Skip to main content

இரவல் புத்தகங்கள்



ஜெ.பாஸ்கரன் 


நீங்கள் ஒரு புத்தகப் பிரியரா ? ஆம் என்றால் மேலே படியுங்கள் – இல்லை என்றால் மேலே சென்று விடுங்கள் ( அடுத்த போஸ்டுக்கு என்று அர்த்தம்) ! அல்லது பிரியமான டிவி சானலின் முன் அமர்ந்துகொள்ளுங்கள் !

’ நூலின்றி அமையாது உலகு ‘ – இப்புத்தகம் பேராசிரியர் இரா.மோகன் தொகுத்துள்ள, ’புத்தகம்’ பற்றிய கட்டுரைகள். புத்தக விரும்பிகள் அவசியம் வாங்கிப் படிக்கவேண்டிய புத்தகம் (வானதி பதிப்பகம்)!

‘ புத்தகம் வாங்கிப் படிப்பது ‘ என்பதில்  ‘ விலை கொடுத்து ‘ அல்லது ’இரவல்’ என, இரு நிலைகள் மறைந்திருப்பதை அறிக ! சொந்தப் புத்தகத்தைச் சிறிது சோம்பலாய், அலமாரியில் வைத்துப் பிறகு மெத்தனமாய் வாசிக்கலாம். இரவல் புத்தகம் சிறிது அவசரமாய்ப் படிக்க வேண்டியிருக்கும் – இது திருப்பிக் கொடுக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டும் ! – கொஞ்சம் டென்ஷன் !

புத்தகம் படிப்பவர்கள் பல ரகம் ! விரும்பிய புத்தகங்களைப் புதியதாய் வாங்கிப் படிப்பவர்கள், வாங்கியவர்களிடம்  இரவல் வாங்கி விரும்பிப் படிப்பவர்கள், லைப்ரரியில் அமர்ந்து படிப்பவர்கள் ( நேரம் அவர்கள் வசத்தில் இருப்பவர்கள் மட்டும்!), சர்குலேஷன் லைப்ரரியில் புத்தகம் வாங்கிப் படிப்பவர்கள் (லெண்டிங் லைப்ரரிகள் இன்னும் உள்ளனவா ?), பழைய புத்தகக் கடையில் தேடிப் புத்தகங்கள் படிப்பவர்கள் ( மூர் மார்கெட் முடங்கிய போது மூச்சு முட்ட வருந்தியவர்கள் இவர்கள்), புத்தகக் கடையில் புத்தகம் வாங்குவதுபோல், பல புத்தகங்களை மேய்பவர்கள் என புத்தக விரும்பிகள் எங்கும் உள்ளனர் !

மணிவிழா மலர்கள், கோயில் கும்பாபிஷேக மலர்கள், பக்தி மஞ்சரி / திரட்டு, விளம்பரங்களால் நிரப்பப் பட்டு, ஓரிரு வியாசங்களுடன் வெளிவரும் சாவனீர்கள் – இவை பரிசாகக் கிடைத்தாலும், யாராவது படிக்கிறார்களா என்று தெரியவில்லை !  

மனிதர்களைப் போலவே, புத்தகங்களுக்கும் பல முகங்கள் உண்டு !
சில புத்தகங்கள் ஒரு முறை படிக்கத்தக்கவை – சில பாதியிலேயே மூடி வைக்கத் தூண்டுபவை!

சில திரும்பத் திரும்ப படிக்க வைப்பவை – புதிய சிந்தனைகளைக் கிளறுபவை.

சில நம் வாழ்நாள் முழுவதும் அவ்வப்போது படித்து ரசிக்கத்தக்கவை !
புத்தகங்களை இரவல் வாங்குவது எல்லோருக்கும் பிடிக்கும் – திருப்பிக் கொடுக்கும்போது மனம் சிறிது சிரமப்படும் !

கொடுத்த புத்தகங்கள் திரும்பி வராத நிலையில், யாரிடம் கொடுத்தோம் என்பதும் மறந்து தொலைக்க, ‘ கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன் ‘ மன நிலைதான் புத்தக தானப் பிரபுவுக்கு !

