விஷயம்.  ஒரு பெரிய விஷயத்தை இரண்டு மூன்று வரிகளில் சொல்லி முடித்து விடுவார்.  இந்த நாவலையும் அப்படித்தான் எழுதியிருக்கிறார்.    

1948-ல் ஒரு ஆண் ஏற்கனவே மணமானவனாக இருந்தாலும், இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் குற்றம் இல்லை.  ஆனால் 1955ல் ஹிந்து திருமணச் சட்டப்படி அது குற்றம்.   சட்ட விரோதம்.  

1948 ஆம் ஆண்டாக இருந்தால் என்ன, 2015 ஆம் ஆண்டாக  இருந்தால் என்ன?  ஆண் பெண் உறவுகளில் ஏற்படும் சலசலப்பு எப்போதும் ஒன்றாக இருக்கும்.

இரண்டு பெண்களுடன் தொடரும் வாழ்க்கையைப் பற்றி இந்த நாவல் விளக்கமாகச் சொல்லிக் கொண்டு போகிறது.  இரண்டு பெண்களுடன் தொடர்பு கொண்ட ஒரு நபர், எப்படி சிக்கல் இல்லாமல் வாழ்க்கையைத் தொடர வேண்டுமென்று நினைக்கிறார் என்பதுதான் கதை.

அலுவல் பொருட்டு அமெரிக்கா செல்லும் ஒருவர், அங்கு கார் சம்பந்தமாக பயிற்சி எடுத்துக் கொள்கிறார்.  அவர் கம்பெனி பொருட்டு அங்கு இரண்டு வருடங்கள் தங்க நேர்கிறது.  அங்கு லட்சுமி என்ற விதவைப் பெண்ணைச் சந்தித்து திருமணம் செய்து கொள்கிறார்.26 வயது நிரம்பிய அவரைப் பார்த்து, லட்சுமிதான் சுயவரம் போல் அவரைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறாள்.  சிறிய வயதில் விதவை ஆன லட்சுமி, தன் அம்மாவிடம் இவரை திருமணம் செய்து கொள்ளப் போவதைத் தெரிவிக்கிறாள்.  இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதோடல்லாமல், ஒரு குழந்தை வேறு இருக்கிறது என்பதை அறிந்தும் லட்சுமி இவர் மீது உள்ள ஈடுபாட்டால் திருமணம் செய்து கொள்கிறாள்.

கொஞ்சம் வசதிபடைத்த லட்சுமி எல்லோரும் சேர்ந்து வாழலாம் என்கிறாள்.  இதை அவர் மனைவியிடமும், அம்மாவிடமும் எப்படி சொல்வது இதுதான் கதை.  அவர்தான் அதைச் சொல்ல வேண்டும், லட்சுமியோ அவள் அம்மாவோ இதைச் சொல்லப் போவதிலலை.

அவர் மனைவி பார்வதியிடமும், அம்மாவிடமும் சொல்வதற்குள் அவர் படுகிற பாட்டை நாவல்  முழுவதும் விவரிக்கிறார்.  ஒரு ஆண் தன் அந்தரகத்தை வெளிப்படையாகச் சொல்ல பெரிதும் விரும்புவதில்லை. 

 அவன் அப்படிச் சொல்வதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியே சிந்திக்கிறான்.  

அவர் அமெரிக்காவில் இருந்தபோது, அவர் மனைவி பார்வதிக்கு கடிதம் எழுதியதில்லை.  அம்மாவுக்குத்தான் எழுதுவார்.  அப்படி எழுதுவதும் போகப்போக குறைந்தும் விடுகிறது. லட்சுமிவை அமெரிக்காவில் திருமணம் செய்துகொண்ட பிறகு இந்த நிலையை எடுத்திருப்பார் என்று தோன்றுகிறது.  

42 அத்தியாயங்கள் இந்த நாவல் எழுதப் பட்டாலும் சுருக்கம் சுருக்கமாக நாவலில் அத்தியாயங்கள் எழுதப் பட்டிருக்கிறது.  இப் புத்தகத்தில் 4வது அத்தியாயம் அரைப் பக்கம்தான்.

அமெரிக்காவிலிருந்து வந்த அவரை அவர் வீட்டிற்கு காரில் அனுப்ப, லட்சுமியின் அம்மா  எடுத்துக்கொள்ளும் அக்கறையை இந்த அத்தியாயம் காட்டுகிறது.

நாவலைப் படிக்க படிக்க ஒவ்வொரு முறையும் இவர் எப்போது தான் செய்துவிட்ட ஒரு தவறை அவர் முதல் மனைவிடமும், அம்மாவிடமும் சொல்லப் போகிறார் என்ற ஆர்வம் எழுந்துகொண்டே இருக்கிறது. அப்படிச் சொல்வதால் ஏற்படும் கலவரத்தை எண்ணியும்  படிப்பவரை யோசிக்க வைக்கிறது.   