டாக்டர் மோனிகா ஃபெல்டன் (14 வருடங்கள் இந்தியாவில் தங்கி, புத்தகங்கள் எழுதியவர்),  இராஜாஜி அவர்களைப் பேட்டி கண்டபோது, புத்தகம் ஒன்றை இரவலாய்க் கேட்க, அவர் மறுத்திருக்கிறார் ! இரவல் சென்ற புத்தகங்கள் திரும்புவதில்லை என்பது அவரது எண்ணம் ! அதற்கு அவர் கூறிய ஒரு நிகழ்ச்சி:

கேம்ப்ரிஜ் பேராசிரியர் ஒருவர் தன் அழகிய நூலகத்தைக் காண்பித்து, ‘ நான் யாருக்கும் நூல்களை இரவல் தருவதில்லை; ஏனெனில், அவை திரும்பக் கிடைப்பதில்லை ‘ என்றாராம். உடனிருந்தவர்கள் உடனே, ‘ இரவலே கொடுக்காதபோது, எப்படி அவை திரும்பாது என்று நீங்கள் நிச்சயமாகக் கூறுகிறீர்கள் ? ‘என்று கேட்டார்களாம். அதற்கு சிரித்துக்கொண்டே பேராசிரியர், தன் நூலகத்தில் அழகாக அடுக்கி வைக்கப் பட்டிருந்த புத்தகங்களைக் காண்பித்து, ‘ இங்கு சேர்ந்துள்ள இந்தப் புத்தகங்களே அதற்குச் சாட்சி ‘ என்றாராம் !

டாக்டர் மோனிகாவும், இராஜாஜியிடம் வாங்கிய இரண்டு புத்தகங்கள், திருப்பிக் கொடுக்கப் படாமல், தன்னுடனேயே தங்கி விட்டதை, கட்டுரையின் கடைசீச் செய்தியாகக் குறிப்பிடுகிறார் !

இரவல் வாங்கிப் படிப்போர் கவனத்திற்கு் சில குறிப்புகள்:

·         இரவல் என்பதும் பரிசு என்பதும் ஒன்றல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள் – குறித்த நேரத்தில் திருப்பிக் கொடுங்கள் !

·         பிறர் புத்தகத்தில் காபி, வடை,பஜ்ஜி எண்ணை, தண்ணீர் கரைகள் படுவதைத் தவிருங்கள் – உங்கள் புத்தகத்துக்கும் இதே விதிதான் !

·         பாதியில் படித்த பக்கத்துக்கு ‘புக் மார்க்’ வையுங்கள் – பக்கத்தின் மூலையை நாய்க் காது போல் மடிக்காதீர்கள் – அது உங்கள் புத்தகமாகவே இருந்தாலும் !

·         படுத்துக்கொண்டு படிக்க வசதியாக, புத்தகத்தை முழுதுமாகப் பிரித்து, அதன் முதுகை உடைத்து விடாதீர்கள் – மீண்டும் பைண்டு செய்ய வைத்து விடாதீர்கள்.

·         பிறர் புத்தகத்தில் அடிக்கோடிடுதல், மார்ஜினில் குறிப்புகள் எழுதுதல் போன்றவைகளைச் செய்யாதீர்கள். 

·         இரவல் வாங்கிய புத்தகத்தைப் பிறருக்கு இரவல் கொடுத்து, புதியதாக ஒரு சர்குலேஷன் லைப்ரரி தொடங்கி விடாதீர்கள் !

  “ புஸ்தகம் வனிதா விந்தம் பரஹஸ்தகதம் கதம் 1
   அதவா புனராகச்சே ஜ்ஜீர்ணம் ப்ரஷ்டாச கண்டச: 11

 ஒருவனுடைய புத்தகமும், ஸ்திரீயும், பணமும் பிறர் கையில் அகப்பட்டால், போனதேயாம். ஒருவேளை திரும்பி வந்தாலும், முழுமையாக வருவது சந்தேகமே என்கிறது நீதி சாஸ்திரம் !

திரு வலம்புரி ஜான் அவர்கள் தன் லைப்ரரி வாசலில் எழுதி வைத்திருந்த வாசகம் எல்லோர் கவனத்துக்கும் உரியது. “ இங்கு உள்ளவை அனைத்தும் என் குழந்தைகள் – கவனமாகக் கையாளவும் ! “
உண்மைதானே !




Comments