லட்சுமி அமெரிக்காவிலிருந்து பாம்பாய் வரப் போவதை அவரிடம் தெரிவிக்கிறாள்.  அவள் வருவதற்குள் வீட்டில் உள்ளவர்களுக்கு தன்னுடைய இரண்டாவது திருமணத்தைச்  சொல்லிவிட வேண்டுமென்று துடிப்பாக இருக்கிறார்.  அதற்கான சரியான சந்தர்ப்பம் அவருக்குக் கிடைக்க வில்லை.  அவர்  எப்போது சொல்லப் போகிறார் என்ற ஆர்வத்தை லட்சுமி, அவள் அம்மாவும் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

அவர் இருப்பது கூட்டுக் குடும்பம்.  கூடவே தம்பியும் அவருடன் இருக்கிறான்.  அவனுக்கு திருமணம் ஆகிறது.  சென்னையில் இருந்து வந்தப் பெண்ணும் அவர்களுடன் இருக்கிறார்கள்.  தன்னுடைய தவறை சொல்வதன் மூலம் ஒருவித கலக்கம் அவருள் ஏற்படாமல் இல்லை.

ஒருமுறை அவர் குடும்பத்தின் உறுப்பினர்களுடன் லட்சுமி அம்மா வீட்டிற்கு அவர் அழைத்துச் செல்கிறார். உரிமையுடன் அவர் அங்கு நடமாடுவதைக் குறித்து அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.  ஆனால் அப்போதுகூட அவர் லட்சுமிவை திருமணம் செய்து கொண்டு விட்டதாக சொல்வதில்லை.

அவர் மனைவி பார்வதியிடம் மட்டும் எப்படியாவது சொல்ல வேண்டுமென்று முடிவெடுக்கிறார்.  அந்த முடிவுடன் அவர் மாமாவைக் கண்டுபிடிககிறார். அவர் மாமாதான் சின்ன வயதில் தன் பெண்ணை யாருடைய சம்மதமும் கேட்காமல் அவருக்குத் திருமணம் செய்து  வைத்தது. பின் அவர் சந்நியாசம் வாங்கிக்கொண்டு போய் விடுகிறார்.  அவர் அம்மாவிற்கு இப்படி சொல்லாமல் திரும்ணம் செய்து விட்டாரே என்ற  வருத்தம் இருந்தாலும், சகோதரனை மீறி எதுவும் செய்ய முடியவில்லை. அப்பாவை இழந்த குடும்பத்திற்கு மாமாதான் வழிகாட்டியாக இருந்திருக்கிறார்,   மாமாவின் விருப்பத்திறகு மீறி எதுவும் செய்ய முடியவில்லை. 

ரிஷிகேஷில் பார்வதி அப்பாவை அதாவது அவருடைய மாமாவாகிய மாமனாரைச் சந்திக்கிறார்.  அவரிடம் அவர் லட்சுமியைப் பற்றி சொல்கிறார்.   பார்வதி தலை குனிந்தபடி கேட்டுக் கொண்டிருக்கிறாள்.  இந்த நாவலில் இப்படித்தான் மனைவியிடம் தன் இரண்டாவது மனைவியைப் பற்றி வெளிப்படுத்துகிறார்.  அதைக் கேட்டு பார்வதி அதிர்ச்சி அடைந்த மாதிரி தெரியப் படுத்தவில்லை.

லட்சுமி இந்தியா வந்தபிறகு, அவருடைய இரண்டாவது குழந்தை இறந்த துக்கத்தை விஜாரிக்க அவள் அம்மாவுடன் வருகிறாள்.  அவர் அம்மாவைப் பார்த்து லட்சுமி நமஸ்கரித்துச் சொல்கிறாள் :  "இனிமேல் உங்கள் சுகதுக்கங்கள், என் சுகதுக்கங்கள்," என்று.

அவர் அம்மா அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுகிறாள்.  நாவல் இத்துடன் முடிந்து விடுகிறது.

ரொம்பவும் நுணுக்கமாக இந்த நாவலை அசோகமித்திரன் எழுதிக்கொண்டு போகிறார்.  பெரிய களேபரம், கலாட்டா எதுவும் இந்த நாவலில் ஏற்படவில்லை.  

இந்த நாவலின் கதாநாயகன் பெயர் என்ன, அவன் எப்படி இருப்பான் என்ற விபரம் எல்லாம் தெரியவில்லை.  அவன் எல்லோரிடமும்ட மிக சொற்பமாகத்தான் பேசுவதாக காணப்படுகிறான்.  படிக்க சுவாரசியமாக இந்த நாவலை சிறப்பாகவே அசோகமித்திரன் எழுதி உள்ளார்


இந்தியா 1948 - அசோகமித்திரன் - நாவல் - 144 பக்கங்கள் - விலை  ரூ.120 - வெளியீடு : நற்றிணை பதிப்பகம், 6/84 மல்லன் பொன்னப்பன் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600 005 -தொலைபேசி : 044 28482818 - மொபைல் : 94861 77208
 
  

Comments